லியோவின் மாஸ் திரைப்பார்வை

லியோ திரைப்படம் குறித்து எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன். காரணம் ஒரு திரைப்படத்தை உயர்த்திப் பிடித்து இங்கு எதுவும் ஆகப்போவதில்லை. அது நம் வேலையும் இல்லை. ஆயினும் எழுதக் காரணம், தமிழ் திரையுலகத்தில் சில திரைகதை சிறப்பாக இருக்கும். ஆனால், பலரது விமர்சன சத்தத்தில் அல்லது வெறுப்பில் காணாமல் போய்விடும். அப்படித்தான் இந்தப் படத்திலும் பல காட்சிமொழிகள் பேசப்படாமல் போய்விட்டது என்று சொல்லலாம்.

காஃபி ஷாப்பில் துப்பாக்கி ஏந்தியதற்குப் பிறகு பார்த்திபன் பயம் கொள்கிறான். சிறிய சத்தங்கள் கூட அவனை மிரள வைக்கிறது. தூக்கம் இழக்கிறான். தன் குடும்பம் ஆபத்திற்கு ஆளாகிவிடுமோ என்ற பயம் அவனை நித்தம் வதைக்கிறது. ஆனால் அவனது அச்சம் எதிரிகளின் வரவைப் பார்த்து அல்ல! அவன் அவனுள் இருக்கும் மிருகத்தைப் பார்த்தே பயம் கொள்கிறான் என்பதுதான் உண்¬ம். அதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு காட்சியில் பார்த்திபனாக இருந்தால் நானுபேர் போதும்…லியோவாக இருந்தால் நம்ம படை பத்தாது என்று வசனம் வரும். பிறரை விட நம்மால் நம் குடும்பத்திற்கு ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்பதே அவன் பயம். இதை மனைவியிடம் கூட சொல்ல முடியாது.

Leo Movie Poster Mellinam tamil

அப்படியான ஒரு மன உளைச்சலில் மகளின் மடியில் தலைசாய்க்கிறான். உலகின் ஆகக் கொடிய மிருகங்களையும், அடக்க முடியா அசுரப் பேய்களையும் கூட அன்பு காட்டி தனதாக்கிக் கொள்ளும் தேவதைகள், மகள்கள். மடியில் வந்து கிடக்கும் மிருகத்தை பரிவுடன் தலையைத் தடவித் தருகிறாள். அதுவரை வராத உறக்கம், அப்பனுக்கு வருகிறது. இது விஜய்படத்தில் ஆகச் சிறந்த காட்சி. இந்தக் காட்சியில் மனைவியும் எழுந்து தலையை வருடிக் கொடுக்க, அப்படியே Fade out ஆகும். ஆனால் இதில் திரிஷா நன்றாக போர்வையை இழுத்து மீண்டும் உறங்குவார்.

காரணம், மனைவிகள் கூட கணவனைச் சந்தேகிப்பார்கள், ஆனால் மகள்கள் அப்பனின் Past, present, future எதையும் சந்தேகிப்பதில்லை. அந்தக் காட்சிக்கு சிண்ட்டு மட்டுமே போதும் என்ற இயக்குநரின் முடிவு தான் இதில் உயர்வாகத் தெரிகிறது. மகள் தனக்குத் தந்த அதே பரிவைத்தான் அதன்பிறகு பார்த்திபன் முகத்தோடு முகம் வைத்து சுப்ரமணிக்கு(ஹைனா) தருகிறான். Infact, , சுப்ரமணி அந்த மாஸ் காட்சியில் வருவதே ‘சிண்ட்டு’ வைக் காக்கத்தான்..

பிறகு லியோ, பார்த்திபன் கதை எல்லாம் நாம் அறிந்ததே. ‘சிண்ட்டு’ என்ன ஆனாள். ஆரம்ப காட்சிகளில் அதிக சத்தத்தில் பாடலைக் கூட கேட்க முடியாமல் காதுகளை பொத்திக் கொள்பவள், அப்பன் மூஞ்சியெல்லாம் தையலாக, ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் இறுதிக் காட்சியில் ‘என்னப்பா யாராவது பொறாண்டி வச்சுட்டாங்களா’ என சாதாரணமாக கேட்கிறாள். ஒரு பேரிடரை குடும்பமாக அனுபவித்து, மீண்டு வெளியேறும்போது, குடும்பத் தலைவன் மட்டுமல்ல, அவனது குழந்தைகளும் மன வலிமை கொண்டவாராகிறார்கள்.