கனவுகள் காண்பது இயல்பாய் போன மனித வாழ்வில் முயற்சிக்காத வரை வாழ்க்கை ஒரு கானலே..! ஆம் கனவுகளைக் கண்டால் மட்டும் போதாது அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்ற சமயோஜித சிந்தனையும், கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். அப்படியான அசாத்தியங்களைச் செய்து தன்னுடைய தொழில்முனைவு கனவை நிறைவேற்றி இருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த திருமதி. பிரேமா. கூட்டுக்குடும்பம், பெண்களுக்கே உள்ள கட்டுப்பாடுகள் என அனைத்தையும் கடந்து இன்று மாத்திற்கு ரூ.2 லட்சம் வருவாய் ஈட்டும் தொழிலைச் செய்து வருகிறார்.எப்படித் தொடங்கியது இந்தப் பயணம் என ஊடகத்திற்கு அளித்த பேட்டியிலிருந்து….
“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூரிலுள்ள வரதராஜபுரம் என்ற இடத்தில். எங்கள் குடும்பத்தில் நாங்கள் 3 பேரும் பெண் பிள்ளைகள். அப்பா, அம்மா இருவருமே டெக்ஸ்டைல் ஆலையில் பணியாற்றினாலும் எங்களை நன்றாக படிக்க வைத்தார்கள்.பாட்டியின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் அவர் கூறுவதற்கு மறுப்பே கிடையாது, அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்வோம் நாங்கள். அப்படித்தான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்த சமயத்தில் அப்பா சொன்னதால தட்டச்சு பயிற்சி எடுத்துக் கொண்டேன். எனக்கு அதில் விருப்பம் இல்லை டெய்லரிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்றாலும் அப்பா மறுப்பு தெரிவித்துவிட்டார் அவரது பேச்சிற்கு மறுபேச்சே கிடையாது என்று தான் வளர்ந்த விதத்தை விவரித்தார் பிரேமா.
நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண் பிள்ளைகளின் அச்சு பிசகா வாழ்க்கையில் பிரேமாவும் விதிவிலக்கல்ல. பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்ற கையோடு திருமணமும் ஆகிவிட்டது.
“என் கணவரிடம் நான் தொழில்முனைவராக வேண்டும் என்கிற கனவைச் சொன்னபோது அவர் அரசுப் பணியில் இருப்பதால் அடிக்கடி பணிமாறுதல் ஏற்படும். அதனால் தொழில்முனைவராவது சாத்தியம் இல்லை என்றார். 2 ஆண்டுகளில் குழந்தையும் பிறந்துவிட மகன் மற்றும் என்னுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கணவர் கூறிவிட்டார். இப்படியாக சூழ்நிலைகளும் என்னுடைய பயணத்திற்கு பல முட்டுக்கட்டைகளை போட்டது. குழந்தை பிறந்த பிறகு 10 ஆண்டுகள் நம்மால் வெளியே செல்ல முடியாது என்பதை எனக்கே தீர்மானமாகத் தெரிந்துவிட்டது,” என்கிறார் பிரேமா.
முதல் தொழிலே முற்றுப்புள்ளியில் முடிந்தது இருந்தாலும் நான் சோர்ந்து போகவில்லை வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. எனக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருக்கிறது. 1990ம் ஆண்டில் விவசாய பல்கலைக்கழகத்தின் Post Harvest துறையில் உணவு பதப்படுத்துதலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக விளம்பரம் தரப்பட்டிருந்தது. அங்கு சென்று மசாலா பொடி, ஊறுகாய், ஜாம், ஜூஸ் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வது குறித்து படித்தேன். வெறுமனே படித்ததோடு மட்டுமின்றி அதனை சிறிய அளவில் ரூ.1000 முதலீட்டில் உற்பத்தி செய்து அக்கம் பக்கத்தினர், என் கணவரின் உடன் பணியாற்றுபவர்களுக்கு கொடுத்து வந்தேன்.
எலுமிச்சை, மாங்காய் என்று வழக்கமான ஊறுகாய் வகைகளாக இல்லாமல் அந்த கால கட்டத்தில் நான் தயாரித்த கலவை காய்கறி ஊறுகாய் மிகப் பிரபலமடைந்தது. அதுவே எனக்கு நம்பிக்கையையும் தந்தது. பொருட்களை தயாரிப்பது எளிதாக இருந்தாலும் அதனை பேக்கிங் செய்வதற்கு இப்போது இருப்பதைப் போன்று அதிக வசதிகள் இல்லாததால் அந்தத் தொழிலை தொடர முடியவில்லை என்பதால் ஆசைஆசையாய் தொடங்கிய தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிட்டதாகச் சொல்கிறார் இவர்.ஒன்று வேலைக்கு போக வேண்டும் அல்லது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். என்னுடைய மகனுக்கு 8 வயது ஆகும் போது ஆசிரியர் பயிற்சி படித்து பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றலாம் என்று முடிவு செய்தேன்.
