குடிசைத் தொழில்கள், கிராமியத் தொழில்கள், கதர், கைத்தறி ஆடை நெய்யும் தொழில்கள் இவைதான் நமது பாரம்பரியத்தை அடுத்தடுத் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்கின்றன. கலாசாரத்தைப் பறைசாற்றும் பொருள்கள். இவற்றின் மீது உயர்ந்த மதிப்பீடு கொண்டிருப்பது மட்டும் போதாது; கைவினைப் பொருட்களுக்கு ஆதரவு வேண்டும். இந்த கைவினைப் பொருட்களின் தயாரிப்பு குடிசைத் தொழிலாக, கிராமியத் தொழிலாக நடைபெற்று வருகின்றன. ஒரு பொருளின் விலை 20..30 என ஆரம்பித்து, செய்யப்படும் கலைப் பொருட்களின் கலை நுணுக்கங்களையும் பயன்படுத்தும் மூலப்பொருளையும் பொருத்து, விலை சில நூறுகளில், சில ஆயிரங்களில் இருக்கலாம்.
எல்லாரும் எல்லாப் பொருட்களையும் வாங்க முடியாதுதான். அவரவர்கள் சக்திக்கு வசதிக்கும் ஏற்பகைவினைப் பொருட்களை வாங்கி ஆதரிக்கலாமே… என்கிறார் கைவினைக் கலைஞர் திருமிகு பா.மு.நிர்மலா. இனி அவர் கூறியதிலிருந்து….
“நான், பள்ளியில் பயிலும்போதே கலை மற்றும் கைவினை பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். அப்பொழுதே பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள் பெற்றிருந்தேன். இது எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அதனால், நான் கைவினைப் பொருட்கள் பற்றி பல விசயங்களை கற்க தொடங்கினேன். பெரும்பாலும் என் கைகளாலேயே செய்த கலைப்பொருட்களை எனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசாக கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன். அவர்களும் எனக்கு பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தி வந்தனர். இது எனக்கு மேலும் அவை தொடர்பாக பல்வேறு கலைகளை கற்கும் ஆர்வத்தை உண்டாக்கின. அதே நேத்தில் எனக்கு திருமணம் நடைபெற்ற ஒருசில ஆண்டுகள் இந்தக் கலைபொருட்கள் தயாரிக்கும் பணி தடைபட்டிருந்தது என சொல்லலாம்.
அதன் பின்பு கணவர் என்னுடைய கலை ஆர்வத்தைப் பார்த்து ஊக்கப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக பயிற்சிபட்டறைகளில் பங்ககேற்க தொடங்கினேன். அதன் பயனாக கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். அதாவது திருமண நகை செட்கள், ஃபேஷன் ஜூவல்லரி, மோதிரம் மற்றும் டெரகோட்டா என பல நுட்பமான பொருட்கள் தயாரிப்பதை கற்றுக்கொண்டேன். இவை தவிர அனைத்தவிதமான பேப்பர் ஒர்க், ஃபாய்ல் ஒர்க் மற்றும் கிளே ஒர்க் என அனைத்தையும் அசத்தலாக செய்தேன். இதுமட்டுமல்லாமல் திருமணம் சார்ந்த பேஷன் நகைகளை தயாரித்து விற்பனையும் செய்து வருகிறேன். இவை தவிர, திருமணத்திற்கான கைவினைப் பொருட்கள் அல்லாத நகைகளையும் வரவழைத்து திருமணப் பெண்ணுக்கு கொடுக்கிறேன்.
அக்ரலிக் பெயின்டிங் :
அக்ரலிக் பெயின்டிங்கில் இயற்கைசார்ந்த காட்சிகளான நீர்வீழ்ச்சி, பூக்கள், மற்றும் வல ரசனையான காட்சிகளை ஓவியங்களாக வடித்துக்கொடுக்கிறேன். அக்ரிலிக் பெயின்டானது எளிதாக உலரக்கூடியது. எனவே ஒவியங்களை எவ்வளவு விரைவாக வரையமுடியுமோ அவ்வளவு விரைவாக வரைந்த கொடுக்க முடியும். எனக்கு புத்தர் ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். அதனால், பலவகையான புத்தர் ஓவியங்களை இந்த அக்ரலிக் பெயின்டிங்கில் வரைந்து விற்பனை செய்து வருகிறேன்
ஃபோல்க் ஆர்ட் ஆப் இண்டியா:
ஃபோல்க் ஆர்ட் ஆஃப் இந்தியா (Folk Art of India) என்பது நாட்டுப்புற சார்ந்த ஓவியக்கலை என்று சொல்லலாம். குறிப்பாக சிறுவர்கள் இந்தக்கலையை மிகவும் ஆர்வமுடன் கற்றுக்கொள்வார்கள். அவற்றில் சில கலாச்சார ஓவியங்களான 1.மதுபானி ஓவியங்கள் 2.வார்லி பெயின்டிங் 3.காளிகாட் பெயின்ட்டிங் 4.கேரளா முர்லாக் பெயின்டிங்குகளை வரைய பயிற்சி எடுத்திருக்கிறேன்.
