வாணியம்பாடியிலுள்ள டிவிகேவி அரசு நிதி உதவி உயர்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி பூஜாஸ்ரீ. இவர் 5 ம் வகுப்பு படிக்கும்போது மாணவியின் தலைமை ஆசிரியர் திருமதி S.J. சூரியகாந்தி அவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விழிப்புணர்வு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி ஆசிரியர் திருமதி N.கீதா அவர்கள் மாணவர்களை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக நாம் எதைப் பயன்படுத்தலாம் என்பதை கொண்டு வரும்படி மாணவர்களை அறிவுறுத்தியிருந்தார். அதில் இவர் கொண்டு சென்ற சிலவற்றில் தேங்காய் நார் கொண்டு பாத்திரம் துலக்கும் பொருள், மிகுந்த பாராட்டை பெற்றதுடன் அதனைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கலாம் என்றனர்.
பூஜாஸ்ரீயின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் பயன்பாட்டிற்காக பாத்திரம் துலக்க/ உடம்பு தேய்க்க தேங்காய் நார் வடிவமைத்து தயாரித்து வருகின்றனர். இவரின் பெரியப்பா சு.வெங்கடாசலம் சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு பொன்மொழிகளுடன் மறுபடியும் பயன்படுத்தக் கூடிய கவரில் வைத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அரசு அமைப்புசாரா விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள், பெட்டிக்கடைகள் என வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், வேலூர், சென்னை, ஈரோடு, பாலக்காடு, குப்பம், விசாகப்பட்டினம், நெய்வேலி, மதுரை, பெரியகுளம் போன்ற இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஊக்கத்தினாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் உதவியாலும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தது. கரோனா காலத்தைப் பயன்படுத்தி காலியாக இருந்த இடத்தில் வீட்டுத்தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் காய்கனிகளை பயிரிட்டு விற்பனை செய்து மற்றவர்களுக்கு முன் சான்றாக பூஜாஸ்ரீ இருக்கிறார். மண்கலை பொருட்கள் செய்வது மற்றும் யோகா ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தன் வீட்டின் வெளியே ஒரு தகவல் பலகையில் தினமும் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கான பொன்மொழிகள் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறாள்.