சுத்தமும் சுகாதாரமும் அவசியம். ஆனால், அதீத சுத்த உணர்வு தேவையற்றது. குறிப்பாக, வெளியில் விளையாடக் கூடாது, மண்ணில் கால்படக் கூடாது என குழந்தைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள் தான், அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்’ என்ற பிரச்சினை உண்டாக காரணமாகிறார்கள். பிறந்தது முதல் ஒரு வயது வரை குழந்தைகளை கவனத்துடன் சுகாதாரம் பேணி வளர்க்க வேண்டும். 1 முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ‘குப்பையை தொடாதே, மழையில் நனையாதே, தரையில் விழுந்த உணவை சாப்பிடாதே’ என அவர்களின் புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக விளையாட அனுமதிக்கலாம்.
3 வயதுக்குப் பிறகு குழந்தைகள் வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவேண்டிய காலகட்டம். அப்போது, ‘விளையாட வெளியே போகக் கூடாது’, ‘மற்ற குழந்தைகளை தொட்டு விளையாடக் கூடாது’, ‘செடி, மரம் பக்கம் செல்லக் கூடாது’ என கட்டுப்பாடுகளை அடுக்கக் கூடாது.அதீத சுகாதார உணர்வின் ஓர் அங்கமாக சிலர் குழந்தைகளை அடிக்கடி கைகழுவ வைப்பது, குளிக்க வைப்பது என்றிருப்பார்கள். இதனால் அவர்கள் உடலில் இருக்கும் ப்ரோ பயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பலவீனமடைந்து விடும்.
தேவைக்கும் அதிகமான சுகாதார பேணலால் குழந்தைகளின் சுதந்திரமும் பல நேரங்களில் பாதிக்கப்படுவது உண்டு. குழந்தைகளை கைகழுவ வைப்பது அவர்களின் சுய நோய் எதிர்ப்புத் திறன் குறையும். இது தான் ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ்‘. இதன் விளைவாக எளிதில் வயிற்றுப் போக்கு, மூச்சு வாங்குதல், காய்ச்சல், சளி, தும்மல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதே சமயம் அவர்களின் உடலில் சுய நோய் எதிர்ப்புத் திறனும் குறையக் கூடாது. இது தான் ஆரோக்கியமான வழிமுறை. அதற்கு, தினமும் காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்குவது, மலம், சிறுநீர் கழித்ததும் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவுவது, இரு வேளை குளிப்பது, சாப்பிடும் முன் நன்றாகக் கை கழுவுவது, ஆசன வாயை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது, கை மற்றும் கால்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வது, 20, 30 நாட்களுக்கு ஒரு முறை முடிவெட்டி விடுவது, வாரத்துக்கு குறைந்த பட்சம் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வைப்பது, வாரம் ஒரு முறை நகங்களை வெட்டி விடுவது, விரல்களை வாயில் வைக்காமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட இந்த அடிப்படை சுகாதார பழக்கங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.