கனெக்ட் திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் : நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கேர், அனியாநபீசா
இயக்கம் : அஸ்வின் சரவணன்
இசை : ப்ரித்வி சந்திரசேகர்
தயாரிப்பு : விக்னேஷ் சிவன்
மருத்துவரான வினய், கொரோனா வார்டில் போராடி நோயாளிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தானும் கொரோனா பாதித்து பலியாகிறார். திடீரென்று அப்பா இறக்கவே அவரை ஒரு ஆவித் தொடர்பாளர் மூலம் அழைத்துப் பேசப் போய், ஆன்லைன் வழியே ஒரு கொடூரப் பேயை வீட்டில் நுழைய விட்டு சிறுமி அனியாநபீசா சிக்கலுக்குள் மாட்டிக்கொள்கிறார். அதனிடமிருந்து எப்படித் தன் மகளை சூஷன் (நயன்தாரா) மீட்கிறார் என்கிற ஒருவரி கதை. ஆனால், அதை நவீன தொழில் நுட்ப உத்திகளைக் கைக்கொண்டு கொஞ்சம் மிரட்டி இருக்கிறார் இயக்குனர்.
நயன்தாரா நன்றாக நடிப்பார் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவரே இன்னும் கனவுக் கன்னியாக இருக்கும் நிலையில் ஒரு பதின்பருவ வயதுப் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க ஒத்துக் கொண்டது அபார அர்ப்பணிப்பு. என்ன செய்ய சொந்தப்படமாச்சே… மேக்கப் போட்டுத்தான் ஆகணும். பாசம், அன்பு, பயம், பதற்றம் எல்லா உணர்ச்சிகளையும் அழகாக அதே சமயம் அளவாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நயன்தாரா..
அதே சமயம் அவருக்கு இணையாக அற்புத நடிப்பில் அசத்தி இருப்பது அவரது மகளாக வரும் அனியா நபீசாதான். என்ன ஒரு அசுர அல்லது பேய்த் தனமான நடிப்பு..? தனியாக வெளிநாடு சென்று தன்னால் வாழ்ந்து விட முடியும் என்று அம்மாவிடம் வாதம் செய்யும் தைரியம் என்ன..? ஆனால், ஒரு பேயிடம் சிக்கிக் கொண்டு படும் துன்பங்கள்தான் என்ன..? ஒவ்வொரு கட்டத்திலும் அந்தச் சின்னப் பெண் படும் துன்பங்கள் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள்.
சின்னக் கேரக்டர் என்றாலும் அளவாக, ஆழமாக செய்திருக்கிறார் வினய். அண்மையில் சில படங்களில் வில்லனாகப் பார்க்க நேர்ந்த அவரை இதில் நேர்மறையாகப் பார்க்க நேர்ந்தது சிறப்பு. சத்யராஜின பாத்திரமும் அப்படியே. மகள் மற்றும் பேத்தியின் நிலை கண்டு நிலை குலைந்து போகும் அவர் நடிப்பு அட்டகாசம். ஒரு மனிதனுடைய கையறு நிலையை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.!இவர்களுடன் மும்பைப் பாதிரியாராக வரும் இந்தி நடிகர் அனுபம் கேர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே அத்தனை உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கும் அனுபம் கேர் நடிப்பில் அனுபவமும், உண்மையை சொல்லணும்னா அவர் முகம் காட்டியபின்தான் காட்சி வேகம் எடுக்கிறது.
ப்ருத்வி சந்திரசேகரின் இசை, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவு, ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு என்று எல்லா அம்சங்களுமே அதிகபட்ச நேர்த்தியுடன் கனெக்ட் ஆகி இருக்கிறது. பாராட்ட இத்தனை அற்புதங்கள் இருந்தும் நம்மைப் படத்துடன் கனெக்ட் ஆக விடாமல் செய்யும் விஷயம், நாம் அறிந்த வாழ்க்கை முறையில் இல்லாமல் ஏதோ புதிய வாழ்க்கை முறையாக இருப்பதால் நம்முடன் கனெக்ட் ஆக வில்லை.
செல்போன் சார்ஜ் செய்ய மட்டும் இருக்கும் மின்சாரம், மற்ற நேரங்களில் இல்லாமல் எந்நேரமும் அந்த வீட்டில் மெழுகு வர்த்தி மட்டுமே எரிந்து கொண்டிருக்கிறது. நம்மை பயமுறுத்துவது மட்டுமே நோக்கம் என்பதை மாற்றி இன்னும் நம்பகத்தை ஏற்படுத்தி இருந்தால் நம்மை நன்றாகவே ‘எங்கேஜ்’ செய்திருக்கும் படம்.