தொழில்முனைவு வாய்ப்பு தரும் ‘பாரூஸ்’ மசாலா நிறுவனம்!

இந்திய கான்டினென்டல் மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்த உணவு வகைகளும் மசாலாப் பொருள்களைச் சேர்க்காமல் கிட்டத்தட்ட முழுமையடையாது. பொதுவாக, இந்திய மசாலா பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஹார்மோன் கோளாறுகளை சமநிலைப்படுத்துவதற்கும் உதவுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மிகவும் அக்கறையுடன் இருக்கின்றனர்.

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான இந்திய மசாலா நறுமணப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால், இந்தியாவில் பாரம்பரிய மசாலா தயாரிக்கும் தொழிலுக்கு சிறப்பான எதிர்கால உருவாகி இருக்கிறது. அதைச் சிறப்பாக பயன்படுத்த நினைக்கும் சென்னை, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி. மகாலாட்சுமி “பாரூஸ் மசாலா அண்ட் பைசஸ்” என்ற பிராண்ட் பெயரில், ஹெர்பர் மசாலாக்கள் பாரம்பரியா மசாலாப் பொருட்கள் மற்றும் 22 வகையான மூலிகை தேநீர் தயாரித்து சந்தைப்படுத்தும் தொழிலைத் தொடங்கியிருக்கிறார். அவரை, ஒரு மதியப் பொழுதில் சந்தித்து உரையாடியபோது…

“ இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் உண்ணும் உணவில் சத்து இருக்கிறதா எனப் பார்ப்பதைவிட அதில் விஷம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். எனவே, எனக்கு பாரம்பரிய தானியங்கள் மற்றும் மசாலாக்களில் சமைக்கும் எண்ணம் உருவானது. என்னுடைய பசங்களும் படிப்பு தொடர்பான பணிகளுக்கு வெளிநாடு சென்று விட்டதால், நேரம் தாராளமாக இருந்தது. நாமும் பாரம்பரிய பொருட்கள் சார்ந்து ஒரு வணிகம் தொடங்கலாம் என்ற எண்ணம் உண்டானது.

திருமதி. மகாலாட்சுமி Mellinam
திருமதி. மகாலாட்சுமி

‘பாரூஸ்’ மசாலா நிறுவனம்

“பாரூஸ்” என்ற பெயரில் பாரம்பரிய மசாலா மற்றும் மூலிகை தேநீர் பாக்கெட் தயாரித்து சந்தைப்படுத்தும் எண்ணம் ஏற்பட்டது. காரணம், எனக்கிருந்த அந்த உணவு தயாரிக்கும் அனுபவம்தான். உணவின் சுவைக்கு நான் சொந்தமாக தயாரித்துப் பயன்படுத்திய பாரம்பரிய மசாலாக்கள்தான் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் பயன்படுத்திய மசாலாக்கள் முழுவதும் எந்திரப் பயன்பாடு இல்லாமல் வறுத்தெருத்து அரைக்கப்படுபவை. குறிப்பாக, முதல் தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தினேன்.

அதனால், பாரம்பரிய மசாப் பொருட்களை தயாரித்து பாக்கெட் செய்து நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமும் சந்தைதப்படுத்தலாம் என்று தோன்றியது. இதற்கு என் கணவர் மற்றும் பசங்களும் ஒத்துக்கொண்டனர். 2018 ம் ஆண்டு பராம்பரிய மசாலாக்கள் மற்றும் மூலிகை தேநீர் தயாரித்து பாக்கெட் செய்து சந்தைப்படுத்தும் தொழிலை தொடங்கினேன். அப்புறம் இரண்டாண்டுகள் கொரானா காலம் என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டோம். இப்போது, எங்கள் சந்தையை மீண்டும் துரிதப்படுத்தியுள்ளோம்.

