துப்பறிவாளர் யாஸ்மினின் நேர்காணல்!

பெண்கள் பெரும்பாலும் தொடாத ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். சாதித்திருக்கிறேன் – என்கிறார் பெண் டிடெக்டிவ்,அதாவது துப்பறிவாளர் யாஸ்மின். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக துப்பறிவாளராக இருக்கும் இவர், உடை அணிவதையும் மேக்கப் போடுவதையும் மற்றவர்களிடம் பேசுவதையும் விமர்சிப்பவர்கள் தனது துப்பறியும் வேலையை பல மடங்கு கூடுதலாகவே விமர்சிக்கிறார்கள் என்று புன்னகைக்கிறார். இனி அவர் கூறியதாவது:

“திருமணம் செய்து குழந்தைகள் பெற்ற பிறகுதான் டிடெக்டிவ் ஆக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்தது. நான் ஒரு வெற்றிகரமான டிடெக்டிவ். என்னால் உறுதியாக சொல்ல முடியும். மனைவியை சந்தேகப்படும் கணவர், கணவரை கண்காணிக்கக் கோரும் மனைவி, மகன் அல்லது மகளின் நடவடிக்கைகளுக்கு பின்னால் ஏதேனும் மர்மம் இருக்கிறதா என்று தேடும் பெற்றோர் என பலரும் என்னுடைய வாடிக்கையாளர்கள். ஒருவரை வேலைக்குச் சேர்ப்பதற்கு முன்னதாக அவரது பின்னணியைத் தெரிந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள், அலுவலகத்துக்குள் நடக்கும் பிரச்னைகளுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய விரும்பும் நிர்வாகம் போன்றவர்களும் என்னை நாடுகிறார்கள்.

பெண் டிடெக்டிவ் யாஸ்மின் Mellinam
பெண் டிடெக்டிவ் யாஸ்மின்

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இப்படி ஒரு துறை இருப்பதே எனக்குத் தெரியாது. எட்டு வயது இருக்கும். அப்போது ‘விதி’ திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வாங்கித் தரும் வழக்கறிஞராக சுஜாதா நடித்திருப்பார். போராடி நீதி வாங்கித் தருவார். அதைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உழைக்கும் வழக்கறிஞராக ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய இளம் வயது ஆசையாக இருந்தது. எது செய்தாலும் அதை மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அப்போதுகூட டிடெக்டிவ் என்ற ஒரு துறை இருப்பதே எனக்கு தெரியாது.”

” திருமணம் ஆகி சுமார் 10 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு ஆள் எடுப்பதற்கான செய்தித்தாள் விளம்பரத்தைப் பார்த்தேன். உடனே அவர்களுக்கு போன் செய்து வருவதாகக் கூறினேன். நான் இருந்ததோ கோயம்புத்தூர். அந்த நிறுவனம் செயல்படுவது சென்னையில் இருந்தது. நமக்கு முன் அந்த வேலைக்கு வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் பயணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உடனடியாக செல்லவேண்டும் என்ற எண்ணம்தான் என்னை உடனடியாக அதற்கு ஒப்புக் கொள்ள வைத்தது.” என்கிறார்.

“வேலை வேறு யாருக்கும்போய் விடக்கூடாது என்று அவசர அவசரமாகச் சென்னை வந்து பார்த்தபிறகுதான் தெரிந்தது, இந்தத் துறைக்கு பெண்கள் யாரும் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள் என்று. அப்படியே வந்தாலும் ஒரு வாரம், ஒரு மாதம் என குறுகிய காலத்தில் வெளியேறிவிடுவார்கள் என்பதும் அப்போதுதான் புரிந்தது”

ஆனால் யாஸ்மின் கணவர் இப்படிப்பட்ட வேலைக்குச் செல்வதற்கு விரும்பவில்லை. விளம்பரத்தைப் பார்த்துவிட்டு இப்படியொரு துறையில்தான் சேர வேண்டும் என்று நினைத்திருத்தேன் என்று அவர் கணவரிடம் கூறியபோது, “வேண்டவே வேண்டாம்” என்று கூறி மறுத்திருக்கிறார். அதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பது உனக்குத் தெரியாது. உனது வேலையால் குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும்கூட பாதிப்பு ஏற்படும். அதனால் அந்த வேலைக்குப் போகக்கூடாது என்று கூறி மறுத்திருக்கிறார்.

