ஆட்டுவிக்கும் திருமண ஆடை ரகங்கள்!

தமிழ்நாட்டில் கல்யாண சீசன் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. நம் நாட்டைப் பொறுத்தவரை திருமணம் என்பது இன்னொரு பிறப்பு போன்றது. அதனால்தானோ என்னவோ இந்த வைபவத்துக்காக அவ்வளவு மெனெக்கெடுகிறார்கள். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அத்தனை சிறப்பும், முக்கியத்துவமும் தருகிறார்கள். சரி, சரியான முறையில் தருகிறார்களா? அல்லது வட இந்திய பாணியை பின்பற்றுகிறார்களா? என்ற குழப்பம் நிலவுகிறது.

நம்ம ஊர் பெண்களுக்கு இடுப்புப் பகுதி உடுக்கைபோல் இருக்கும் என்று கவிஞர்கள் சொல்வதுண்டு. அதாவது, வளைவுகள் அதிகமாக இருக்கும். அதனாலேயே இவர்கள் புடவை கட்டி நின்றால் அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்னும் அளவுக்கு அம்சமாக காட்சியளிப்பார்கள். அதேபோல்தான் பையனும். நம்மூர் பிள்ளைகளுக்கு வலிமையான தோள்கள். கொஞ்சம் பரந்த மார்புப் பகுதி. எனவே பட்டு வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தால் அம்சமாக கம்பீரமாக இருக்கும். இந்த உண்மையை இப்போது யாரும் புரிந்துகொள்வதில்லை. வட இந்திய பிள்ளைகளைப் போல் ஷெர்வானி லெஹெங்கா அணிகிறார்கள் அல்லது கோட் சூட் போட்டு வலம் வருகிறார்கள்.

வட இந்தியப் பெண்கள் இடையழகைக் காட்ட தயங்க மாட்டார்கள். நம்மூர் பெண்களோ லெஹெங்காவையே தாவணி போல் அணிந்து இடுப்பை மறைத்து நிற்பார்கள். நம்மூரில் லெஹெங்கா அதிகம் கிடைப்பதில்லை. குறைந்தது ரூ.20 ஆயிரமாவது செலவழித்தால்தான் ஓரளவு நல்ல லெஹெங்கா கிடைக்கும். அதாவது வட மாநிலங்களில் காஞ்சி பட்டைத் தேடி அலைவதற்கு சமம்தான் நம்மூர் பெண்கள் லெஹெங்கா தேடி அலைவது. ஆனாலும் மணமக்களுக்கு எது பிடிக்கிறதோ அதை அணிவதே சாலச் சிறந்தது.மணப்பெண்ணைப் பொறுத்தவரையில் வரவேற்பு விழாவுக்கும் திருமண விழாவுக்கும் தனிதனியாக எடுத்து அசத்துகிறார்கள். தமிழ்பெண்களைப் பொறுத்தவரை திருமண விழாவிற்கு 90 விழுக்காடு பட்டுச்சேலையே பயன்படுத்துகிறார்கள். வரவேற்பு விழாவிற்கு லெஹெங்கா உட்பட பல புதிய ரக உடைகளை அணிகின்றனர். அவற்றைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

பேஷன் நாட்:

