நடிகர்கள் : வுடிவேலு, ஃபகத்பாசில், உதயநிதி, கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார்
இயக்கம் : மாரிசெல்வராஜ்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
தயாரிப்பு : ரெட்ஜெயன்ட்
சேலத்தில் பகத் ஃபாசிலின் அப்பா கட்சியில் தொண்டனாக இருந்த மாமன்னன் (வடிவேலு) எம்எல்ஏவாக மாறியிருக்கிறார். பகத் ஃபாசில் தற்போது அந்த கட்சியின் தலைவராக இருந்துக் கொண்டே நாய்களை வைத்து ரேஸ் விடுவது, போட்டியில் தோற்ற நாயை அடித்துக் கொல்வது என ஆதிக்க மனநிலையில் வாழ்ந்து வருகிறார். எம்எல்ஏ மகனாக இருப்பதால் அவனுக்கும் அதிகாரத் திமிர் இருக்கும் என கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே கீர்த்தி சுரேஷ் உதயநிதியை ஒதுக்கி வருகிறார். எம்எல்ஏவாக அப்பா இருந்தாலும் 15 ஆண்டுகள் அவரிடம் பேசாமல் உதயநிதி ஸ்டாலின் அடிமுறை தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
சிறு வயதில் பொதுக் கிணற்றில் குளித்த அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்) மற்றும் அவனது நண்பர்களை அந்த ஊரில் சாதிய வெறி ஊறிய இடைநிலைச் சாதியினர் சிலர் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களை கல்லாலே அடித்துக் கொல்கின்றனர். அங்கிருந்து அடிபட்டு தப்பித்து வரும் அதிவீரன் அப்பாவிடம் சொல்லியும் அப்பா வடிவேலு பகத் ஃபாசிலின் அப்பாவிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை என்பதால் அப்பாவிடம் பேசாமல் தவிர்த்து வருகிறார்அதிவீரன். இப்படி எல்லோருடைய இன்ட்ரோவையும் கடகடவென சொல்லிவிட்டு கதைக்குள் வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடத்தி வரும் இலவச கல்வி நிலையத்துக்கு சுந்தரம் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் மாகாளி சுனில் (பகத் ஃபாசில் அண்ணன்) தொல்லை கொடுக்கிறார். உதயநிதி ஸ்டாலினை பற்றி புரிந்து கொள்ளும் கீர்த்தி சுரேஷ் அவரது அடிமுறை நடக்கும் இடத்திலேயே இலவச கல்வி நிலையத்தை நடத்தி வர ஆட்களை வைத்து அந்த இடத்தை சுனில் அடித்து நொறுக்குகிறார். அதற்கு பதிலடியாக சுனில் இடத்தை உதயநிதி, கீர்த்தி சுரேஷ் அடித்து நொறுக்க அது தொடர்பான சமரச பேச்சுவார்த்தை நடத்த வடிவேலுவை பகத் ஃபாசில் அழைக்கிறார்.
அங்கே முதல் பாதியின் இறுதியில் பகத் ஃபாசிலுக்கும் உதயநிதிக்கும் இடையே பிரச்சனை வெடிக்கும் காட்சியில் அப்பாவுக்காக அப்பாவின் சுயமரியாதைக்காக உதயநிதி குரல் கொடுக்கும் இடத்தில் தியேட்டர் தெறிக்கிறது. இரண்டாம் பாதியில், பகத் ஃபாசில் வடிவேலு மற்றும் உதயநிதியை கொல்லத் துடிக்க, மேலிடத்தில் இருந்து சிக்கல் வர, தேர்தலில் வெற்றிப் பெற்று மாமன்னனையும் அவன் மகனையும் அந்த இன மக்களையும் அடிமையாக்க பகத் ஃபாசில் போடும் திட்டம் என்ன ஆகிறது? என்பது தான் மாமன்னன் படத்தின் கதை.
வடிவேலு இதுவரை நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது நடிப்பு பல இடங்களில் மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக, நடிப்பின் உச்சம் தொட்ட பல முன்னணி நடிர்களை கண் முன் கொண்டு வருகிறார். குறிப்பாக, அவர் அழகம்பெருமாளிடம் முறையிடும் காட்சி மற்றும் காரில் பகத் ஃபாசிலை உன்னை சின்ன பையனா இருந்ததில் இருந்து தூக்கி வளர்த்தவன், காசை முழுங்கிட்டு உயிருக்கு நீ போராடினப்போ, சொருகெடுத்து உன்னை காப்பாத்தி விட்டவன் டா நானு என சொல்லிவிட்டு, துப்பாக்கி எடுத்து நீட்டி வெளியே போ எனச் சொல்லும் காட்சியும், முதல்வரிடத்தில் பேசும் வசனத்திலும் அடி பட்டையை கிளப்பி உள்ளார்.
வில்லனாக பகத் ஃபாசிலை பார்த்தாலே அந்த இன மக்களே அதே சாதிய உணர்வுடன் தான் இருப்பார்கள் எனத் தோன்ற வைக்கும் அளவுக்கு டைரக்டர் கேட்டதை விட எக்ஸ்ட்ரா நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உதயநிதி தான் வளர்க்கும் பன்றிகளுக்கு ஏதோ ஆகிறது என அதன் அழுகை குரல் கேட்டு அங்கே சென்று பார்க்க, ஒட்டுமொத்த பன்றிகளும் செத்துக் கிடக்கும் காட்சியில் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி உள்ளார். அதே போல அப்பாவுக்கு ஒண்ணுன்னா விட்டுக் கொடுக்காத இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான் பல இடங்களில் வரும் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் பின்னணியில் ஒலிக்கும் இசை மூலம் புல்லரிக்க வைக்கிறார். வடிவேலுவின் நடிப்பு மற்றும் மாரி செல்வராஜின் கூர்மையான வசனங்கள் படத்திற்கு பெரும் பலமாக மாறி உள்ளன. முதல் பாகம் முழுக்க பரபரப்பாக சென்றது ரசிகர்களை தியேட்டரில் கட்டிப் போட வைத்து விடுகிறது.
மாமன்னன் படத்தில் இத்தனை பிளஸ் இருக்கா? மைனஸே இல்லையா என்றால், முதல் பாதி முழுக்க ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த மாமன்னன் படம் 2ம் பாதியில் அப்படியே டிராக் மாறி உதயநிதியின் அரசியல் எதிர்காலத்தை கருத்திக் கொண்டு உருவாக்கப் பட்ட கட்சி படம் போல மாறிவிடுவதே படத்திற்கு பெரிய மைனஸ் ஆகத்தான் தெரிகிறது. ஆக மொத்தத்தில் அரசியல் பாதையில் செல்லும்போது இயக்குநர் தடுமாறியிருக்கிறார் என்பது பளிச்சென தெர்ந்துவிடுகிறது. அதை இய்க்குநர் கவனத்தில் கொண்டால் நல்லது.