மதுபானி ஓவியம், மிதிலா ஓவியம் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் பீகாரில் உள்ள மிதிலா பகுதியில் இருந்து உருவான நாட்டுப்புறக் கலையின் பாரம்பரிய பாணியாகும். இந்த கலை வடிவம் அதன் துடிப்பான வண்ணங்கள், வடிவியல் வடிவங்கள் மற்றும் இயற்கை சாயங்களின் பயன்பாடு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. மதுபானி ஓவியங்கள் பெரும்பாலும் இந்து புராணங்கள், இயற்கை மற்றும் அன்றாட வாழ்க்கையின் காட்சிகளை சித்தரிக்கின்றன. அவை பொதுவாக மிதிலா பகுதியில் உள்ள பெண்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
காளிகாட் ஓவியம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் இந்திய ஓவியத்தின் தனித்துவமான வகையாக உருவானது. பிரகாசமான வண்ணங்கள் மற்றும் தடித்த வெளிப்புறங்களால் வகைப்படுத்தப்படுகிறது. கடவுள்கள் மற்றும் பிற புராணக் கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் இருந்து, இந்த ஓவியங்கள் பல்வேறு கருப்பொருள்களை பிரதிபலிக்கும் வகையில் காலப்போக்கில் வளர்ந்தன.
வார்லி ஓவியம் (Warli Painting) என்பது ஒரு பழங்குடியன மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மகாராட்டிரம், குசராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும். இந்த ஓவியக் கலைக்கும் இந்தியாவின் பிற வட்டார ஓவியக் கலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இந்த வார்லி ஓவியக் கலையில் தெய்வ உருவங்கள் உருவாக்கப்படுவதில்லை; மேலும் இதில் இந்து மதச் சடங்குகளோ வழிபாடுகளோ இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு. இது தற்போது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இவை தவிர தஞ்சாவூர் பெயின்டிங், ஃபேப்ரிக் பெயின்டிங் ஆகியவற்றையும் கற்று தேர்ந்திருக்கிறேன். இன்றைக்கு ஒரு கலையைக் கற்றுக்கொண்டு மட்டும் வணிகம் செய்ய முடியாது என்பதால் நுண்கலை, ஓவியக்கலை என அனைத்தையும் கற்றிருக்கிறேன் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் இதில் சில புதுமையான தஞ்சாவூர் பெயின்டிங், கோல்ட் பெயின்ட்டிங் ஆகியவற்றினை இணைத்து 3 டைமன்சன் ஸ்டோன், குந்தன் ஸ்டோன் பதித்து உருவாக்கி தருகிறேன். நான் உருவாக்கி தரும் ஃபேப்ரிக் புடவைகளில் அவுட் லைனில் ஆரி ஒர்க் செய்து தருகிறேன்.
எனது விருப்பம் இந்த மாதிரியான அற்புதமான கலைகளை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்பதுதான். அதே நேரத்தில் ஏழைக் குழந்தைகள் மற்றும் தொழில் கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் பெண்களுக்கு இலவசமாக கற்றுத்தருகிறேன். இந்தச் சேவையைப் பாராட்டி இஸ்ரோ முன்னாள் தலைவர் திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் என்னைப் பாரட்டி 2021 ம் ஆண்டு அப்துல்கலாம் விருது வழங்கி சிறப்பித்தார். குறிப்பாக, கொரானா காலங்களில் மாணவர்களுக்கு இதே கலையை ஆன்லைன் மூலமாக கற்றுக்கொடுத்தேன். ஆக்கப்பூர்வமாக பயிற்சி கொடுத்த அந்த ஓவியப் பயிற்சி இன்று பலருக்கு வாழ்வாதரமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சேவை செய்ததால் எனக்கு கலை ஒளி, கலைக்குயில், சாதனையாளர், அப்துல்கலாம் விருது என 10 க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறேன். இதுமட்டுமல்லாமல் இந்தியன் பேங்க் ஆஃப் ரீவார்டு நடத்திய 100 பெண்கள் 100 மணி நேரம் என்ற நிகழ்ச்சியில் நானும் ஒரு பேச்சாளராக கலந்துகொண்டு ‘உமன் பவர் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பேசியது பெருமையாக இருந்தது.
2022 ம் ஆண்டு சென்னை, தியாகராய நகரில் வெண்பா ஆர்ட் காலரியில் நான் மற்றும் எனது மாணவர்கள் வரைந்த ஓவியங்களை மிகப் பெரிய கண்காட்சியாக நடத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஒவியக் கண்காட்சிக்கு நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் ஒவியர் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் பெண்களையும், குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஓவியப் போட்டிகளையும், சமையல் போட்டிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறேன்.
இன்னொரு முக்கியமான செய்தி கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்ரீபேஷன் ஜூவல்லரி என்ற பெயரில் சொந்தமாக ஒரு கடையினையும் நடத்தி வருகிறேன். இந்தக் கடையில் நான் கைகளால் உருவாக்கிய அனைத்து நகைகளும் கிடைக்கும் இது மட்டுமல்லாமல் எனது ஓவியங்கள் மற்றும் ஃபேஷன் ஆர்ட் ஓர்க் பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைத்திருக்கிறேன். இது எனக்கு கணிசமான வருமானத்தைப் பெற்றுத் தருகிறது. இந்த அளவுக்கு நான் செயல்படுவதற்கு காரணம் எனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பே காரணம். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.