“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்” – என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப… திருவள்ளூர் மாவட்டம் பகுதியில் உள்ள அலமாதி என்னும் சிற்றூரில் ‘ பாசத்தின் விழுதுகள் டிரஸ்ட்’ என்னும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார் திருமதி. மேரிபுஸ்பம். அவருடைய அறக்கட்டளை இல்லத்திற்கு நேரடியாகச் சென்று ஒரு மாலை வேளையில் சந்தித்து உரையாடியபோது….
“நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி. என் கணவர் முருகன் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். அறக்கட்டளையை அமைக்கும் எண்ணம் 2019 ல் கொரோனா காலத்தில் தோன்றியது. அதற்கு முன்பு நானும் என்னோட தோழிகளும் சேர்ந்து, வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வாங்கிகொடுப்பது என சின்ன சின்ன உதவிகள் செய்து வந்தோம். கொரோனா காலத்தில் எங்களுடைய சேவையை விரிவுபடுத்தினோம்.
ஆம்.. தோழிகளுடன் சேர்ந்து ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்தோம். வாட்சப் குழுவினர் அனைவரும் ஆளுக்கு 1000 அல்லது 2000 தொகையை ஒதுக்குவோம். அந்தத் தொகையில் கொரானா காலத்தில் வேலைக்கு செல்லமுடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொடுத்தோம். தரமான அரிசியில் உணவு சமைத்து ஒவ்வொரு பகுதியாக சென்று வினியோகம் செய்தோம். இந்த மாதிரியான உதவிகள் செய்வது எங்களுக்கு தனிப் பிரியமே உண்டானது. அப்போது எனக்கு ‘டிரஸ்ட்’ ஆரம்பித்து உதவிகள் செய்தால் இன்னும் அதிகளவில் செய்யலாம் என்று தோன்றியது. அதை என் குழுவினரிடம் சொன்னேன். அவர்களும் “நீங்கள் ஆரம்பியுங்கள் நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம்“ என்றனர்.
டிரஸ்ட் ஆரம்பிப்பது என்னவோ எளிதானது என்று நினைத்தேன். ஆனால், அவ்வளவு எளிதாக அமையவில்லை. பல நாட்கள் அலைந்து திரிந்து ‘ பாசத்தின் விழுதுகள் டிரஸ்ட்’ என்ற பெயரில் அறக்கட்டளையை பதிவு செய்தோம். இதை அரம்பிப்பதற்கு முன்பு நேர்மறை (Positive) கருத்துக்கள் சொன்னவர்களை விட எதிர்மறை கருத்துக்கள் ( Negetive) சொன்னவர்கள்தான் அதிகம். ஒரு வங்கிக்கு செல்லும்போது கூட… ‘இந்த மாதிரி நிறைய அறக்கட்டளைகள் இருக்கே… நீங்க புதுசா ஆரம்பிச்சு எதுக்கு கஷ்டப்படணும்‘ என்றார். எதிர்மறையாக சொல்லும் கருத்துகள் எதுவுமே நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
தனியொரு ஆளாக செய்வதைவிட அமைப்பாக செய்யும்போது.. மற்றவர்கள் உதவியும் கிடைக்கும். பெரிய அளவில் செய்யலாம் என்று மட்டுமே தோன்றியது. அதற்காக என் கணவரும் ஒத்துழைப்பு கொடுத்தார். சில நேரங்களில் அவர்தான் பணமே கொடுத்து உதவுவார். ஒரு வழியாக எங்களுடைய திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியில் என் வீட்டருகே ஒரு அலுவலகத்தை அமைத்து அறக்கட்டளையை தொடங்கிவிட்டோம்.
அறக்கட்டளை தொடங்கியதுமே எங்களுடைய முதல் இலக்கு வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதுதான். அதற்காக முதலில் அந்தப் பகுதியில் உள்ள 200 குழந்தைகளை தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு நாட்டுக்கோழிமுட்டை, ஒரு தம்ளர் பசும்பால் கொடுப்பதற்கு திட்டமிட்டோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தச் சேவையை செய்து வருகிறோம். இதற்காக நாட்டுக்கோழி வளர்க்க திட்டமிட்டு, 100 க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வருகிறோம்.
