தமிழ் திரையுலகில் முதன்மையான திரைப்படங்களில் ஒன்று எழுத்தாளர் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படமும் ஓன்று. இது, 1978ல் வெளியான படம் 40 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை பற்றி பேசிய சிறந்த படம் என்று ஊடகங்கள் பறைசாற்றியது.அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க எழுத்தாளர் ருத்ரைய்யாவே முயற்சித்தார். கமல், ரஜினி கால்ஷீட் கிடைக்காததால் கைவிட்டார். அதன்பிறகு பலர் இதன் இரண்டாம் பாகத்தை விஜய்சேதுபதி, சிம்புவை வைத்து எடுக்க முயற்சித்தார்கள். அதுவும் நடக்க வில்லை.
இப்போது, திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட இயக்குநர் ரா.மு.சிதம்பரம் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார். இவர், இயக்குநர் ஆதவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். குறும்படங்கள், விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள் இயக்கியவர். ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர். பாரம்பரிய கலையான சிலம்பம் பற்றி பேசும் ‘ஓட்டத்தூதுவன் 1854’ என்கிற படத்தை இயக்கியவர். இப்போது, ‘அவள்அப்படித்தான் 2’ திரைப்படத்தை 10 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார். இந்தப்படத்திற்கு வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார், அரவிந்த் சித்தார்த் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் சுயமரியாதை கொண்ட மஞ்சுவாக நடித்திருப்பவர் சினேகா பார்த்திபராஜா. திருப்பத்தூரைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர். இந்தியாவில் முதன்முதலாக சாதி, மதமற்றவர் என்று தனக்கு சாதிமறுப்புச் சான்றிதழ் வாங்கியவர். இவரது கணவர் பார்த்திபராஜா நாடகக் குழு வைத்துள்ளார. கணவர்குழுவில் இணைந்து நடித்த அனுபவம் சினேகாவுக்கு உண்டு. படத்தின் நாயகனாக நடித்துள்ளவர் அபுதாகிர். இவர்கள் தவிர சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன் ,தனபால், தொல்காப்பியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை யுன் ஃப்ளிக்ஸ் நிறுவனம் சார்பில் செய்யது அபுதாகிர் தயாரித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் ரா.மு.சிதம்பரம் கூறியதாவது: “படத்தின் நாயகி ஓர் ஆசிரியை. கற்பிக்கும் பணியை அவள் வேலையாக இல்லாமல் விருப்பமாகச் செய்து வருகிறாள். ஒரு சனிக்கிழமையன்று வேலைக்குச் செல்கிற அவள், வழக்கம்போல அன்று மாலை வீடு திரும்பவில்லை. நேரம் நகர்கிறது. இரவு 10 மணி ஆகிறது. இன்னும் வீடு வந்து சேரவில்லை. அதற்கு மேல் நகரும் ஒவ்வொரு நிமிடமும் அந்தக் குடும்பத்தினருக்குப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கணவர், மாமியார்,செய்தி கேட்டு வந்திருந்த அவளின் பெற்றோர் என அனைவரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். அக்கம்பக்கம் செய்தி பரவுகிறது. கணவன் எவ்வளவோ இடங்களுக்கு அலைந்து சென்று தேடியும் கிடைக்கவில்லை.பொழுதும் விடிகிறது. அதிகாலை 6 மணிக்கு அவள் வந்து சேர்கிறாள். இரவு முழுக்க எங்கே சென்று இருந்தாள்? அனைவர் முகத்திலும் இதே கேள்விக்குறிகள். ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் அனைவரையும் கடந்து, அவர்களது கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.
இரவு பொழுது கழிந்ததைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் மிகச் சாதாரணமாக இருக்கிறாள். இதைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி ஆச்சரியம். அதற்குப் பிறகு அவளுக்கும் அவள் கணவருக்கும் ஈகோ யுத்தம் தொடங்குகிறது. ஆணவம் தூண்டப்பட்ட இரு மனங்களும் கூர் தீட்டிக் கொண்டு மோதிக் கொள்கின்றன. வழக்கமான ஆணாதிக்க மனம் கொண்ட அவனும் அதற்குப் பணியாத அவளும்முரண்பட்டு விலகல் கொண்டவர்களாக மாறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு வீடு வந்தவள் மறு நாள் திங்கட்கிழமை காலை ஒரு முடிவு எடுக்கிறாள். அது கட்டுப் பெட்டித்தனமும் அல்ல கட்டுடைத்தலும் அல்ல. தனது பண் என்கிற சுயத்தை இழக்காமல் எடுக்கும் முடிவு. அதற்குள் என்ன நடக்கிறது?அவள் என்ன முடிவெடுக்கிறாள்? என்பதுதான் இப்படத்தின் கதை செல்லும் செய்தி.
மனித மனம் ஆணவத்தின் சீண்டல்களால் வெளிப்படும் குரூர தருணங்களையும் அதன் அசைவுகளையும் இந்தப் படத்தில் அழகாகக் காட்டியுள்ளோம். நடித்துள்ளவர்களும் பாத்திரங்களின் மன இயல்புகளை நடிப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்தப் படத்தை நாங்கள் பத்தே நாளில் எடுத்து முடித்தோம். சரியான திட்டமிடல் இருந்ததால் இது சாத்தியமானது. இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு உட்பட நான்கு மொழிகளில் வெளியாகிறது” என்றார்.