பொதுவாக, மழைக்காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்வது சவாலான ஒன்று. வைரல் காய்ச்சல், சளி, இருமல் என அவர்களின் ஆரோக்கியத்தை எளிதாக பாதிக்கும். ஆனால், பொதுவாக இத்தகைய தொற்றில் இருந்து நாம் முன் எச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால், குழந்தைகளுக்கு பொதுவாக பாதிக்கும் ஒன்று, ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி. நம் குழந்தைகளுக்கு எத்தகைய அலர்ஜி ஏற்படும், அதை கையாள்வது எப்படி என்று சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் விளக்குகிறார்.
“ஆறு மாதம் முதல் எட்டு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி, பெரும்பாலும் தோலில் அறிகுறியாக தெரியும். அதற்கு அடுத்து, மூக்கில் சளி அல்லது நீர் வருவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இது பெரும்பாலும் ஆஸ்துமா, வீஸிங் போன்றவை ஏற்படுவதற்கான அறிகுறியே”, என்கிறார் மருத்துவர். ஆனால், குழந்தைகளுக்கு வீஸிங், சளி, இருமல் போன்றவை ஐந்து வயதிற்கு பிறகு இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி மூலம் சரியாகிவிடும் என்று அவர் கூறுகிறார்.
உணவு மூலம் ஏற்படும் அலர்ஜியை எப்படி சமாளிப்பது?
“நம் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு மீன், இறால் போன்ற கடல்சார் உணவுகள், சிக்கன், நட்ஸ், சில குழந்தைகளுக்கு தேங்காய் போன்ற உணவுகளால் அலர்ஜி ஏற்படும்,” என்று கூறுகிறார் மருத்துவர்.
ஆனால், இதிலுள்ள சவாலான ஒன்று, குழந்தைகளுக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமையை உடனே கண்டறிய முடியாது. “சான்றாக, உணவு அலர்ஜி காரணமாக, ஒரு முறை வாந்தி அல்லது அரிப்பு போன்றவை ஏற்பட்டால், அதற்கு 12 மணி நேரத்திற்கு முன், அவர்கள் என்ன சாப்பிட்டார்கள், என்ன உடை அணிந்தார்கள், எங்கு சென்றார்கள் என்ற விவரங்கள் தேவை. இதே போன்ற விவரங்களை, இந்த அறிகுறிகள் இரண்டு, மூன்று முறை ஏற்படும்போதும் கவனிக்க வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு எந்த உணவு அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் அல்லது மருந்துவ பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம்,” என்கிறார்.
மேலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு 9 அல்லது 10 மாதம் இருக்கும் போது பழக்கப்படுத்தினால், அதற்கு ஏற்படும் ஒவ்வாமை அளவு குறைவு என்று சில ஆய்வுகள் கூறுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட உணவு அலர்ஜி ஏற்படுத்தும்போது அதனை கொஞ்சம் கொஞ்சம் பழக்கப்படுத்தலாம்.
அலர்ஜி ஏற்படும் உணவை சிறிது சிறிதாக பழக்கப்படுத்தலாமா?
இதுபற்றிய கேள்விக்கு “ஆமாம். அதன் desensitization என்கிறோம். அதாவது, சிறிது சிறிதாக அந்த உணவுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்தும் முறை. ஆனால், இதனை மிகவும் கவனமாக முறையான மருத்துவ கண்காணிப்பில் செய்ய வேண்டும். இல்லையெனில், குழந்தைகளுக்கு அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். அதனால், இந்த முறையை இந்தியாவில் அதிகம் பின்பற்றுவதில்லை. பெரும்பாலும், ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது,” என்கிறார். அது மட்டுமல்லாமல், “இளம் வயதிலேயே குழந்தைகள் பல்வேறு சுற்றுச்சூழலுக்கு பழக்கப்படுவதன் மூலம், அவர்களின் உடலுக்கு பல்வேறு சூழலை எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். இதன்மூலம், அவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதற்காக வாய்ப்பு குறையும்“ என்கிறார். மேலும், இது போன்ற அலர்ஜி ஏற்படுவதை தவிர்க்க சிறந்த வழி, குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பதே. இதன்மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புசக்தி, அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்“ என்கிறார் மருந்துவர் உதயகுமார்.
– எம்.பவளக்கொடி