தொடக்கத்தில் ஆசிரியர் பணி என்பது என்னுடைய விருப்பமாக இல்லாவிட்டாலும் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் எனக்குப் பிடித்திருந்தது. இருப்பினும் மற்றொருபுறம் என்னுடைய தொழில்முனைவு கனவிற்காக அவ்வபோது விவசாயப் பல்கலைக்கழகம் நடத்தும் உணவு பதப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்று வந்தேன். இந்தத் துறை சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்வதில் என்னை அப்டேட்டாக வைத்திருந்தேன். பயிற்சியில் கற்றுக் கொள்வதை அப்படியே செய்யாமல் அதில் வேறு என்ன புதிதாக செய்யலாம் என்று ஆராய்ந்து மேம்படுத்துவதே என்னுடைய தனித்துவம். இடைப்பட்ட காலத்தில் டெய்லரிங் மற்றும் அடிப்படை எம்பிராய்டரியையும் கற்றுக் கொண்டு என்னுடைய மற்றும் குடும்பத்தினரின் ஆடைகளை மட்டும் தைத்துக் கொண்டிருக்கிறேன் என்று உற்சாகத்தோடு சொல்கிறார் பிரேமா.
Apparel மற்றும் Food processing இரண்டு துறைகளும் என்னுடைய இரண்டு கண்களைப் போன்றவை, எப்போதுமே அதன் மீதான நாட்டம் எனக்கு குறைவதில்லை. 2016ல் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு அமேசானில் கிட்ஸ் மற்றும் பெண்கள் ஆடைகளை SPS apparels என்ற பெயரில் விற்பனை செய்யத் தொடங்கினேன். அதிலிருந்து, மாதம் ரூ.60 முதல் ரூ.70 ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது. அதற்கும் எண்ட் கார்டு போட்டது பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி. இந்தத் தொழிலும் மந்தமடையத் தொடங்கியதால் உணவு பதப்படுத்துதல் துறையிலேயே இறங்கிவிடலாம் என்று முடிவெடுத்தேன்,” என்கிறார்.
அடுத்தது என்ன என்ற தேடலில் தான் நமது இலக்கை அடைவதற்கான பாதை கிடைக்கும் என்பதற்கு விதிவிலக்கல் பிரேமா என்பதை அவரது பயணம் உணர்த்துகிறது. “முதன்முதலில் கற்ற மசாலா பொடி உற்பத்தியையே மீண்டும் செய்யத் தொடங்கினேன். ஆனால், சந்தையில் ஏற்கனவே இருக்கின்ற பிரபல பிராண்டுகளுடன் போட்டிபோட முடியவில்லை.” மசாலா பொடியை பெரிய அளவில் விளம்பரம் செய்யுமாறு கடைகள் அறிவுறுத்தின அதற்கென தனி நிதி ஒதுக்கீடு செய்யமுடியாத சூழலில் இதனை முதன்மை உற்பத்திப் பொருளாக எடுத்திருக்கக் கூடாது என்ற அனுபவத்தை அப்போது பெற்றேன். இதனால் என்னுடைய ஸ்பெஷல் உணவுப் பொருளாக ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று யோசித்த போது, நான் பணியாற்றிய சமயத்தில் பள்ளியில் குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 15 குழந்தைகளாவது மைதாவால் செய்யப்பட்ட நூடுல்ஸை தினசரி மதிய உணவாக உட்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். மைதா சார்ந்த உணவை தினசரி குழந்தைகள் உட்கொள்வது உடல்நலனுக்கு ஏற்றதல்ல, அவர்களுக்குப் பிடித்தமான உணவை ஆரோக்கியமானதாக எப்படி தரலாம் என்று சிந்திக்கத் தொடங்கினேன்
தொடர்ந்து நூடுல்ஸ் உற்பத்தி செய்வது எப்படி என்று சென்னை TANUVAS பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால், அவர்களும் மைதா மாவை வைத்து நூடுல்ஸ் தயாரிக்கும் முறையைத் தான் கற்றுக்கொடுத்தார்கள். கோதுமை மாவை பயன்படுத்துவதனால் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் அதையே ப்ளீச் செய்து மாவாக்கப்படும் மைதாவை உட்கொள்வது உடல்நலத்திற்கு உகந்ததல்ல. ”அதனால் நான் கோதுமை மாவையும், சிறுதானிய மாவையும் வைத்து நூடுல்ஸ் உற்பத்தி செய்வதற்கு பலமுறை மூலக்கூறுகளை செயல்படுத்திப் பார்த்தேன். சுமார் 3 மாதங்கள் செலவிட்டு மாதிரியாக மட்டுமே 200 கிலோ மாவை வீணாக்கினேன். எனினும் இறுதியில் சரியான பதத்தில் நூடுல்ஸ் உற்பத்தி செய்யும் மூலக்கூறு கைவசமானது,” என்று மகிழ்ச்சியோடு பகிர்கிறார்.
