நடிகர்கள்: கவின், அபர்ணாதாஸ், விடிவி கணேஷ், கே. பாக்யராஜ், ஐஸ்வர்யா
இயக்கம் : கணேஷ்பாபு,
இசை : ஜென் மார்டின்
ஒரே கல்லூரியில் படிக்கும் கவினும், அபர்ணா தாஸும் காதலிக்கிறார்கள். காதல் நெருக்கத்தால் அபர்ணா தாஸ் கர்ப்பமடைய, கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு அபர்ணா தாஸுடன் கவின் குடும்ப வாழ்க்கையை தொடங்குகிறார். ஆனால், வறுமை காரணமாக இவர்களது வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட, இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இதற்கிடையே குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு காணாமல் போகிறார்.கைக்குழந்தையுடன் தனிமையில் கஷ்ட்டப்படும் கவின், அந்த குழந்தையை வளர்ப்பதோடு, பாதியில் விட்ட படிப்பை தொடரவும் செய்கிறார். காலங்கள் ஓட கவின் நல்ல நிலமைக்கு வருவதோடு, தனது குழந்தையை நல்லபடியாக வளர்த்து வரும் நிலையில், மீண்டும் அபர்ணா தாஸை சந்திக்கிறார்.. அதன் பிறகு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதையும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு சொல்வதே ‘டாடா’.
காதல், கணவன், அப்பா என மூன்று வேடங்களிலும் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார் கவின். எந்த இடத்திலும் ஓவராக நடிக்காமல் அளவாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். அழுகையே வராது என்று ஆரம்பக் காட்சியில் கூறியவர், தன்னையும் அறியாமல் கண் கலங்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார். சிறு சிறு இடங்களில் மிக நேர்த்தியாக நடித்து கவனம் பெறும் கவின், தனது நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.
முதல் படத்திலேயே நாயகனுக்கு இணையான வேடத்தில் அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகளில் குறைவான வசனங்கள் பேசியிருந்தாலும் கண்களினாலேயே நடித்து அசத்தியிருக்கிறார். இறுதிக் காட்சியில் தனக்கு பிறந்த குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்ததும் வெளிப்படுத்தும் நடிப்பு சிறப்பு.
சிறிய வேடம் என்றாலும் கவனம் பெறும்படி நடித்திருப்பதோடு, பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.விடிவி கணேஷ்.அதில் அவர் நடித்த விதமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், கமல், ஃபவுசி மற்றும் குழந்தை நட்சத்திரம் இலன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
எழிலரசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. கல்லூரி, ஐடி நிறுவனம், குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பு என கதையில் வரும் களங்களையும், கதாபாத்திரங்களையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் காட்சிகள் மூலம் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜென் மார்டினின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை மூலம் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருப்பவர், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பின்னணி இசையையும், பீஜியமையும் கொடுத்து கவனம் பெறுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கணேஷ் கே.பாபு, கதை எதுவாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் மட்டுமே ரசிகர்களை கவர முடியும் என்பதை உறுதி செய்துள்ளார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு எளிமையான கதையை இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான படமாகவும், அதே சமயம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.