'பாரூஸ்’ஆளிவிதை இட்லி பொடி Mellinam
‘பாரூஸ்’ ஆளிவிதை இட்லி பொடி

நாங்கள், சாம்பார் பொடி, புளியோதரைப் பொடி, காரக் குழம்பு/ மீன் குழம்பு மசாலா, கோழி மசாலா, மட்டன் மசாலா, சில்லி இட்லி பொடி, முருங்கை இலைகள் இட்லி பொடி, ஆளிவிதை பருப்பு தூள், ரசப் பொடி, கரம் மசாலா, தயார் செய்யப்பட்ட தோசை கலவை (ரெடிமிக்ஸ்), பொங்கல் ரெடி மிக்ஸ், சாம்பார் ரெடி மிக்ஸ், களி ரெடிமிக்ஸ், அடை ரெடிமிக்ஸ், மூலிகை அடை ரெடிமிக்ஸ் போன்ற பல பாரம்பரிய மசாலாப் பொருட்கள் மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்களை தயாரிக்கிறோம். இவை தவிர, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மூலிகை பானங்களான ஃப்ளோரோம்யூன் தேநீர், மூட்டு வலி நிவாரண தேநீர், மலச்சிக்கலுக்கான மென்மையான தேநீர், தொண்டை புண் தேநீர், மருதம்பட்டை தேநீர், நன்னாரி தேநீர், எலுமிச்சை புல் தேநீர், துளசி புதினா

தேநீர், குளிர்ச்சிக்கான மூலிகை தேநீர், கிளாசிக் பச்சை தேயிலை வெள்ளை தேநீர், கவலை நிவாரண தேநீர், முடி உதிர்வை கட்டுப்படுத்தும் தேநீர், ஆக்னே நிவாரண தேநீர், உடல் எடையை குறைக்கும் மூலிகை தேநீர் என 22 வகையான மூலிகை தேநீர் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துகிறோம். மேலும், பெண்கள் தங்களுடைய மேனியைப் பாதுகாக்கவும், அழகுபடுத்துவதற்குத் தேவையான மூலிகைப் பொருட்களான கூந்தல் கழுவும் மூலிகைத் தூள்,குளியல் மூலிகை தூள், மூலிகை ஷாம்பு, ஹெர்பல் ஆன்டிடாண்ட்ரஃப் ஷாம்பு, மூலிகை சோப்புகள்,ஷவர் ஜெல், முக கிரீம் வகைகள், மூலிகை உதடு தைலம், மூலிகை இதழ் பொலிவு தைலம் என பல இயற்கையாக அழகுப்படுத்தும் பொருட்களையும் தயாரித்து சந்தைப்படுத்துகிறோம்.

'பாரூஸ்’  தேநீர் Mellinam
‘பாரூஸ்’ தேநீர்

அதற்கு முன்பாக, எங்களுடைய தயாரிப்புகள் முதல்தரமானவை என்பதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். முதலாவதாக முதல் தர மூலப்பொருட்களை வாங்குகிறோம், இரண்டாவது மூலப்பொருட்களை நன்றாக சுத்தம் செய்கிறோம். அதாவது, மூலப்பொருளில் கற்கள் அல்லது தூசி அழுக்கு ஆகியவை இல்லாமல் சுத்தப்படுத்துகிறோம். அடுத்தாக, கச்சிதமான அளவில் அவற்றை நன்றாக உலர்த்துகிறோம். இவ்வாறு, உலர்த்துவதன் மூலமாக பாக்டீரியா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் அகன்றுவிடும். நான்காவதாக அவற்றை கச்சிதமான நிலைகளில் வறுப்பது அவசியம்.