பசும்பாலை பொறுத்தவரை இப்போது வரை பண்ணையில் இருந்துதான் வாங்கிக்கொள்கிறோம். தனியாக வளர்ப்பதற்கான திட்டமும் வைத்திருக்கிறோம். முதல் வௌளோட்டமாக இரண்டு பசுமாடு வாங்கி வளர்த்து வருகிறோம். எதற்காக வெள்ளோட்டம் என்றால், நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக முதலில் 100 கோழிகளுக்கு மேல் வாங்கி வளர்த்தோம். அதில் 30 கோழிகளுக்கும் மேல் இறந்துவிட்டன. அதற்குப் பின்பு பராமரிப்பு முறையை சரிசெய்தோம். இப்போது எந்தக்கோழிகளும் இறப்பதில்லை . அதனால், பசுமாடு பராமரித்து அதற்கான ஆட்கள் கிடைத்தவுடன் பசுமாடு வளர்க்கும் திட்டமும் வைத்திருக்கிறோம்“ என்றவர், நம்மை அழைத்துச் சென்று, புதியதாக வாடகைக்கு எடுத்த வீட்டைக் காட்டினார். அதன்பின்பு பேசத் தொடங்கினார்.
“ இந்த வீடு வறுமையில் வாடும் குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக டியூசன் சென்டர் அமைத்திருக்கிறோம். இந்தக் கல்வி ஆண்டில்தான் தொடங்கியிருக்கிறோம். இதற்கு சென்னை, செங்குன்றத்தில் உள்ள அட்ஸ்வா அறக்கட்டளை நிறுவனமும் உதவுவதாக சொல்லியிருக்கிறார்கள். தினமும் 50 மாணவர்கள் கல்வி கற்றுச் செல்கிறார்கள். எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை ஒரு ஆசிரியரும். 8 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புவரையில் ஒரு ஆசிரியரும் நியமித்து இலவசமாக கல்வி கற்றுத் தருகிறோம். பெற்றோர்களும் ஆர்வமாக குழந்தைகளை கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.
குழந்தைகள் ஆர்வமாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு முக்கியக் காரணம், இரண்டு ஆண்டுகால கொரோனா வாழ்க்கையில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாததால், மறதி ஏற்பட்டு விட்டதாக பெற்றோர்கள் சொல்கின்றனர். கட்டணம் கட்டி டியூசன் சேர்க்க முடியாததால், எங்களுடைய இலவச டியூசன் சென்டரில் சேர்த்து விட தொடங்கியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லொழுக்கம் மற்றும் சுகாதரம் சார்ந்த விழிப்புணர்வு வகுப்பும் எடுக்கிறோம். அன்றைக்கு 50 மாணவர்களுக்கு எங்கள் அறக்கட்டளை குழுவினரே சமைத்து அவர்களுக்கு மதிய உணவு பரிமாறுகிறோம்.
இவை தவிர, எங்களுடைய அறக்கட்டளையின் சார்பாக 50 ஆதரவற்ற முதியோர்கள் தங்குவதற்கான விடுதியும் அமைத்திருக்கிறோம். இந்த விடுதியில் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் என 40 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு மூன்றுவேளை உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து கொடுத்து பராமரித்து வருகிறோம். சில முதியோர்கள் பென்சன் வாங்கித் தருமாறு கேட்கிறார்கள். அவர்களுக்கு பென்சன் கிடைப்பதற்கான ஆவணங்கள் தயாரிப்பது முதல் அதை அதிகாரிகளிடம் கொடுப்பது வரை எங்கள் அறக்கட்டளை உதவுகிறது. எங்கள் டிரஸ்டில் 20 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
எங்களுடைய மக்கள் சேவையை விரிவுபடுத்துவதற்காக சில ஸ்பான்சர்கள் மற்றும் சில உதவும் உள்ளங்களையும் எதிர்பார்க்கிறோம். இப்போதுவரை டிரஸ்ட் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாத சேமிப்பு பணத்தை சேவைக்காக செலவழித்து வருகின்றனர். சில நல்ல உள்ளங்கள் தங்கள் பசங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் நேரடியாக வந்து உணவு வழங்கி செல்கின்றனர். சிலர் உணவுக்கான கட்டணத்தை செலுத்துகின்றனர். அப்போது, நாங்ளே நேரடியாக களத்தில் இறங்கி சமைத்து கொடுக்கிறோம். எங்களுக்கு இந்த சேவை செய்துவது விரும்பிய ஒன்றாக இருப்பதால், மனம் தளராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறோம்“ என்றார்.
மேரிபுஸ்பம் – ( 99405 55355)
– ஆ.வீ.முத்துப்பாண்டி