பெண்கள் தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றவர்களின் பார்வையை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆடைகளில் அழகிய டிசைன்கள் மட்டுன்றி குஞ்சலம், பாசிமணிகள் போன்ற அலங்கார முடிச்சு வேலைப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இளைய தலைமுறையினரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது. அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு உயிரோட்டம் கொடுப்பதாக ‘பேஷன் நாட்’ அமைந்திருக்கிறது. ஆடைக்கு விதவிதமான அழகு தோரணங்களாக அமைந்திருக்கும் இந்த ‘நாட்’ இல்லாமல் பேஷன் நிறைவடைவதில்லை. இது பழையகால பேஷன் என்றாலும் ஜிமிக்கி கம்மல் போல மீண்டும் புதுப்பொலிவுடன் உலா வர தொடங்கி இருக்கிறது. குறிப்பாக திருமணம் மற்றும் விழாக்காலங்களில் அணியும் உடைகள் அணிகலன்களில் குஞ்சங்கள் இடம் பெற்றிருக்கும். அத்துடன் மணிகள், பட்டு நூல்கள், ஓசை எழுப்பும் முத்துக்கள் உள்ளிட்டபல அழகிய பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.
‘நவீன உடைகளில் ‘பேஷன் நாட்’கள் தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது. எல்லாத்தரப்பு மக்களையும் கவர்வதுதான் முதன்மை காரணம். இந்த ‘நாட்’களை தயாரிக்க பல மணி நேரமாகிறது. உடைக்குப் பொருத்தமாகவும், உறுத்தாமலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உடையின் எந்தப் பகுதிக்கு அது பொருத்தமாக இருக்கும் என்பதை தீர்மானிப்பதில் அதன் அழகியல் வெளிப்படும். நவீன ஆடைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்த முடிச்சுகளை வடிமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேலைநாட்டு நவநாகரிக உடைகள் வசதிக்காக உடுத்தப்படுபவை. ஆனால் இந்திய பாரம்பரிய உடைகள் அழகுக்காக அணியப்படுகிறது.
வெளிநாட்டில் உள்ள பெண்கள் பெரும்பாலும் விரும்புவது இந்த ‘நாட்’களைத்தான். உடையின் கலைநயம் மிக்க கைவேலையே அதுதான். பேஷன் டிசைனரின் திறமையும் அந்த ‘நாட்’டில்தான் அடங்கியுள்ளது. இதனை கற்றுக்கொடுப்பதற்கென்று தனி நிறுவனங்கள் இருக்கின்றன. பேஷன் உடை தைப்பவர்களால் கூட இந்த வகை டிசைன்களை உருவாக்க முடியாது.உடையின் விலையை நிர்ணயிப்பது இந்த பேஷன் தான். ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, பீகார் போன்ற மாநில பாரம்பரிய உடைகளில் இந்த ‘நாட்’கள் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். குர்தா, கோளி, காக்ரா, லங்கோட்டா, பாரந்தா போன்ற உடைகளில் இந்த வேலைப்பாடுகளை அதிகம் காணலாம். இதற்காகவே பிரசித்திப் பெற்றவை இந்த உடைகள். இப்போது தமிழ்நாட்டிலும் இந்த பேஷன் பரவி விட்டது. இந்த வகை பேஷன் உடைகளை அணிந்துக் கொள்வதை தான் பெண்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ப காதுகளி லும் முன்னும் பின்னும் அசையும் காதணிகளை விரும்பி தேர்வு செய்கிறார்கள். அதனால் கூடுமானவரை கனமில்லாத தயாரிப்பு களையே பேஷன் டிசைனர்கள் முயற்சிக்கிறார்கள். பெரும்பாலும் முதுகில் உள்ள ‘நாட்’கள் தான் அந்த உடைக்கு சிறப்பை சேர்க்கும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ‘ரெடிமேட் நாட்’டுகளை கொண்டும் உடையை அலங்கரித்துவிடலாம்.

அனார்கலி:

சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான அனார்கலி, மிகவும் கிராண்டாக இருந்தது. ஃபார்ட்டி, திருமண விழாவுக்கு மட்டும் போட்டுட்டு போகிற மாதிரிதான் அப்போ வந்த டிசைன் இருந்தது. இப்ப சின்னச் சின்ன மாற்றங்களோட அது மாறி காட்டன்லகூட அனார்கலி அணியலாம்ங்கிற நிலை வந்திருக்கு. காட்டனில் பட்டு பார்டர் வைத்து தைக்கப்பட்ட அனார்கலியும், வீட்டில் பயன்படுத்தப்படாத பட்டுச் சேலைகளில் அனார்கலியும், பியூர் காட்டனில் அனார்கலியும்தான் தற்போதைய டிரெண்ட். காட்டன் என்றால் சுங்குடி கலந்தது, ஹைத்தறி என்று குறைந்த விலையில் நம்மை தனித்துவமாகக் காட்டும் அனார்கலிகள் வரிசை கட்டியிருக்கின்றன. உடல் பருமனான பெண்களுக்கு காட்டன் வகை அனார்கலி நன்றாகப் பொருந்திப் போகும். கூடவே யூ நெக், ஹாஃப் ஸ்லீவ் எனச் சின்னச் சின்ன மாற்றம் செய்தால் நீட் லுக் கிடைக்கும். ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்கள் அனார்கலியை அணியும்போது குளோஸ்டு நெக் வைத்து ஃபுல் ஸ்லீவ் வைத்துத் தைத்தால் சூப்பர் லுக் கிடைக்கும். மீடியம் உடல்வாகு கொண்டவர்கள் போட் நெக் மற்றும் எல்போ ஸ்லீவ்லெஸுடன் அணியலாம்.

டஸ்ஸர் சில்க்:

புடவை காதலிகள் டஸ்ஸர் சில்கைத் தேர்ந்தெடுக்கலாம். பிளைன் பள்ளு, பெரிய பார்டர், அட்டகாசமான நிறங்களில் வந்திருக்கிறது. இந்த வகை புடவைகளை அணியும்போது ஹை காலர் பிளவுஸ், பேக் ஓப்பன், கோல்டு ஷோல்டர் ப்ளவுஸ் என வடிவமைத்துக் கொண்டால் மாடர்ன் லுக்கில் தெரியலாம். டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அதிகப்படியான எம்பிராய்டர் பிளவுஸ்களை தவிர்க்கவும்.