2019ம் ஆண்டில் ’உத்ரா என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற்று நூடுல்ஸ் உற்பத்தி செய்யத் தொடங்கினேன்.எங்களுக்கு இருக்கும் இரண்டு வீடுகளில் ஒன்றை உற்பத்தி ஆலையாக மாற்றி அதில் இயந்திரங்களை வாங்கிப் பொறுத்தி சிறுதானியம் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்து வருகிறேன். ’நற்பவி ’Narpavi’ என்னும் ப்ராண்ட் பெயரில் ராகி, சாமை, திணை, குதிரைவாலி என 6 முதல் 9 வகையான சிறுதானிய ஹக்கா நூடுல்ஸ் மற்றும் சேமியா, பொங்கல் மிக்ஸ் என முற்றிலும் Glutan Free, மைதா மற்றும் கலப்பு ரசாயனங்கள் இல்லாத ஏற்றுமதி தரத்திலான பொருட்களை விற்பனை செய்கிறேன்.ஆரம்பத்தில் என்னுடைய அப்பாவைப் போலவே கணவரும் என்னுடைய தொழில் தொடங்கும் முடிவிற்குத் தயக்கம் காட்டினாலும், என்னுடைய கடினஉழைப்பு மற்றும் விடா முயற்சியைக் கண்டு நான் உண்மையிலேயே அதில் ஆர்வமாக இருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டார். இப்போது என்னுடைய தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசிடராகி மார்க்கெட்டிங் செய்கிறார்.
அதே போல, என்னுடைய மகனும் எனக்கு உதவியாக இந்தத் தொழிலுக்கே வந்துவிட்டார். BE கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், நான் தனி ஆளாக கஷ்டப்படுவதைப் பார்த்து என்னுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.என்னுடைய தொழிலுக்கான தொழில்நுட்பம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் அவர் தான் இப்போது கவனித்துக் கொள்கிறார். முதலில் நான் பிறகு என் மகன் என இப்போது 6 பேர் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியை செய்து கொண்டிருக்கிறோம். சமூக ஊடகங்கள் மற்றும் வர்த்தகம் சார்ந்த You Tube சேனல்கள் மூலமே பொருட்களுக்கான மார்க்கெட்டிங் செய்தேன், அதில் இருந்து அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடிந்தது. சில்லரை விற்பனையை விட இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடான மஸ்கட், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கும் எங்களது தயாரிப்புகள் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிலர் எங்களுடைய பிராண்ட் பெயர்களிலும் வேறு சிலர் அவர்களின் பிராண்ட் பெயர்களிலும் விற்பனை செய்கின்றனர். ஒரு மாதத்திற்கு ஒன்றரை டன் அளவிலான நூடுல்ஸ், சேமியா உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. “எங்களது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாதத்திற்கு 4 முதல் 5 டன் பொருட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது தவிர புதிதாக 3 பொருட்கள் ஆராய்ச்சி முடிந்து சில மாதங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.”முதல் முறை ரூ. 10 லட்சம் கடன் பெற்று தொழிலைத் தொடங்கினேன் அதற்கான தவணையை தற்போது செலுத்திக் கொண்டிருக்கிறேன். இரண்டாவதாக ரூ.1 கோடி வரை கடன் பெறும் தகுதியை பெற்றிருக்கிறோம். நிறுவன விரிவாக்கத்திற்காக இரண்டாவது முறை கடன் பெறலாம் என்று முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.தொழில் தொடங்க வங்கியின் கடன் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. முதல்முறை வங்கிக் கடன் பெறும் போது பல சிரமங்களைச் சந்தித்தேன். ஆனால், இப்போது என்னுடைய உழைப்பால் வளர்ந்து வரும் நிறுவனம் என்பதை கருத்தில் கொண்டு வங்கிகள் கடன் தருவதற்கு தானாக முன்வருகின்றன என்பதே ஒரு பெரிய மகிழ்ச்சியான விஷயம் என்கிறார் பிரேமா.
தொழில் தொடங்கிய முதல் நாள் முதலே லாபம் என்பது இருந்தது. கொரோனா காலகட்டத்தில் சற்றே மந்தமாக இருந்தநிலையில், தற்போது தொழில்கள் எழுச்சி கண்டு வருகின்றன. “மாதத்திற்கு ரூ.2 லட்சம் மொத்த வருவாய் இப்போது கிடைக்கிறது. இதில் 30 முதல் 40 சதவிகிதம் லாபம் எங்களுக்கு கிடைக்கிறது. 5 ஆண்டுகளில் 100 பணியாளர்களைக் கொண்ட மிகப்பெரிய ஸ்தாபனமாக இந்நிறுவனத்தை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதே போல, ஆண்டுக்கு ரூ.100 கோடி மொத்த வருவாய் ஈட்ட வேண்டும் என்பதை எதிர்நோக்கி திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். பிராண்ட் பெயர், மெஷினரி பழுது உள்ளிட்ட சிறு சிறு பிரச்னைகள் வந்த போதெல்லாம் மீண்டும் ஆசிரியர் பணிக்கே சென்று விடலாமா என்றெல்லாம் கூட யோசித்திருக்கிறேன். எனினும், எனக்குள் இருந்த தொழில்முனைவர் எல்லா சோதனைகளையும் கடந்து இன்று என்னை வெற்றிபெறச் செய்திருக்கிறார். இனியும் இந்தப் பயணம் வெற்றிகரமானதாகத் தொடரும் என்று நம்பிக்கையோடு
பேசுகிறார் பிரேமா.