முன்பொரு காலத்தில் தமிழர்களின் உணவுப் பாரம்பரியம் என்பது வேதிப்பொருள் கலப்பு இல்லாததாக இருந்தது. அவை, கடந்த நாற்பதாண்டு காலமாக வழக்கொழிந்து போனது. அண்மையில், உணவுப் பழக்க விழிப்புணர்வு காரணமாக இயற்கை உணவிற்கு திரும்பும் ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1980ம் ஆண்டிற்கு முந்தைய காலங்களில் நம் முன்னோர் கடைப்பிடித்த பல நல்ல பழக்கவழக்கங்கள் இன்றைய இளம் தலைமுறையினரால் மறக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு, உணவு, உடை என எல்லாவற்றிலும் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து விட்டது.
ஆட்டுக்கல், அம்மி, உரல் போன்றவை புறக்கணிக்கப்பட்டு அனைத்து உணவு தயாரிப்பு முறைகளும் உடல் உழைப்பை அதிகம் தரத்தேவையற்ற இயந்திர மயத்திற்கு மாறிவிட்டது. உணவு தயாரிப்பதற்கான உழைப்பு குறைந்து, சுவைப்பது அதிகரித்ததால் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் மற்றும் நோய்கள் இளம் பருவத்தில் இருந்தே தொடங்கி விட்டது. 30 ஆண்டுகால இயந்திர மய வாழ்க்கை சலிப்பையும் நோய்களையும் தருவதால் பலர் மீண்டும் நம் முன்னோர் கடைப்பிடித்த வழிமுறைக்கு மாறி வருகின்றனர். அதற்கேற்றார்போல் முன்னோர் பயன்படுத்திய செக்குஎண்ணெய் தயாரித்தல், கல் எந்திரத்தில் மாவு அரைத்தல் மற்றும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட தானியங்கள் விற்பனை என ஒரு மாற்றம் கண்டு வருகிறது. அப்படியொரு மாற்றத்தை செய்தவர்தான் திரு. தா. முத்துராஜ். இவர், சென்னை, ஆவடி, பேருந்து நிலையம் பின் பக்க தெருவில், தனது மனைவி சகுந்தலாவுடன் இணைந்து மரசெக்கு எண்ணெய் ஆட்டும் தொழில், கல் எந்திரத்தில் அரிசி, கோதுமை, கேழ்வரகு மாவு தயாரிக்கும் தொழில் என பல மரபுசார் எந்திரங்களைப் பயன்படுத்தி தொழிலை செய்து வருகின்றனர். அவர்களுடன் ஒரு மாலைவேளையில் உரையாடியபோது…
“முதலில் என்னைப் பற்றி தெளிவுபடுத்தி விடுகிறேன். நான், ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன். எனக்கு சொந்த ஊர் மதுரை அருகிலுள்ள குராயூர். என் மூத்த அண்ணன் சென்னையில் விறகு கடை வைத்திருந்தார். அதனால், மூணாவது படித்துக்கொண்டிருக்கும்போது சென்னை வந்துவிட்டேன். என் அண்ணனுக்கு உதவியாக இருந்தேன். நான், சிறுவன் என்பதால் என்னை திட்டிக்கொண்டே இருந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. அதனால், மீண்டும் ஊருக்கே சென்று விட்டேன். என் அப்பாவிடம் படிக்க விரும்புவதாக சொன்னேன். அவரும் எங்க ஊரில் உள்ள தலமையாசிரியரிடம் எடுத்துச்சொல்லி 5ம் வகுப்பில் சேர்த்துக்கொண்டனர். பி.யூ.சி வரை படித்தேன். திரும்பவும் சென்னைக்கு என் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன். மீண்டும் இருவருக்கும் மனக்கசப்பு. இன்னொரு அண்ணன் பட்டாபிராமில் இருந்தார். அவரிடம் சென்று தங்கி இருந்தேன். அப்போது, அருகில் உள்ள ஆனந்த் டெய்லர் கடையில் உக்கார்ந்து நேரம்போகாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த டெய்லர் என்னைப் பார்த்து சும்மாதானே இருக்க… சட்டை தைக்க கற்றுக்கொள்கிறாயா? எனக் கேட்டார். நானும் சரி என்று சொல்லி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இரண்டு நாளில் சட்டை தைக்க கற்றுக்கொண்டேன். ஆனால், காலர் தைக்க அனுமதி கொடுக்கமாட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கடையில் வேலை செய்தவரும் நானும் சேர்ந்து புதியதாக டெய்லர் கடை வைக்கும் அளவுக்கு சென்றது தனி கதை. பின்பு, 1979 ம் ஆண்டு OCF (Ordnance Clothing Factory) என்கிற நிறுவனத்தில் மத்தியரசு பணி கிடைத்தது. 33 ஆண்டுகள் பணிக்குப் பின் ஓய்வு பெற்றேன்.
