வெந்து தனிந்தது காடு திரை விமர்சனம்
நடிகர்கள்: சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் மற்றும் பல மலையாள நடிகர்கள்
இசை : ஏ.ஆர். ரகுமான்.
இயக்கம் : கவுதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு : ஐசரி கே. கணேஷ்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகில் உள்ள கிராமத்தில் நாயகன் உடங்காடு(முட்காடு) பகுதியில் முள்வெட்டும் வேலை செய்கிறார். அப்போது, திடீரென அந்தக்காடு தீப்பற்றிக்கொள்கிறது. அதில் இருந்து அவர் தப்புகிறார். அந்த வேதனையை தாங்க முடியாத அவருடைய அம்மா (ராதிகா சரத்குமார்), மகனை மும்பைக்கு அனுப்ப முடிவெடுக்கிறார். அருகில் உள்ள இன்னொரு கிராமத்தில் இருக்கும் மும்பை வாசியிடம் தன் மகனையும் அழைத்துச் செல்லுமாறு கெஞ்சுகிறார். அவரும் ஒத்துக்கொள்கிறார்.
ஆனால், அன்று இரவு அவர் தூக்கில் தொங்கி இறந்து விடுகிறார். அதற்கு முன்பு கதாநாயகனிடம் ஒரு கடிதம் கொடுத்து அதை மும்பையில் தன்னுடன் வேலை பார்த்தவர்களிடம் கொடுக்கச் சொல்கிறார். அந்தக் கடிதத்தை கொடுக்க மும்பை பயணிக்கிறார் நாயகன். மும்பையில் கடிதத்தை கொடுத்தாரா? அதற்குபிறகு நாயகன் அங்கு என்ன வேலை செய்கிறார்? என்பதுதான் மீதிக்கதை.
ஒரு வேலை இல்லாத இளைஞனாக புதுமையான கெட்டப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு திருநெல்வேலி பாஷைதான் நாக்கில் நுழைய மறுக்கிறது. மற்றபடி மூன்று கெட்டப்பிலும் அசத்தியிருக்கிறார். அவருடைய காதலியாக வரும் சித்தி இத்னானி அந்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், இடைவேளைக்குப் பின்புதான் திரையில் பார்க்க முடிகிறது. இசக்கி கடை உரிமையாளர், புரோட்டாக்கடையில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் முடிதிருத்தும் கடையில் வேலை பார்ப்பவர்கள் என பலரும் நன்றாகவே உள்வாங்கி நடித்திருக்கின்றனர். குறிப்பாக, நாயகனை கொல்ல வரும் அந்த குள்ளஅப்பு மனிதன் வில்லதனத்தில் கொடிகட்டி பறக்கிறார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கம் செய்திருக்கிறார். அவருடைய வழக்கமான பாணியில் இயக்கியிருக்கிறார். காதல் காட்சிகளில் இளமை ஊச்சலாடுகிறது. மும்பையில் இன்னொரு வெர்ஷன் டானை கண் முன் நிறுத்துகிறார். முதல் பாதியில் அதிகமாக கதை சொன்னதால் இரண்டாம் பாதியை இழுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியதில் செலுத்திய கவனம், திரைக்கதையயில் செலுத்தியிருந்தால் இந்தப்படம் சிறப்பாக பேசப்பட்டிருக்கும்.
இசை ஏ.ஆர். ரகுமான் மூன்று முத்தான பாடல்களை கொடுத்திருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை ரகம். உன்ன நினைச்சேன், மல்லிகைப்பூ பாடல்கள் மெட்டு சூப்பரோ சூப்பர். ஒளிப்பதிவு பணியை சித்தார்த்தா நுனி செய்திருக்கிறார். மும்பையில் இரவு காட்சிகளை அழகாக கொடுத்திருக்கிறார். சிம்புவிற்கு இது வித்தியாசமான படம்.