ஆணவப் படுகொலை எதிர்ப்பாளர் கௌசல்யா, தொழில்முனைவோரானது எப்படி?

சாதியின் வெறியால் கணவர் சங்கரை இழந்து, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் பாதிக்கப்பட்ட பெண் என்பதைக் கடந்து இன்று புதிய தொழில் ஒன்றைத் தொடங்கி தொழில்முனைவராகி இருக்கிறார் கௌசல்யா.

ஆணவக்கொலையால் மாறிப்போன கௌசல்யாவின் வாழ்க்கை ‘ழ’ (ZHA) எனும் பெயரில் கோயம்புத்தூரின் வெள்ளலூரில் அழககத்தைத் தொடங்கி இருக்கிறார். தமிழ் மக்களின் மனதில் இருந்து அழிக்க முடியாத எழுத்து ’ழ’ அதே போல, சாதியப் படுகொலைக்கு ஆளான சங்கரின் பெயரும் தமிழக வரலாற்றில் இருந்து மறக்கமுடியாது மறையாது நிற்கிறது. 2016ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாற்று சாதியரான சங்கர் என்பவரை காதலித்து கௌசல்யா திருமணம் செய்து கொண்டார். கௌசல்யாவின் வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு சங்கர் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

சங்கர் - கௌசல்யா திருமணம் Mellinam
சங்கர் – கௌசல்யா திருமணம்

2016 மார்ச் மாதம் கௌசல்யாவின் கண்முன்னே சங்கர் நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் கௌசல்யாவும் படுகாயமடைந்தார். எனினும், காயங்களை பொருட்படுத்தாமல் தன்னுடைய காதல் கணவரின் கொலைக்குக் காரணமானது தன்னுடைய குடும்பத்தினரே என்றாலும் அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவதற்காக சட்டப்போராட்டத்தை தொடங்கினார். துணிவான முடிவு சாதிப்பெருமை என்கிற பெயரில் தன் கண் முன்னே தனது காதல் கணவர் சங்கர் கொல்லப்பட்டதை எதிர்த்து தொடர் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு தன்னுடைய குடும்பத்தினருக்கே தண்டனை பெற்றுத் தந்தவர் கௌசல்யா.

பெண் தொழில்முனைவோர் – கௌசல்யா

ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழல் இல்லாவிட்டாலும் அறிதல் மற்றும் புரிதல் இருந்ததால் அனைத்தையும் கடந்து தனக்கான வாழும் சூழலை அழகானதாக்கிக் கொண்டிருக்கிறார் கௌசல்யா. தற்போது தொழில்முனைவராக மாறி இருப்பது குறித்து ஊடகங்களுக்கு கூறியதாவது,

“வீட்டில் இருந்தபடியே ஏதேனும் தொழில் செய்யலாம் என்று நேயம் டீ என்கிற பெயரில் தேயிலை விற்பனையை முதலில் செய்யத் தொடங்கினேன். நீலகிரியில் இருந்து தேயிலை வாங்கி அதனை ’நேயம்’ என்கிற பிராண்டின் கீழ் விற்பனை செய்து வந்தேன். அந்தத் தொழில் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை, எனக்கு அறிமுகமானவர்களிடம் மட்டுமே அந்தப் பொருள் சென்றடைந்தது. எனவே எந்தத் தொழிலைச் செய்தால் லாபம் பெற முடியும் என்று ஒரு ஆய்வு செய்தேன். இறுதியில் அழகுக்கலையை தேர்ந்தெடுத்தேன்,” என்கிறார் கௌசல்யா.

 ’ழ’ அழககம் Mellinam
’ழ’ அழககம்

அழகுக்கலை அனைவரும் விரும்பும் ஒரு துறையாக இருக்கிறது. எனக்கும் அவற்றை கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்ததால், ஆறு மாதங்கள் Naturals நிறுவனத்திடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதன் பிறகே, என்னுடைய சொந்த பிராண்டாக ’ழ’ அழககம் தொடங்க முடிவு செய்தேன். வங்கிக் கடன் மற்றும் நகைகளை விற்று அவற்றை முதலீடாக்கியே இந்த அழககத்தை திறந்திருக்கிறேன். 2022 செப்டம்பர் 25ல் திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்திக் கொடுத்தார்கள் என்னுடைய நலன் விரும்பிகள். நான் மிகவும் மதிக்கும் நடிகை பார்வதி திருவோது பணம் எதுவும் வாங்காமல் எனக்காக வந்து இந்த விழாவில் பங்கேற்றது எனக்கு மேலும் ஊக்கத்தைத் தந்திருக்கிறது என்று மகிழ்கிறார் கௌசல்யா.

மற்ற பார்லர்களைக் காட்டிலும் அனைத்திலும் ’ழ’ தனித்துவமானது. இது பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என தனித்தனியான சேவையை வழங்காமல் குடும்பத்தினருக்கான அழககமாக இருக்கும். “முடி திருத்தம், ஸ்டைலிங் என்பதைத் தாண்டி அனைத்து அழகுக்கலை சேவைகளும் இங்கே கிடைக்கும். எங்களது தனி பாணியும், நாங்கள் பயன்படுத்தும் உயர்தரமான அழகுப் பொருட்களுமே எங்களின் தனித்துவத்தை பேசும்.” தற்போது வெள்ளலூரில் இந்த பார்லரை தொடங்கி இருக்கிறோம். எங்களது பிராண்ட் பெயரின் கீழ் செயல்பட விரும்புபவர்களுக்கு Franchisee கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கான பயிற்சி, உபகரணங்கள் உதவி என்று அனைத்தையும் நாங்கள் செய்து கொடுத்துவிடுவோம். Franchisee எடுக்க விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்கிறார் ’ழ’ அழககத்தின் உரிமையாளர் கௌசல்யா.

நான் அரசுப் பணியை ராஜினாமா செய்ததற்கான முதல் காரணமே என்னால் சமூகப் பணிகளில் ஈடுபட முடியவில்லை என்பது தான். என்னுடைய இந்த புதிய முயற்சியான தொழில்முனைவு எனக்கு பொருளாதார உதவி செய்யும் என்பதோடு என்னுடைய செயற்பாடுகளுக்கும் துணை நிற்கும் என்று நம்புகிறேன். “சமூகம் எனக்காக பல நன்மைகளை செய்திருக்கிறது, இப்போது நான் சமூகத்திற்கு திருப்பி செய்ய வேண்டிய நேரம். எனவே ’ழ’ அழககத்தில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை செய்யப் பயன்படுத்தப் போகிறேன்,” என்கிறார் கௌசல்யா.