இதற்கு நாங்கள் எந்திரம் எதுவும் பயன்படுத்தாமல் கைகளாலேயே வறுத்தெடுக்கிறோம். இதன்மூலம் சம்பந்தப்பட்ட பொருட்களின் நிறம் மற்றும் மணம் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. ஐந்தாவதாக, பாரம்பரிய கருவிகளான கல்லறவை எந்திரம் மூலம் அவற்றை நன்றாக அரைக்கிறோம். அடுத்ததாக, அரைக்கப்பட்ட பொருள்களை தகுந்த வகைகளின்படி பிரிக்கிறோம். அவற்றை நன்றாக சலித்து எடுக்கிறோம். கடைசியாக அவற்றை நன்றாக பேக்கிங் செய்து சந்தைக்கு அனுப்புகிறோம். சுருக்கமாகச் சொன்னால், எங்களுடைய தயாரிப்பு ஏற்றுமதி தரம் வாய்ந்தவை.

'பாரூஸ்' குழம்பு மசாலா Mellinam
‘பாரூஸ்’ குழம்பு மசாலா

நாங்கள் தயாரிக்கக்கூடிய பாரம்பரிய மசாலாப் பொருட்களில் எந்தவித கலப்படமோ அல்லது வேதிப்பொருட்கள் கலப்போ கிடையாது. வேதிப்பொருட்கள் கலப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை சென்னையில் உள்ள என்.டி.பி.எல். தரப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றிருக்கிறோம். உறவினர் ஒருவர் ஜெர்மனியில் இருக்கிறார். அவர் என்னுடைய பராரம்பரிய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகை தேநீர் பொருட்களை சந்தைப்படுத்துவதாக சொன்னார்.

அதற்காக என்னுடைய பொருட்களை ஜெர்மன் நாட்டின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். எந்தவித வேதிப்பொருட்களும் சேர்ப்பில்லை என்று ஜெர்மனி அரசு சான்றிதழ் தந்திருக்கிறது. அதனால், ஜனவரி 2023 முதல் ஜெர்மனிக்கு ‘பாரூஸ்’ பிராண்டட் மசாலாப் பொருட்களை அனுப்பி வைக்க உள்ளேன்.

'பாரூஸ்' நாட்டு சர்க்கரை Mellinam
‘பாரூஸ்’ நாட்டு சர்க்கரை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையில் சில பகுதிகளுக்கு முகவர்கள் நியமித்திருக்கிறேன். சில சூப்பர் மார்க்கெட் கடைகளுக்கு சந்தைப்படுத்தியுள்ளேன். திருநெல்வேலி, கோயமுத்தூர், மதுரை என சில மாவட்டங்களில் மட்டும் முகவர் நியமித்திருக்கிறேன். வேறு மாவட்டங்களுக்கும் முகவர் வாய்ப்பு தர தயாராக உள்ளோம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலிருந்தும் முகவர்களை எதிர்பார்க்கிறோம். புனே மற்றும் கொல்கொத்தா ஆகிய தலைநகரங்களுக்கும் முகவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்.

இதுமட்டுமல்ல இல்லத்தரசிகளுக்கு குறைந்த முதலீட்டில் தொழில்முனைவோராகும் வாய்ப்பும் தர உள்ளோம். இல்லத்தரசிகள் ரூ.2000 முதலீடு செய்தால் போதும், அவர்களுக்கு தேனவயான அனைத்து மசாலாப் பொருட்களும், மூலிகைத் தேநீர் பவுச்சுகளும் கொடுக்கிறோம். அவர்கள் விற்கும் பொருட்களுக்கு தேவையான கமிஷனும் கொடுத்து விடுகிறோம். இந்தத் தொழிலை வாய்ப்புள்ள அனைவரும் செய்யலாம்“ என்கிறார் திருமதி. மகாலட்சுமி. இவர், மூலிகை தொடர்பான பட்டயப்படிப்பு படித்து முடித்திருக்கிறார். இவை தவிர, கூந்தல் பராமரிப்பு தொடர்பான பட்டயப் படிப்பும் படித்து முடித்திருக்கிறார்.

தொடர்புக்கு – 9486355779, www.parusmasala.com

– ஆ.வீ.முத்துப்பாண்டி