நடிகர்கள் : எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன்
இயக்குனர் : ராதாமோகன்
இசை : யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு : ஏச்சல் மூவிஸ்
ஜவுளிக் கடைகளுக்கு பொம்மைகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் பெயிண்டிங் வேலை செய்கிறார் ராஜகுமாரன் (எஸ்.ஜே.சூர்யா). அப்படி ஒரு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, கன்னத்தில் திர்ஸ்டி மச்சத்துடன் ஒரு அழகான பொம்மை இவருடைய டேபிளுக்கு வருகிறது. அதைப் பார்த்ததும் ஷாக்காகிறார். அந்தப் பொம்மை தன்னுடைய சின்ன வயதில் தொலைந்த தன்னுடைய தோழியை நந்தினி (பிரியா பவானி சங்கர்) போலவே இருக்கிறது. அந்த பொம்மையை தன் தோழியாக நினைத்து பழகுகிறார். ஒரு நாள் அவர் வெளியூர் சென்றபோது, அந்த பொம்மையை பாக்டரி மேனேஜர் சேல்ஸ்க்கு அனுப்பி விடுகிறார். தன்னுடைய காதலியாக நினைத்துப் பழகும் பொம்மை சேல்ஸ்க்கு அனுப்பிய மேனேஜரை கொன்று விடுகிறார். அதன் பின்பு என்ன நடக்கிறது என்பதை உளவியல் கோணத்தில் நாடக பாணியில் சொல்லியிருக்கிறார்.
நடிப்பை பொறுத்தவரை நாயகன் எஸ் ஜே சூர்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த நடிப்பு அவருக்கு புதுசு அல்ல. ஆனாலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக பொம்மையை பெண்ணாக நினைத்து பேசும்போது அவர் புருவம் உயர்த்தி பேசும் அந்த நடிப்பு சூப்பர். நடிப்பின் உச்சம் என்று சொல்லலாம். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் பொம்மையாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டர். அச்சு அசலாக அப்படியே பொருந்திப் போகிறார். பல இடங்களில் உண்மையான பொம்மை மாதிரியே இருக்கிறார்.அப்பப்போ செல்ல கோபமாக பேசும்போது அவ்வளவு அழகாக இருக்கிறார். பொருத்தமான தேர்வு என்று சொல்லலாம். சாந்தினி தமிழரசன் வந்து போகிறார். ஆனாலும் ஒரு ஒரத்தில் மனதில் இடம் பிடிக்கிறார்.
படத்தின் முதுகெலும்பே இசைதான். பாடலும் சரி… பின்னணி இசையும் சரி வார்த்தது எடுத்திருக்கிறார். அதிலும் ம் ஹும்…ஓ ஹோ…..தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும் ம் ஹும்…ஓ ஹோ…. இந்தப் பாடல் வரிகளை வெவ்வேறு சீன்களில் வேறு வேறு ராகங்களில் பின்னணி இசை அமைத்து படத்தை உச்சத்துக்கொண்டு செல்கிறார். படம் விட்டு வெளிவரும் போது கூட அந்த பாடல் ஒலித்துக்கொண்டு இருப்பது மாதிரியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறார். ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன் நிறைவான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவருடைய ஒளிப்பதிவு அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. அப்புறம் முக்கியமாக சொல்ல வேண்டியது இயக்குனர் ராதாமோகன். இவர் பல படங்கள் இயக்கியிருந்தாலும், இந்தப் படத்தில் தன்னுடைய இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் காமெடி சேர்த்திருந்தால் படம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். ஒட்டுமொத்தத்தில் ஒரு உண்மைக் காதலை பொம்மை காதலாக சொன்ன விதத்தில் பாராட்டுக்கள்.