மஸ்தானி:

லாங் டாப் – ஸ்கர்ட் என வடிவமைக்கப்படும் மஸ்தானி உயரமான பெண்களுக்கு மிகப் பொருத்தமாகத் தேர்வாக இருக்கும். மஸ்தானியில் சென்டர் ஸ்லிட்தான் லேட்டஸ்ட் டிரெண்ட். ஹாஃப் நெட்டட் டாப் கடந்த ஆண்டுகளில் டிரெண்டாக இருந்தாலும், பட்டில் வடிவமைக்கப்படும் லாங் டாப்தான் இந்த ஆண்டுக்கான மஸ்தானி ஸ்பெஷல். இதில், ஜர்தோஸி, ஆரி வேலைப்பாடுகளை உங்கள் விருப்பத்துக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.

புதிய டிசைன் லெஹன்காக்கள் :

பெண்களின் பாரம்பரிய ஆடைகளில் லெஹன்காசு தனிசிறப்பு மிகு ஆடையாக விளங்குகிறது. இதற்கென புதிய துணிரகம், புதிய மேற்புற டிசைன், கை அமைப்பு மாறுபாடு, வண்ண பிரகாசம் என அனைத்தும் புதுமையுடன் உருவாக்கப்படுகின்றன. தற்போது ஆர்ட் சில்க் ஜாக்கெட் லெஹன்கா, ஆர்ட் சில்க் சுழல் லெஹன்கா, பனாரஸ் லெஹன்கா போன்றவையுடன் நெட், ஜார்கெட், வெல்வெட், பட்டு, லெஹன்காக்களும் வந்துள்ளன. புது வரவான ஆர்ட் சில்க் லெஹன்காவில் ஜாக்கெட் மற்றும் சுழலி லெஹன்கா சில மாற்று வடிவமைப்புகள் உள்ளவாறு புதுபொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆர்ட் சில்க் ஜாக்கெட் லெஹன்கா :

இதனை புல்சூட் லெஹன்கா என்றும் கூறுவர். அதாவது மேற்புற ஜார்கெட் என்பது முழு கோட் அமைப்பில் ஏராளமான மாறுபட்ட வெட்டுகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. நீளமான மற்றும் முக்கால் கை நீளம் உள்ளவாறு முட்டி பகுதி வரை நீண்ட ஜாக்கெட் போன்ற மேல் சட்டை. இதில் முன்பக்கம் முழுவதும் அழகிய கண்கவர் சரிகை எம்பிராய்டரி மற்றும் பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில ஜாக்கெட் அமைப்பு தொடை பகுதி வரை நீண்ட அமைப்புடன் உள்ளது.
இதற்கேற்ற பாவாடை அமைப்பு நீள்வடிவில் அதிக பிரில்கள் மற்றும் விஸ்தாரமாய் விரிந்த அமைப்பு உள்ளவாறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில், பாவாடை என்பது பெரும்பாலும் தங்க நிற சல்லடை அமைப்பில் உட்புறம் சில்க் துணி பின்னணி உள்ளவாறு ஜொலிக்கின்றன. இதற்கேற்ற ஒற்றை வண்ணம் மேல்சட்டையில் மாறுபட்டவாறு உள்ளன. அழகிய பால் சான்டூன் லைனிங் என்பது கண்கவர் சரிகை எம்பிராய்டரி, கல் மற்றும் பேட்ச் பார்டர் வேலைப்பாடு பூ வடிவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ட் சில்க் ஜாக்கெட் லெஹன்கா என்பது சல்வார் கமீஸ்-யின் மேல் சட்டை அமைப்பு, லெஹன்கா பாவாடை கலந்த கண்கவர் ஜொலி ஜொலிப்பு ஆடை.

ஆர்ட் சில்க் சுழலி லெஹன்கா :

இது குட்டையான பாவாடை ஜாக்கெட் அமைப்புடன் இருக்கும். இதன் பாவாடை மட்டும் குடை விரிந்து அதே நேரம் சுழல் வடிவில் உள்ளவாறு உருவாக்கப்பட்டு உள்ளது. குட்டை ஜாக்கெட் என்பதுடன் குட்டை கை மற்றும் நீண்ட கை உள்ளவாறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், மேற்புற ஜாக்கெட் மற்றும் பாவாடை இரண்டும் ஒரே டிசைன் மற்றும் வண்ணத்தில் உள்ளவாறு வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது. பாவாடை அதிக மடிப்புகள் இன்றி இடுப்பு பகுதியில் இறுக்கத்துடன் கீழ் இறங்க இறங்க விரிந்தவாறு சுழல் அமைப்பில் உருவாக்கப்பட்டள்ளது. இதிலும் சரிகை எம்பிராய்டரி, கல் மற்றும் கோட்டாபட்டி வேலைப்பாடுகள் கூடுதல் மெருகுடன் செய்யப்பட்டுள்ளன. ஆர்ட் சில்க் ஜாக்கெட் மற்றும் சுழல் லெஹன்கா போன்றவை திருமணப் பெண்களுக்கான புதுவரவாக வந்துள்ளது.