நடிகர்கள் : ஆர்.ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஸ், இஷா தால்வார், தமிழ், ஜான்அய்யப்பன்
இயக்கம் : ஜியென் கிருஷ்ணகுமார்
இசை : சாம் சிஎஸ்
தயாரிப்பு : லக்ஷ்மன் குமார்
2015ம் ஆண்டு கதை நடப்பதாக திரைக்கதை நகர்கிறது. அதாவது, செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. அவருக்கு ஒரு பெண்ணுடன் (இஷா தால்வார் )விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், அவரது காரில் தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) அவருக்கே தெரியாமல் ஏறி விடுகிறார். தான் ஒரு பிரச்சனையில் இருப்பதாகவும், ஒரு மணி நேரம் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்வதாகவும் கூறுகிறார். பின்பு அவரது வீட்டிலேயே தாரா இறந்து விடுகிறார். இதற்கு பின்பு என்ன ஆனது? தாரா எப்படி இறந்தார்? ஆர்.ஜே பாலாஜிக்கு என்ன ஆனது? என்பதுதான் ரன் பேபி ரன் படத்தின் கதை.
மிகவும் கலகலப்பாக எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் ஆர்.ஜே பாலாஜி இந்த படம் முழுக்க ஒரு இடத்தில் கூட சிரிக்காமலும், அதிகமான டயலாக்குகள் இல்லாமலும் நடித்துள்ளார். இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததற்கு அவருக்கு தனி பாராட்டுக்கள். மற்ற படங்களை காட்டிலும் ஒரு நடிகனாக இந்த படத்தில் கற்று தேர்ந்து உள்ளார். சில முக்கியமான காட்சிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆர் ஜே பாலாஜி. சண்டை காட்சிகளையும் இந்த படத்தில் முயற்சி செய்து உள்ளார். சிறிய கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். வழக்கம்போல எமோஷனல் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார். ஜான் அய்யப்பன், அவரது காதலியாக வரும் சோபியா கதைக்கு பொறுத்தமாக நடித்திருக்கிறார்கள்.
ஜியென் கிருஷ்ணகுமார் ஒரு சிறப்பான படத்தை கொடுத்துள்ளார். முதல் பாதி முழுக்க அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு நம்முள் ஏற்படுகிறது, அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை தான். இப்படி ஒரு சீரியசான படத்திற்கு சிறந்த ஒரு பின்னணி இசையை கொடுத்துள்ளார் சாம் சிஎஸ். பல இடங்களில் அவரது இசை அந்த காட்சிகளை மெருகேற்றி செல்கிறது. யுவா சிறப்பாக காட்சிகளை படமாக்கி உள்ளார். ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை பரபரப்பு இருந்து கொண்டே செல்கிறது. யார் இதனை செய்தார்கள் என்று யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை படு பயங்கரமாக உள்ளது. படத்தின் சில காட்சிகள் கொஞ்சம் பலசாக இருந்தாலும் படம் செல்லும் வேகத்தில் அவை பெரிதாக உறுத்தவில்லை. படத்தின் இறுதியில் சொல்ல வரும் கருத்தும் பாராட்டுக்குரியது. தேவையில்லாத பாடல்கள், தேவையில்லாத காட்சிகள் என எதுவும் இல்லாமல் கதைக்கு ஏற்றவாறு படத்தை எடுத்துள்ளனர்.