நடிகர்கள் : தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ்,சாய்குமார், நரேன்
இயக்கம் : வெங்கி அட்லூரி
ஒளிப்பதிவு : யுவராஜ்
இசை : ஜி.வி. பிரகாஷ்
தனியார் பள்ளிகள் ஒன்றினைந்த சங்கத்தின் தலைவராக வரும் சமுத்திரக்கனி, மக்களிடையே தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் கல்வி வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார். இதனால், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தனியார் பள்ளிகளில் தங்கள் பசங்களை சேர்க்க முடியாமல் தவிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் வரும் என்ற எண்ணத்தில், தன்னை நல்லவர் போல் காட்டிக் கொள்வதற்காக சில அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளே தத்தெடுத்து இயக்கும் என அறிவிக்கிறார். அப்படி தத்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்து அரசு பள்ளிக்கு தனுஷை வாத்தியாராக நியமிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷே சமுத்திரக்கனிக்கு எதிராக திரும்ப, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக மெனக்கிடும் தனுஷிற்கு மற்றுமொரு புதிய கதாபாத்திரமாக இந்த ஆசிரியர் கதாபாத்திரம் அமைந்துள்ளது. தன் நடை, உடை, பாவனை என அனைத்தையும் ஒரு இளம் ஆசிரியர் போலவே மாற்றி திரையில் கெத்துக்காட்டுகிறார். காதல், ஆக்க்ஷன், சென்டிமென்ட் என, அனைத்திலும் தன் இயல்பான நடிப்பின் மூலம் ஈர்க்கிறார். இவருடைய கதாபாத்திரம் உறுதியாக சில தவறான ஆசிரியர்களை மாற்றம் செய்யலாம் என நம்புவோம்.
பணக்கார வில்லனாக கோட் சூட், கூலிங் கிளாஸ், ஷூ, ஆடம்பரமான கார் என வழக்கமான வில்லன் சாயல்.. வித்தியாசமாக செய்வதற்கு எதுவும் இல்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கான வில்லத்தனத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சமுத்திரக்கனி. அவரின் கதாபாத்திரம் மூலம் இன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் உண்மை நிலையை தோலுரிக்கும் விதமாக அவரது நடிப்பு அமைந்திருக்கிறது. உண்மையிலேயே பாராட்டலாம்.
நாயகியாக வரும் சம்யுக்தாக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த ஒரு சில காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் சாய்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு ஆகியோர் தங்களுக்குரிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். படத்திற்கு மற்றுமொரு பெரிய பலமாக அமைந்திருப்பது ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை. காட்சிகளுக்கு ஏற்றார் போல மென்மையாகவும், ஆக்ரோஷமாகவும் தன் பின்னணி இசையின் மூலம் கதையோடு நம்மை ஒன்றவைக்கிறார்.
இயக்குநர் வெங்கி, இன்றைய தலைமுறையினர் ரசிக்கும்படி அழகாக அமைத்திருக்கிறார். ஒரு நல்ல ஆசிரியரால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற கருத்தை அழுத்தி சொல்லி இருக்கும் விதம் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற சமூக கருத்தை தனுஷ் போன்ற பெரிய நடிகர்கள் மூலம் வெளிப்படுத்தினால் அது மக்களை எளிதாக சென்றடையும் என இவர் யோசித்திருக்கும் விதம் சிறப்பு. அதே நேரத்தில் சாட்டை படம் நினைவுக்கு வந்தததையும் தவிர்க்க முடியவில்லை. படத்தின் ஒளிப்பதிவாளர்களான தினேஷ் மற்றும் யுவராஜ் படத்தின் தன்மை கேற்ப காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.