நடிப்பு : அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து
இயக்கம் : இன்னாசி பாண்டியன்
இசை : ரான் ஈத்தன் யோஹான்
ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்
தயாரிப்பு : பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்
மாறுபட்ட ஒரு கதையை சொல்லலாம் என்று சிந்தித்திருக்கிறார். ஆனால், அந்தக் கதையை ரசிக்கும் விதத்தில் கொடுக்கும் ‘மந்திரம்‘ திரைக்கதையில்தான் இருக்கிறது. திரைக்கதை முதலில் கதையை விட்டு விலகுவதுபோல் தெரிந்தாலும், திரும்பவும் சரியான விதத்தில் பயணம் செய்கிறது.
சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருப்பவர் அருள்நிதி. ஆவணக் காப்பகத்திலிருந்து முடிக்க முடியாத கேஸ்களில் ஒன்றை எடுத்து பயிற்சி பெறுபவர் விசாரிக்கலாம் எனச் சொல்கிறார் மேலதிகாரி. கண்ணை மூடிக் கொண்டு ஒரு கேஸைத் தேர்வு செய்கிறார் அருள்நிதி. ஊட்டியில் 16 ஆண்களுக்கு முன்பு நடந்த கொள்ளை, கொலை வழக்கு அது. அங்கு சென்று தன் விசாரணையை ஆரம்பிக்கிறார். ஒரு வழக்கை விசாரிக்கப் போய் மேலும் சில பல மர்மங்களுக்கான விடை தெரிகிறது. அவை என்ன என்பதுதான் இந்த ‘டைரி’.
தனக்கான கதைகளைத் தேர்வு செய்வதில் அருள்நிதி தனி கவனம் செலுத்துவார் என்று பெயர் வாங்கியுள்ளார். இந்தப் படத்தையும் அப்படித்தான் தேர்வு செய்திருப்பார். ஆனால், இடைவேளை வரை அருள்நிதிக்கு திரைக்கதையில் ஒரு சில காட்சிகளை மட்டுமே வைத்திருகிறார் இயக்குனர். ஆனால், படம் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்திருக்கலாம். அருள்நிதிக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து அளவான நடிப்பு.
படத்தில் ஊட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு நள்ளிரவில் புறப்படும் ஒரு பேருந்து தான் முக்கிய கதைக்களம். அதில்தான் அதிக காட்சிகள் நடக்கிறது. அப்பேருந்து பயணிகளாக சிலர் நடித்துள்ளார்கள். அவர்களில் ஷாராக்கு மட்டும் அதிக வசனம், அ சாம்ஸ், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் படத்தில் உண்டு. மீதிப் பேர் நமக்கு அதிகம் தெரியாத முகங்கள். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹான் இருவரும் படத்தை எப்படியாவது தரம் உயர்த்திக் காட்டிவிட வேண்டும் என கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பம் நன்றாகத்தான் ஆரம்பிக்கிறது. ஊட்டிக்குச் சென்ற பின் அருள்நிதி விசாரணையை ஆரம்பித்தவுடன் வேறு கோணத்தில் படம் செல்லும் என்று எதிர்பார்த்தால் அங்கே ட்விஸ்ட் வைத்து வேறு கோணத்தில் நகர்த்தி செல்கிறார். படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம், கிளைமாக்சுக்கு முன்பாக நடக்கிறது. அது மட்டும் நாம் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று. இதுவரை வந்த தமிழ் திரையில் அப்படி ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்திருக்க மாட்டோம். அந்த திருப்புமுனை போலவே படம் முழுவதும் இருந்திருந்தால் நிரம்பிய எழுத்துக்களாக டைரி மாறி இருக்கும்.