பம்பர் திரை விமர்சனம்

பம்பர் திரை விமர்சனம்

Now Watch the Bumper Tamil Movie Review Here

நடிகர்கள்: வெற்றி, ஹரிஷ் பெராடி, ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து, கவிதாபாரதி, தங்கதுரை
இயக்கம்: செல்வகுமார்
இசை ; வசந்த் கோவிந்தா
தயாரிப்பு : எஸ் தியாகராஜன்

நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து திருடுவது, டாஸ்மாக் ‘லாக்’கான நாட்களில் ‘கள்’ளத்தனமாக கல்லா கட்டுவது என்றெல்லாம் குற்றங்களோடு ஜாலியாக வாழ்க்கை நடத்துகிற இளைஞன் புலிப்பாண்டி. லோக்கல் போலீஸ் ஏட்டு கவிதாபாரதி அவனுக்கு உதவி செய்கிறார்.அப்புறமென்னஞ் பணத்துக்காக அதுவரை செய்யாத பெரிய குற்றத்தை செய்யத் தயாராகிறான். அந்த நேரமாகப் பார்த்து புதிதாக வருகிற உயரதிகாரி புலிப்பாண்டியையும் அவனுடைய கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து கைது பண்ணி குண்டாஸில் போட முயற்சிக்கிறார்.

Mellinam Tamil Bumper Movie Review 4 Vetri Shivani

புலிப்பாண்டி தந்திரமாக அய்யப்பனுக்கு மாலை போட்டு, தற்காலிக நல்லவனாகி சபரிமலை ஏறுகிறான். அங்கு தென்பட்ட லாட்டரி வியாபாரியிடம் 10 கோடி பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறான். வாங்கியவன் தூக்கக் கலக்கத்தில் அந்த சீட்டை அங்கேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விடுகிறான். ஆனால், அவன் வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசு விழுகிறது. அந்த பணத்தை அவன் வாங்க முடியாத அளவுக்கு சிக்கலும் உருவாகிறது. அதையெல்லாம் அவன் எப்படி சமாளிக்கிறான்? மீதிக்கதை.

படத்தின் ஹீரோ வெற்றி என்றாலும் கதையின் நாயகன் ஹரீஷ் பெராடி. வயோதிக இஸ்லாமியராக நடித்திருக்கிறார். செல்லிலும் செயலிலும் நேர்மை நியாயம் என பேசுவதால் மகனுக்கு பிடிக்காதவர்.நேர்மையான அதிகாரியாக, கொடூர வில்லனாக பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு. அவரது இந்த நடிப்பு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படத்திற்கு அவரக்கு அவார்ட் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற வெற்றிக்கு இந்த கதையும் அப்படியே அமைந்திருக்கிறது. ஆனால், ஒரு கமர்ஷியல் நாயகனாக அடியெடுத்து வைத்திருக்கிறார். நடிப்பில் சோடைபோகாமல் நடித்திருக்கிறார். வெற்றி படத்தில் இருக்கிறார் என்பதை விட வெற்றிப் படத்தில் அவர் இருக்கிறார் என்பதுதான் உண்மை.

Mellinam Tamil Bumper Movie Review 3 Vetri Shivani

‘பிக்பாஸ்’ ஷிவானிக்கு வழக்கமான ஹீரோயின் வேடம். நாய்சேகர் மாதரியான படங்களில் கவர்ச்சியில் கிறங்கடிப்பவருக்கு ‘பம்பர்’ பரிசாக பாவாடை தாவணி போட்டு அழகு பார்த்திருக்கிறது. அம்மணியின், காட்சிகளுக்கேற்ற சின்னச் சின்ன முகபாவங்கள் கச்சிதம். காவல்துறை அதிகாரியாக கவிதா பாரதி. அதிகாரம் அயோக்கியத்தனம் இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து பிரதிபலிக்கும் வேடத்தில் அவரது நடிப்பு நேர்த்தி.

வட்டிக்கு விடுபவராக ஜிபி முத்து. நடித்திருக்கிறார். நல்ல மனிதர் எனத் தனித்து தெரிகிற பாத்திரம். பரிசுப் பணத்தை வாங்க புறப்படும் நாயகனுக்கு தன் காரை கொடுத்தனுப்பும்போது கவனம் ஈர்க்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட வசனம் சரியாக செட்டாகி இருப்பது சூப்பர். நாயகனின் நண்பர்கள், ஹரீஷ் பேரடியின் குடும்பத்தினர், லாட்டரி சீட்டு ஏஜெண்ட் என அத்தனை கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதற்காக படக்குழுவை தனியாக பாராட்டலாம். அதே நேரத்தில் இயக்குநர் நுண்ணரசியல் பேசுகிறார். வெளித்தெரியாதபடி மதம் சார்ந்த சிலவற்றை போகிறபோக்கில் பதிவு செய்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். அதே இடத்தில் பெரியார் சிலையையும் காட்டி சமூகநீதியை நிலைநாட்டுகிறார். வட்டார வழக்கு வசனங்களிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.

Mellinam Tamil Bumper Movie Review 1 Vetri Shivani

தூத்துக்குடியின் சுற்று வட்டாரம், சபரி மலையின் நீள அகலம், கேரளத்து பசுமையின் செழுமை என பலவற்றை அதனதன் தன்மை மாறாமல் தன் கேமராவுக்குள் காட்சிப்படுத்தியிருக்கிறார் வினோத் ரத்தினசாமி.கோவிந்த வசந்தா இசையில் பாடல்கள் மனதுக்கு இதம் தந்து கடந்துபோக, பின்னணி இசையில் காட்சிகளுக்கேற்றபடி, காட்டுகிற மதத் தலங்களுக்கேற்றபடி பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் ‘மசாலா கஃபே’ கிருஷ்ணா. அறிமுகப் பகுதி, எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நகர்கிற சீன் என சிலபல குறைகள் இருந்தாலும் எளிய பட்ஜெட்டில் அறம் சார்ந்த கதையம்சத்துடன் வந்திருக்கும் இந்த படம், தமிழ் திரை ரசிகர்களுக்கும், குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளரும் வரவேற்கும் வித்தில் வந்திருக்கிறது!