உலகத்தில் பல விதமான பரிணாமங்களை ஒரு பெண் அடைகிறாள். ஒரு தாயாய், மகளாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சகோதரியாக, தோழியாக காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் எத்தனை. உடல் உறுதி கொண்டு இருக்கும் ஆண்களை விட மனவுறுதி அதிகம் உள்ள பெண்கள் எப்போதும் சிறப்பானவர்கள் தான். சவால்களை தகர்த்து, சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும், உயர்வான எண்ணம் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பூ மகள்கள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர்தான் திருமதி அம்பிகா நவநீதன். இவர், மேற்கு மாம்பலத்தில் வசிக்கிறார். அவரை நேரடியாக சந்தித்து உரையாடியபோது…
“ எனக்கு விவரம் தெரிந்த வயசில் இருந்தே சேவை செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. தொடக்க காலத்தில் தனி ஆளாக யாருக்காவது செய்வோம். அதன்பின் ‘சில்வர் குரூப்’ என்ற பெயரில் ஒரு குழு உருவாக்கினோம். அந்தக் குழுவின் சார்பாக முதியோர் இல்லங்களுக்கு நேரடியாக சென்று உதவுதல், சில பள்ளிகளில் படிக்கும் வறுமைக் குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் ஸ்டேசனரி பொருட்கள் வாங்கி தருதல் என பல உதவிகளை செய்து வருகிறோம்.
நம் முதியோர்களின் அவல நிலையைக் காண நாம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது முதியோர் இல்லங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். நாம் எதைச் சாப்பிட்டாலும், அவர்கள் விரும்புவது அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நாம் அவர்களுடன் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் மால்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் சமூகத்தில் தனிமையாக இருக்கக் கூடாது. கடவுள் ஒருவருக்கு ஒருவர் உதவுவதற்காகவே சமுதாயத்தை படைத்துள்ளார் ஆனால் எந்த ஒரு வலியையும் கொடுக்க அல்ல.
முதியோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புபவர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு, அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்க வேண்டும். விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில், மக்கள் இந்த மையங்களுக்குச் சென்று, ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் ஒரு இரவையாவது அவர்களுடன் கழிக்க, இந்த முதியவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த மாதிரி முதியோர்களுக்கு சில உள் மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் இருக்க வேண்டும். நூலகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வழங்கப்பட வேண்டும், இதனால் அவர்கள் தங்கள் நேரத்தை எளிதாக செலவிடலாம். சில திரைப்படங்கள் அல்லது மற்ற ஆவணப்படங்களைப் பார்க்க சில மினி தியேட்டர்கள் இருக்க வேண்டும். அவர்கள் பிஸியாக இருக்க சில வேலைகள் கொடுக்கலாம். இவை அனைத்தும் என் சேவையின் கனவுகள். ஒவ்வொன்றாக செய்து வருகிறேன்.
கொரோனா காலத்திற்கு முன்பு நானும் ‘விஸ்வரூபா’ என்ற பெயரில் ஏற்றுமதி தொழில் செய்துகொண்டிருந்தேன். கொரோனா காலத்திற்குப் பின்பு தொழிலில் பின்னடவைவு ஏற்பட்டது. அதனால், அந்தத் தொழிலை அப்படியே நிறுத்திவிட்டேன். அண்மையில் கூட பல இலட்சம் மதிப்பிலான தொகையில் ஆர்டர் கிடைத்தது. ஆனால், அவ்வளவு முதலீடு செய்வது சிரமமாக இருந்தது.
அதனால், அந்தத் தொழிலை அப்படியே விட்டு விட்டேன். இப்போது, அதே தொழிலை தொடங்கலாம் என்ற ஒரு எண்ணோட்டமும் இருக்கிறது. இவை தவிர, தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களிலிருந்து காய்கனிகளை கொள்முதல் செய்து, இங்குள்ள காய்கனி கடைகளுக்கு கோயம்பேடு சந்தை விலைக்கு கொடுக்கலாம் என்ற சிந்தனையும் இருக்கிறது. இந்தத் தொழில் இன்னும் சில வாரங்களில் தொடங்கிவிடும்.
அடுத்ததாக, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ‘திரு.வி.க பேச்சுப் பயிலரங்கம்‘ என்று அமைப்பின் தியாகராய நகர், பனகல் பூங்கா நெறியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். ‘திரு.வி.க பேச்சுப் பயிலரங்கம்‘ பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன். இந்த அமைப்பை அமைந்தகரை திரு.வி.க பூங்காவில், திருக்குறள் தாமோதரன் அவர்களால் நிறுவப்பட்டது. இந்தப் பயிலரங்கம் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சென்னை முழுவதும் பல பூங்காக்களில் அதன் கிளை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிளைக்கும் ஒன்று அல்லது இரண்டு நெறியாளர்கள் நியமனம் செய்யப்படும். நான், தி.நகர், பனகல் பூங்காவிற்கு நெறியாளராகப் பொறுப்பேற்று 7 ஆண்டுகள் ஆகின்றது. எங்களுடைய அமைப்பில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7.30 முதல் 9 மணி வரை நடத்துகிறோம். அதாவது, உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 5 நிமிடங்கள் தங்களுடைய கருத்து, செய்தி அல்லது விழிப்புணர்வு கதைகள் சொல்லலாம்.