“ஆனால் எனக்கு அப்படி முடங்கியிருக்க விருப்பமில்லை. என்ன ரிஸ்க் இருக்கிறது என்பதை முதலில் பார்க்கிறேன் என்று கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனாலும் எனது கணவர் சமாதானமாகவில்லை. கடைசியில் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டு என்னை கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் அழைத்து வந்தார். வேலை வேறு யாருக்கும்போய் விடக்கூடாது என்று அவசர அவசரமாகச் சென்னை வந்து பார்த்தபிறகுதான் தெரிந்தது, இந்தத் துறைக்கு பெண்கள் யாரும் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள் என்று. அப்படியே வந்தாலும் ஒரு வாரம், ஒரு மாதம் என குறுகிய காலத்தில் வெளியேறிவிடுவார்கள் என்பதும் அப்போதுதான் புரிந்தது” என்றார்.

ஆனாலும் அந்தத் துறையிலேயே தொடருவதற்கு யாஸ்மின் முடிவெடுத்திருக்கிறார். முதலில் வேறு நிறுவனத்துக்காக வேலை செய்த அவர், பின்னர் தனியாக நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். விற்பனை செய்யும் பெண், மருத்துவமனை ஊழியர், இல்லத்தரசி, வீட்டு வேலை செய்பவர்கள் என பலவிதமான வேடங்களில் சென்று தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.

“இப்படியெல்லாம் நடக்குமா என்று நான் நினைத்துக் கொண்டிருந்தவற்றை எல்லாம், நான் டிடெக்டிவ் ஆன பிறகு நேரிலேயே பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனக்கென்று ஒரு எதிக்ஸ் (அறம்) வைத்திருக்கிறேன். டிடெக்டிவ் என்றால் ஒருவரை பின் தொடருவது அவரைப் பற்றித் தகவல்களை தருவது போன்றவை மாத்திரம் அல்ல. பெரும்பாலும் ஆண் – பெண் உறவுகளுக்கு இடையே உள்ள சந்தேகம் தொடர்பான வழக்குகளே அதிகம் வருவதாகக் கூறும் யாஸ்மின், ஒரு வழக்கை புலனாய்வு செய்து முடித்த பிறகு வாடிக்கையாளரிடம் அறிக்கையை கொடுப்பதற்கு முன்பாக அதை ஏற்பதற்கு அவர்களைத் தயார் செய்ய வேண்டியிருக்கும்“ என்கிறார்.

துப்பறிவாளர் யாஸ்மின் Mellinam
துப்பறிவாளர் யாஸ்மின்

“அறிக்கை கொடுப்பதற்கு முன்பாக அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அந்த அறிக்கையை அவர்களுக்கு எப்படிக் கொடுப்பது என்று முடிவு செய்வேன். ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் எதிர்மறையான அறிக்கையைத்தான் தர வேண்டியிருக்கும். அப்படித் தரும்போது அந்தக் குடும்பத்தில் என்ன நேரும் என்பதையும் கணிக்க வேண்டும்”

“ஒரு வேலைக்குச் சென்றால் இத்தனை மணிக்குத் திரும்பிவிடலாம் என்று வீட்டில் கூறிவிட்டுச் செல்ல முடியும். இந்த வேலையில் நேரம் காலம் கிடையாது. எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட வேண்டும், எப்போது திரும்பி வர முடியும் என்பதெல்லாம் உறுதியாகத் தெரியாது. அதுவும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன வேலை செய்கிறோம் என்றே தெரியாது. அதனால் மிகவும் சந்தேகத்துடனேயே பார்ப்பார்கள். ஆனால் இதையெல்லாம் நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை” என்கிறார். சவால்களை எதிர்கொண்டு ஒரு டிடெக்டிக் ஆக விரும்புவோருக்கு யாஸ்மின் கூறும் மந்திரம் ஒன்று இருக்கிறது.

துணிச்சலாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். நம்மை நம்பி நம்மிடம் வந்து ஒருவர் தன் கதையைச் சொல்கிறார் என்றால், அது நமக்கே நடப்பதாகக் கருதி அதில் நேர்மையாக இருக்க வேண்டும்.