ஓய்வுக்குபின் நூல்கள் படிப்பதும், இதழ்கள் படிப்பதும் மட்டுமே வேலையாக இருந்தது. அப்படி படித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு மாத இதழில் கலப்படம் இல்லாத எண்ணெய் தயாரிப்பது எப்படி? என்றும், அந்த எண்ணெய் மரசெக்கில் மட்டுமே தயாரிக்க முடியும் என்கிற செய்தியைப் படித்தேன். சும்மா இருப்பதை விட, வீட்டில் பெரியளவில் இடம் இருக்கிறது. தொழிலுக்கு தொழிலும் ஆச்சு. மக்களுக்கு கலப்படம் இல்லாத எண்ணெய் கொடுத்ததாகவும் இருக்கும் என்று தோன்றியது. மனைவியிடம் கேட்டேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டார். செக்கு எண்ணெய் பற்றிய செய்தியை சொன்னவர் கும்பகோணத்தில் இருப்பதாக போட்டிருந்தது. நான், கும்பகோணத்திற்கு பயணத்தைத் தொடங்கினேன். அந்த முகவரியை தேடி கண்டுபிடித்து சரியான இடத்திற்கு சென்றுவிட்டேன். அவரிடம் நான் சென்றதற்கான விவரத்தைக் கூறினேன். அவர் ஒரு குறிப்பிட்ட சாதி பெயரைச் சொல்லி அதைச் சார்ந்தவரா? என்றார். இல்லை என்று சொன்னேன். அவர்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழிலை செய்யமுடியாது என்றார். பராவயில்லை என்னால் செய்ய முடியும். மரசெக்கு எங்கு வாங்குவது என்று மட்டும் சொல்லுங்கள் என்றேன். அவர் அரை மனசில் 5 லட்சம் செலவு ஆகும். நானே எந்திரத்தைப் வீட்டுக்கே வந்து பொறுத்தி தந்துவிடுகிறேன் என்றார்.
அந்தத் தொகை எனக்கு பெரியதாகப்பட்டது. சரி தொகையை தயார் செய்துகொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த மறுநாள் எனது மருத்துவ நண்பர் தொடர்புகொணடார். அவர் என்னிடம் இரண்டு நாட்களாக பார்க்க முடியவில்லையே… எங்கு சென்றீர்கள் என்று கேட்டார். அவரிடம் விவரத்தைச் சொன்னேன். அவர், திண்டுக்கல் பகுதியில் மரச்செக்கு எந்திரம் தயாரித்து தருகிறார்கள். அங்கு சென்று பாருங்கள் என்றார். அவர் சொன்னபடி திண்டுக்கல் சென்று மரச்செக்கு எந்திரம் கேட்டேன். ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்குள் வரும் என்றார்கள். எனக்கு சரியாகப்பட்டது. உடனே தயாரித்து கொடுக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தேன். 2016 ம் ஆண்டு ‘மருதம் மரச்செக்கு எண்ணெய்’ என்ற பெயரில் கலப்படம் இல்லாத எண்ணெய் தயாரிக்கும் தொழிலை தொடங்கிவிட்டேன். என்னுடைய நிறுவனத்தை முன்னாள் அமைச்சர் திரு. ரஹீம் அவர்கள் திறந்துவைத்தார்.
அதிலும், மற்ற செக்கு எண்ணெய்யைக் காட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சில செயல்திட்டங்களை நானும் என் மனைவியும் வகுத்தோம். அதாவது, ஒவ்வொரு எண்ணெய் வித்தும் எந்தப் பகுதியில் அதிகமாக கிடைக்கிறதோ அந்தப் பகுதிக்குச் சென்று கொள்முதல் செய்கிறோம். தேங்காய் எண்ணெயைப் பொறுத்தவரையில் தென்காசி, கடையநல்லூர் பகுதியில் இருந்து கொள்முதல் செய்கிறோம். அதாவது, தென்காசி கேரளா எல்லையோர பகுதி எனபதாலும், அங்கு அதிகமான தேங்காய் விளைச்சல் உள்ளதாலும் அந்த பகுதியை தேர்ந்தெடுத்தோம். தேங்காய் எண்ணெய் ஆட்டுவது மற்ற எண்ணெய்களைப் போல் அல்லாமல் கொஞ்சம் மாறுபடும்.அதாவது, உடைத்த தேங்காயை சிறிய சில்லுகளாகக் கீறி களத்தில் நன்றாக காய வைத்து செக்கில் ஆட்ட வேண்டும். மிதமான வேகத்தில் செக்கில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் அளவான வெப்பத்தில் இருப்பதால் உயிர்ச்சத்துக்கள் காக்கப்படுவதோடு அதன் நிறமும், தனித்தன்மையும் மாறாது. அதை தென்காசி பகுதியில் உள்ளவர்கள் சிறப்பாக செய்துகொடுக்கின்றனர்.
