பாரம்பரிய அரிசி வகைகளில் முக்கியமானதொரு அரிசி காட்டுயாணம். கஞ்சி, இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற அரிசி ரகம். காட்டுயாணம் நெற்கதிரின் உள்ளே ஒரு காட்டுயானை வந்து நின்றிருந்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உயரம் இருக்கும் என்பதாலும் காட்டுயானையின் அளவிற்கு எலும்பிற்கு வலுசோர்க்கும் என்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கின்றனர் நம் முன்னோர்கள்.
காட்டுயாணம் அரிசி – பயன்கள்:
காட்டுயாணம் அரிசியை சமைத்து அதில் ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டு வைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீராகாரத்தை அருந்தினால் வயிற்றுப்புண், புற்றுநோயினால் ஏற்பட்டிருக்கும் ரணங்கள் ஆரும். நேரடி விதைப்பின் மூலமாகவும், நாற்றுவிட்டு நடவு செய்வதன் மூலமாகவும் இந்த அரிசி விளைவிக்கப்படுகிறது. நெல் மணி பூக்கும் பருவத்தில் இளம்பச்சையாகவும், பால்பிடிக்கும் பருவத்தில் கருப்பு நிறத்திலும், விளைந்த பருவத்தில் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மழை, வறட்சி இரண்டையும் தாங்கி வளரக்கூடியது. 185 நாட்கள் பூமியில் இருக்கும், அதிக நாள் பூமியிலிருந்து அதிகப்படியான சத்துக்களை நமக்கு அளிக்கக்கூடியது இந்த காட்டுயாணம் அரிசி வகை. ஏழடி உயரம் இருப்பதால் வைக்கோல் அதிகம் கிடைக்கும் ரகம்.
நாகப்பட்டினம் மாவட்டம் கடைமடை பகுதியான தலைஞாயிறைப் பிறப்பிடமாகக் கொண்டது. களை எடுக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு முறை விதைத்தால் அறுவடையின்போது சிதறும் நெல் மணிகள் ஆடிப்பட்டத்தில் முளைத்துவிடும். தை மாதத்தில் அறுவடைக்கு வரும் நம்முடைய முன்னோர்கள் நீரில் நீந்தி சென்று படகில் அறுவடை செய்துள்ளார்கள். வைக்கோல் திரி கொண்டு மால்போட்டு இழுத்து வந்து மேட்டுப் பகுதியில் சேமித்து, கதிரடித்து நெல் எடுத்துள்ளார்கள். குடிசை வீடுகளுக்கு வைக்கோல் போடும் பழக்கம் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்துள்ளார்கள். இப்பவும் கூட கிராமப் பகுதியில் கூரைக்கு வைக்கோல் போடும் பழக்கம் இருந்து வருகிறது.
புதிதாக கீற்று போட்டு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை காட்டுயாணம் வைக்கோலை கூரையில் போட்டு வந்தால் எட்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் குடிசையைப் பாதுகாக்க முடியும். காரணம், இதன் வைக்கோல் நாணல் தண்டு போல் இருக்கும். ஏழைகளின் குடிசையைப் பாதுகாக்கின்ற வைக்கோலாகவும் காட்டுயாணம் இருந்து வந்துள்ளது. இந்த தகவல்களை நோய் தீர்க்கும் பாரம்பரிய நெல் என்ற புத்தகத்தில் மறைந்த நெல்.ஜெயராமன் ஐயா கூறியுள்ளார்;. அறுவடை முடிந்து அந்த அடி முடிச்சு மக்குவதற்கு ஆறுமாத காலம் ஆகுமாம். அதன்பிறகு நுண்ணுயிரிகள் வயலில் பெறுகுவதால் இந்த ரகத்திற்கு ரசாயனங்கள் தேவையில்லை என்பது புரிகிறது.
காட்டுயாணம் அரிசி பசியைத் தாமத்தப்படுத்துவதால் இரத்தத்தில் சார்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ளும். எடை குறைப்பிற்கும், எலும்பு சத்து குறைபாட்டிற்கும் இதன் அவல் வகை சிறந்த உணவாகும். இருதய நோயாளிகளுக்கு சிறந்த மருந்தே உணவாகும். இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின்ஸ், பிகாம்ளக்ஸ் நிறைய இந்த அரிசியில் உண்டு. எளிதில் சீரணிப்பதாலும், பட்டைதீட்டாத காரணத்தினாலும் மலச்சிக்கலை தீர்க்கக்கூடிய ரகமாகும். அடுத்த மாதம் காட்டுயாணம் பாரம்பரிய அரிசியில் செய்யக்கூடிய உணவு வகைகளைப் பார்க்கலாம் மக்களே!!
– சீதாலட்சுமி மணிகண்டன்