நானும் தொடக்கத்தில் ஒரு பூங்காவில் பேசினேன். அதில் நல்ல பபிற்சி கிடைத்தது. தன்னம்பிக்கையும் கிடைத்தது. அந்த நம்பிக்கையைப் பார்த்து நானும் தனியாக நடத்தும் இந்தப் பொறுப்பை கொடுத்தார்கள். அதை சிறப்பாக செய்து வருகிறேன். அதாவது, மற்றவர்களிடம் பேச கூச்சப்படும் நபர்களுக்கு இந்தப் பயிலரங்கம் மிகவும் உதவியாக இருக்கும். தொடர்ச்சியாக பேச வருபவர்கள் சிறந்த பேச்சாளராக வரலாம். அதற்கு நானே சான்று. இப்போது, எங்கள் அமைப்பு பேச்சு பயிலரங்கம் என்பதைத் தாண்டி ஒரு குடும்ப உறவு மாதிரியான இணக்கம் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் உறவுகள் என்றே சொந்தம் கொண்டாடி மகிழ்கிறோம்.
அடுத்தபடியாக தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு ஆண்டும் வேல்டெக் கல்லூரியில் பயிலும் ஒரு சில ஏழை மாணவர்களுக்கான ஆண்டு கட்டணம் எவ்வளோ அதையும் கட்டும் பொறுப்பை ஏற்று செலுத்தி வருகிறேன். எனக்கு அபிமன் மற்றும் அருண் என்று இரண்டு பசங்க உண்டு. மூத்தவன் கத்தாரில் வேலை செய்கிறான். இளையவன் பெங்களூரில் வேலை செய்கிறான். அவர்களுக்கு அன்பை மட்டும் காட்டி வளர்த்ததால் இப்போது அவர்கள் என்மீதும் என் கணவர் மீதும் அதிக அளவு அக்கறை எடுத்து மகிழ்கிறார்கள். நாங்களும் அவர்கள் வீட்டுக்கு வரும்போது பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகிறோம்.
இங்கே இன்னொரு விசயத்தையும் பதிவு செய்தாக வேண்டும். அதை சொல்லணுமான்னு கூட தெரியல. ஆனால், சொன்னால் மற்றப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். நான், கொரோனா காலத்தில் மும்மரமாக சேவை செய்துகொண்டிருந்தேன். அதன்பின்பு, ஒருநாள் எனக்கு உடல்நிலை மோசமாகியது. சரி… மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வோம் என்று மருத்துவரிடம் சென்றோம். அவர் என்னை பரிசோதித்துவிட்டு என் கணவரிடம் விவரம் சொல்கிறேன் என்று என்னை வெளியே அனுப்பி வைத்தார். என் மகன் இளையவனும் உடன் இருந்தான். அவன்தான் சொன்னான் “அம்மா.. அப்பா வந்து விவரமாக சொல்வார். தைரியமாக இருக்கணும்“ என்று சொன்னான்.ஆனால், அவன் வார்த்தைகளில் தடுமாற்றம் இருந்தது.
நானே நேரடியாக மருத்துவரிடம் சென்றேன். “ சார் எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க. அது உயிர் போற விசமாகக்கூட இருக்கட்டும். எனக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கு சார். எதையும் எதிர்கொள்ளும் மனபக்குவத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். நான் செய்த சேவையும் அதற்கான பக்குவத்தை வழங்கி இருக்கிறது” என்று சொன்னேன். மருத்துவர் அசந்து போய்விட்டார். “இப்படி தைரியம் எல்லா நோயாளிகளுக்கு இருந்தால் பாதி நோயை மன தைரியத்தாலே விரட்டிவிடலாம்“ என்றவர், எனக்கு மார்பகப் புற்றுநோய் அறிகுறி இருப்பதாக சொன்னார்.
எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகி விடும். அந்தத் தைரியம் உங்ககிட்ட இருக்கு, நீங்க கவலைப்படாதீர்கள் என்றார். அவர் சொன்ன மாதிரி தைரியமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வருகிறேன். சராசரி மனுசியாக எல்லோரிடமும் அதே அன்பு பாசத்துடன் பழகி வருகிறேன். என் பசங்களும் ‘உன்னால் ஜெயிக்க முடியும்‘ என்று தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். நான், அதே மனபலத்துடன், அதே சேவைகளை சிறப்பாக செய்து வருகிறேன். புதியதாக தொழில் செய்யவும் தயாராகி வருகிறேன்.
அதனால், என்னைப் போன்ற பெண்கள் எந்த மாதிரியான துன்பங்கள் வந்தாலும் புறந்தள்ளிவிட்டு போராட கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த உலகில் வெற்றிநடைபோட முடியும்“ என்று புன்னகைக்கிறார். இவர், தமிழ்ப் பெரியார் விருது, டிகினிட்டி பவுண்டேசன் சார்பாக மனிதநேயர் விருது, திரு.வி.க.நற்தூது விருது, நல்லிணக்க சான்றோர் விருது, காலம் அறி கண்ணியர் விருது என 10க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். தி.நகர் நடேசன் பூங்கா நடையாளர் சங்கத்தில் செயலாளராக இருந்து பணிகளை இப்போதும் கவனித்து வருகிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற – என்ற வள்ளுவரின் வரிகளை நினைவுபடுத்துகிறார் திருமதி அம்பிகா நவநீதன்
திருமதி அம்பிகா நவநீதன் – +91 97907 55586
– ஆ.வீ.முத்துப்பாண்டி