நடிகர்கள் : சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, யூடியூப் ராகுல், ஆனந்தராஜ்
இயக்கம் : அனுதீப் கே.வி.
இசை : S.S. தமன்
தயாரிப்பு : சுரேஷ் பாபு
தேவானம் கோட்டை என்கிற ஊரில் அனைத்து மக்களும் மதிக்கக்கூடிய ஒரு பெரியமனுஷன் இருக்கிறார். அவர்தான் உலகநாதன் (சத்யராஜ்). சாதி, மதம், மொழி, இனம் என்று எதுவுமே பார்க்கக்கூடாது என்று மக்களுக்கு வகுப்பு எடுப்பவர். சாதி மாறி கல்யாணம் பண்ணினா சிறப்பாக இருக்கும் என்று உபதேசம் செய்யக்கூடியவர். ஆனா, அவருடைய பொண்ணு சொந்த மாமன் மகனையே திருமணம் செய்துகொள்கிறாள். இவரும் அவரிடம் பேசாமல் வீம்பு பிடிக்கிறார்.
இதே மாதிரி தன்னுடைய மகன் அன்பு (சிவகார்த்திகேயன்) சொந்த சாதிபொண்ண கல்யாணம் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதற்காக, உள்ளூரிலே ஆசிரியர் வேலையும் வாங்கிக்கொடுக்கிறார். அவரும் சின்னப் பசங்க மாதிரி வகுப்பை கட் அடித்துவிட்டு படம் பார்க்க கிளம்புகிறார். அப்போது, அதே பள்ளிக்கு ஆசிரியராக வந்து சேருகிறார் பிரெஞ்ச் காலனியைச் சேர்ந்த ஜெசிகா ( மரியா). அவரைப் பார்த்ததும் அன்புக்கு அவர் மீது காதல் வருகிறது. முதலில் ஜெசிகா மறுக்கிறார். அப்புறம் அவருடைய அப்பா மறுக்கிறார்.. இவர்களுடைய காதல் நிறைவேறியதா? என்பதுதான் மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பை கொடுத்திருக்கிறார். புதுசாக எதுவும் முயற்சி செய்யவில்லை. அதற்கான ஸ்கோப்பும் கதையில் இல்லை. அறிமுக கதாநாயகி வாவ் சொல்ல வைக்கிறார். பாடல் காட்சிகளில் டைட்டானிக் கதாநாயகிபோல் இருக்கிறார். அழகு பதுமை என்பதைவிட அழகு புதுமை என்று சொல்லாம். சத்யராஜ், பெரும்பாலான சீன் இவருக்குத்தான். அதை கலகலப்பாகவும் அழகாகவும் நகர்த்தி செல்கிறார். குறிப்பாக, அவர் அறிமுகம் ஆகும் சீனே திரையரங்கில் திருவிழா சத்தம் கேட்கிறது. மற்றபடி சூரி, ஆனந்த்ராஜ் வந்துபோகிறார்கள்.
படத்திற்கு பக்க பலமே ஒளிப்பதிவாளர் பரம்மஹம்சாதான். புதுச்சேரியை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளையும் எப்போ பார்த்தாலும் குளுர்ச்சியாக இருக்கும் விதத்தில் கலர் டோன் பயன்படுத்தியிருக்கிறார். அடுத்தது, இசை எஸ்.எஸ் தமன் அமைத்திருக்கிறார். பல நகைச்சுவை எடுபடுவதற்கு இவருடைய பின்னணி இசையும் ஒரு காரணம். பாடல்களுக்கு தரமாக சம்பவம செய்திருக்கிறார். தீபாவளி ஹிட் பாடல்கள்னா அது ப்ரின்ஸ் தான்.
படத்தின் மைனஸ் என்று பார்த்தால் கதைதான். எப்படி புரண்டு படுத்தாலும் மண்டைக்குள் கதை மட்டும் சிக்கவே மாட்டங்கிறது. ஏதோ ‘கலக்கப்போவது யாரு’ எபிசோட் பார்த்திட்டு வந்த மாதிரி இருக்குது. கடைசியில் “மாமா பிஸ்கோத்தே” சொல்ற மாதிரிதான் படம் இருக்கு.