பாடிபில்டிங் துறையில் எப்போதும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள், ஒருவேளை மற்ற விளையாட்டுகளைப் போலவே, பெண் பாடிபில்டர்களும் எப்போதும் ஆண்களின் நிழலிலே உள்ளனர். அப்புறம், வளரும் பெண் பாடிபில்டர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழலும் கட்டமைப்பும் இந்தியாவில் இல்லை. ஆனாலும் ஆங்காங்கே பெண்களுக்கான ஜிம் திறக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.அப்போ, பெண்களுக்கான ஜிம்மில் நடப்பது என்ன? என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை, பழைய வண்ணார்பேட்டைப் பகுதியில் ‘ஃபிட்னஸ் ஃபர்ஸ்ட் ஸ்டுடியோ (Fitness First Studio) என்ற பெயரில் பெண்களுக்கான ஜிம் நடத்தி வருகிறார் திருமதி. ஜெயலட்சுமி. அவரை ஒரு மாலைவேளையில் சந்தித்து உரையாடியபோது…
“ நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே வடசென்னைதான். அப்பா ஹரிகிருஷ்ணன், அம்மா மல்லிகா. அப்பா ஸ்போர்ட்ஸ் மேன் என்பதால், எனக்கும் விளையாட்டுத்துறையில் மிகப் பெரிய ஆர்வம் இருந்தது. பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். டிரையத்லான் போட்டியில் இந்திய அளவில் மூன்றாவது இடம் வந்திருக்கிறேன். இந்த விளையாட்டை தமிழில் நெடுமுப்போட்டி என்பார்கள். உடல் திறன், ஆற்றல் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்பதை நிர்ணயிக்கும் போட்டிதான் டிரையத்லான். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுகள் அடங்கியப் பன்முனை விளையாட்டுப் போட்டியாகும். அதாவது, இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் நீச்சல்,
மிதிவண்டி, ஓட்டம் என்று ஒரு போட்டியிலிருந்து இன்னொரு போட்டிக்கு மாற வேண்டும்.
இந்த விளையாட்டுகள் நீர், நிலம், காற்றுடன் தொடர்புடையவை. இப்படி விளையாட்டில் அதீத ஆர்வம் இருந்தாலும், என் அப்பாவின் மரணத்திற்குப் பின்பு என்னால் விளையாட்டில் தொடர முடியவில்லை. சரி விளையாட்டு தொடர்பாக ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சுற்றி திரிந்தபோது, அபிநயா ஜிம்மில் வேலை கிடைத்தது.
ஜிம்மில் என்னுடைய வேலை என்னவென்றால், உடற்பயிற்சி வருபவர்களை மனரீதியாக தயார்படுத்துவதற்கான ஆலோசனையும், எந்தெந்தக் கருவிகளை பயன்படுத்தினால் அவர்களுக்கான எடை குறையும் அல்லது உடல்சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்று சொல்வதுதான். அந்த ஜிம்மில் சில ஆண்டுகள் பணிசெய்த பின்பு என் வீட்டருகே ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து கடந்த ஏழு ஆண்டுகளாக சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்திக் கொண்டிருக்கிறேன். என் கணவர் சுந்தரவேல் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்” என்றவரிடம், பெண்கள் ஜிம்மிற்கு எதற்காக வருகிறார்கள்? என்ற கேள்வியைக் கேட்டபோது….
“ உங்கள் கேள்வி புரிகிறது. என்னிடம் உடற்பயிற்சிக்கு வரும் பெண்கள் சிலர் உடல்நலம் சார்ந்த, மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே வருகின்றனர். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வருபவர்கள் எண்ணிக்கையும் உண்டு ஆனால் தாடர்ச்சியாக வருவதில்லை. இன்றைய குடும்பப் பெண்கள் பலருக்கு 40 வயதிற்குமேல் மனஅழுத்தம், இடுப்பு வலி, கழுத்து வலி மூட்டு வலி என அவதிப்படுகின்றனர். ஒரு சிலர் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். விவரம் தெரிந்தவர்கள் உடற்பயிற்சிக்கு வந்து சரிசெய்துகொள்கிறார்கள்.
என்னுடைய ஜிம்மிற்கு மூட்டுவலி மற்றும் பி.சி.ஓ.டி பிரச்சனை உள்ளவர்கள் வருகின்றனர்.
பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’க்கு பெயர்தான் பி.சி.ஓ.டி . இன்று பெரும்பான்மை பெண்களின் பிரச்சனையாக இருக்கிறது. முறை தவறிய மாதவிலக்கு, முகமெல்லாம் ரோம வளர்ச்சி, பயமுறுத்தும் பருமன், குழந்தையின்மை இப்படிப் பல பிரச்சனைகளின் பின்னணியிலும்
பிசிஓடி’யைக் காரணம் காட்டுகிறார்கள் மருத்துவர்கள். சினைப்பைகளின் செயல் திறனில் பிரச்சனை ஏற்படுவதைத்தான் `பாசிஸ்டிக் ஓவரிஸ்’ என்கிறார்கள். அதாவது சினைப்பைகளை இயங்கச்செய்கிற ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம். சினைப்பையில் குட்டிக்குட்டி கொப்புளங்கள் போன்று நீர் கட்டிகள் இருக்கும். இந்தக் நீர்க்கட்டிகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. சரியான உடற்பயிற்சி செய்தால் போதும். என்னிடம் உடற்பயிற்சிக்கு வந்த பல பெண்களுக்கு அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். சிலருக்கு குழந்தையின்மை பிரச்சனை தீர்ந்திருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் முதல் செய்தியை என்னிடம் சொல்லி மகிழ்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இதே மாதிரிதான் மூட்டு வலி பிரச்சனைக்கும் சரியான உடற்பயிற்சி செய்தால் அந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
இன்னொரு செய்தியையும் சொல்லி ஆக வேண்டும் ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண் என்னிடம் வந்து முதுகிற்கு கீழ் மற்றும் இடுப்பு பகுதிக்கு மேல் பகுதியில் அதீதமாக வலிக்கிறது. பெல்ட் போட்டுதான் வாகனங்களில் செல்ல முடிகிறது என்று சொன்னார். அவருக்கு சில உடற்பயிற்சியை சொல்லிக்கொடுத்தேன். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வந்தார். இப்போது பெல்ட் போடாமல் வண்டியில் செல்ல முடிகிறது என்று உற்சாகமாக சொல்லி செல்கிறார். அதை கேட்கும்போது ஒரு மருத்துவரைபோல் நான் உணர்கிறேன். மருத்துவர் என்று சொல்வதற்கு காரணம் என்னுடைய இளம் பிராயத்தில் மருத்துவர் படிக்கவேண்டும் என்று விரும்பினேன். அதற்கான மதிப்பெண் என்னிடம் இருந்தது. ஆனால், வசதிகள் மற்றும் சூழல் அமையவில்லை. இருந்தாலும் அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக அக்குபஞ்சர் மருத்துவம் படித்து சான்றிதழ் பெற்றிருக்கிறேன்.” என்றவரிடம், இளம் பெண்கள் ஜிம்மிற்கு வருவதில்லையா? என்றபோது…
இளம்பெண்கள் ஜிம்மிற்கு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் திருமணம் செய்துகொள்வதற்கான உடல்எடை குறைப்பதற்கும், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் வருகின்றனர்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் ‘யோகா’ வகுப்பு வேண்டும் என்றுதான் கேட்டு வருவார்கள். அவர்களை யோகாவும் செய்யச்சொல்வோம். கூடுதலாக சில உடற்பயிற்சிகளையும் செய்யச் சொல்வேன். அந்தப் பயிற்சிக்குப் பின் முகமே மலர்ச்சியாகிவிடும். ஒரு பெண் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக வந்தார். அது அவர் முகத்திலேயே தெரிந்தது. ஆம்… அவர் கண்களில் அவ்வளவு டெப்த்தான கருவளையம். தூங்கியே பல மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இலகுவான உடற்பயிற்சி கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து இப்போ நன்றாக தூக்கம் வருகிறதா? என்று கேட்டேன். எப்படி மேடம் கண்டுபுடிச்சீங்க? என்றார். சில உடற்பயிற்சிகள் செய்தால் கண்டிப்பாக மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
நாங்கள் உளவியல் மற்றும் பிஷிக்கல் பயிற்சிகள் மட்டுமே சொல்லிக்கொடுக்கிறோம். உணவுகளைப் பொறுத்தவரை டயட் இருக்க சொல்லி அறிவுறுத்துவதில்லை. பேலன்ஸ்டு டயட் மட்டுமே பின்பற்றச் சொல்கிறோம். இன்று பிரியாணி அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அதற்கேற்ப சில உடற்பயிற்சிகள் செய்தால் பேலன்ஸ் ஆகிவிடும். அப்புறம், ஜிம்மில் இருந்து அவுட்டோர் அழைத்துச் செல்கிறோம். அவுட்டோரில் பல ‘கேம்‘ விளையாடி மனம் மற்றும் உடலை நலப்படுத்துகிறோம்.” என்கிறார் திருமதி. ஜெயலட்சுமி (095008 45121)