இதேபோல, கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) போன்றவற்றை சேலம் மற்றும் திருக்கோவிலூர் சுற்று வட்டாரங்களிலிருந்து கொள்முதல் செய்கிறோம். ஒருவேளை அங்கு தட்டுபாடு ஏற்பட்டால் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் பகுதியில் தரமான கடலை மற்றும் எள்ளை கொள்முதல் செய்துகொள்கிறோம். தொழிலை தொடங்குவதற்கு முன்பு முதல் வேலையாக எண்ணெய் வித்துகள் தரமாக கிடைக்கும் இடங்கள் பற்றிய தேடலில் இறங்கினோம். அந்தத் தேடலின் அடிப்படையில் வேர்க்கடலை மற்றும் எள் இரண்டும் தரமானதாகவும், மொத்த விலையில் தொடர்ச்சியாக கிடைக்கின்ற காரணத்தால் அதிக உற்பத்தித்திறன் மற்றும் உயர்ந்த தரத்தில் எங்களால் பொருட்களை தயாரிக்க முடிகிறது. மருதம் எண்ணெய் தயாரிப்புகளில் தரத்தில் எந்த சமரசமும் செய்யாத விடாப்பிடியான கொள்கையால் ஒரு முறை வாங்கிப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப வாங்குகின்றனர்” என்றார். அதற்கு சாட்சியாக, அப்போது, ஓரு வாடிக்கையாளர் 5 லிட்டர் கடலை எண்ணெய் வாங்கினார். அவரிடம் கேட்டதற்கு மூன்று ஆண்டுகளாக இங்குதான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். தரமானதாக இருக்கிறது என்றார்.
இந்த மாதிரி செக்கில் ஆட்டுகிற எண்ணெயின் விலை அதிகமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியை வாடிக்கையாளர்கள் அல்லது கடை உரிமையாளர்கள் எழுப்புகின்றனரே? என்ற கேள்வியைக் கேட்டபோது….
“தரமான மரச்செக்கில் தயாரிக்கப்படும் எண்ணெய் அதன் மூலப் பொருட்களின் விலையைக் கொண்டே சந்தை விலை நிர்ணயிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 2.5 கிலோவிலிருந்து 2.75 கிலோ வரை எடையுள்ள நிலக்கடலைப் பருப்பைக்கொண்டுதான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க முடியும்.நிலக்கடலைப்பருப்பின் விலை ரூ.80 முதல் ரூ.90வரை உள்ளது. அதன் மூலப் பொருட்கள் மட்டுமே ரூ.200 வரும். அதன்பின் செக்கில் ஆட்டுவதற்கான கூலி, இடம், மின்சார செலவு என எல்லாம் கணக்கிட்டால் ரூ.250 முதல் ரூ.280 வரை கடலை எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படலாம். நம்முடைய பாரம்பரியத்தை மறந்துவிட்டு, விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யும் தரமற்ற எண்ணையை பயன்படுத்தும்போது பல நோய்களுக்கு ஆட்பட்டு இறுதியில் மருத்துவச்செலவுகள் செய்கிறோம். ஆரோக்கியமான வாழ்வுக்கு தரமான மரச்செக்கு எண்ணையை பயன்படுத்த தொடங்குங்கள் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்” என்று புன்னகை செய்கிறார். அவரிடம் குடும்பத்தின் ஆதரவு பற்றி கேட்டபோது…
“ இந்தத் தொழிலில் என்னுடைய மனைவியின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கிறது. சில பணிகளை அவர்தான் செய்து கொடுக்கின்றார். நேரம் கிடைக்கும்போது எனக்கு உறுதுணையாக இருந்து உதவுகிறார். சுருக்கமாக சொல்லப்போனால் இருவரும் சேர்ந்தே செய்கிறோம் என்பதுதான் சரியாக இருக்கும். பசங்களைப் பொறுத்தவரை பெரியளவில் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். முதல் பையன் இன்பராஜ், சென்னை, ஆய்க்கர்பவனில் வருமான வரித்துறை ஆய்வாளராக இருக்கிறார். இரண்டாவது பையன் அருண்குமார், நந்தனம், வருமான வரித்துறை. ஜி.எஸ்.டி பிரிவில் சூப்பிரண்டன்டாக இருக்கிறார். மூன்றாவது பெண் உதயகுமாரி, அமெரிக்காவில் பணிபுரிகிறார். அதனால், என்னுடைய தொழில் நிமித்தமாக அவர்களிடம் பெரிய ஒத்துழைப்பை எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நான் இந்தத் தொழில் செய்வதை நினைத்து அவர்கள் பெருமைப்படுகின்றனர். அதுவே எனக்கு போதுமானது“ என்று தன்னம்பிக்கையுடன் பதில் கூறினார். எங்கள் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய உங்கள் பகுதியில் முகவர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்புக்கு: 9445653888