தமிழ் நாட்டில் அறிந்தும் அறியாத 100 மேற்பட்ட சுற்றுலாதலங்கள் உள்ளன. அவற்றிலிருந்து ஒரு 10 சுற்றுலா தலங்களை அறிமுகப்படுத்துகிறார் ஆ.வீ.முத்துப்பாண்டி.
1. பாலருவி
தமிழ்நாடு டூ கேரளா எல்லைப்பகுதியில் பாலருவி நீர்வீழ்ச்சி உள்ளது. அதாவது, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட செங்கோட்டையில் இருந்து 30 கீ.மீட்டர் செல்ல வேண்டும். பால் வழிந்து ஊற்றுவதுபோல் நுரையுடன் நீர் வழிவதால் இதற்கு பாலருவி என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது. நுரைத்துக்கொண்டு ஓடிவரும் சிற்றோடைகள், வெள்ளிக்கம்பி போல் விழும் அருவிகள் என்று இந்த நீர்வீழ்ச்சிப்பிரதேசம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது.
2. தலையணை அருவி
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் தலையணை அருவி உள்ளது. இந்த அருவிக்கு செல்ல விரும்பும் பயணிகள், வாசுதேவநல்லூர், தரணி சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள சென்னை டூ தென்காசி செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து, மேற்குமலை தொடர்ச்சி மலையை நோக்கி 3 கி.மீட்டர் சென்றால், மலையின் அடிவாரம் வரும். அதன்பின்பு, வனத்துறை அதிகாரி அனுமதித்தால் தலையணை அருவி வரை வாகனத்தில் செல்லலாம் அல்லது அடிவாரத்திலிருந்து 2 கி.மீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்து செல்லலாம். அருவியைச் சுற்றிலும் மரங்களும் மலைகளும் இருப்பதால் குளிப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.
3. அய்யனார் அருவி
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் இருந்து 10 கிமீ (6.2 மைல்) மேற்கே அமைந்துள்ளது. இந்த அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இது வடகிழக்கு பருவ கால மழையில் நீர் பெறுகிறது. இந்த அருவி இராஜபாளையம் பகுதியின் முதன்மை சுற்றுலா ஈர்ப்பு பகுதியாக உள்ளது. இந்த அருவியானது இங்கு வாழும் காட்டு விலங்குகளான குரங்குகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் ஆகியவற்றிர்கும் நீராதாரமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு அய்யனார் பெயர் வந்ததற்கு காரணம் இங்கு உள்ள சிறிய காட்டு அய்யனார் கோயிலாகும். இந்த நீர்காத்த அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இரண்டு ஆறுகளான பழையாறு, நீராறு ஆகியன சேருமிடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
4. ஆதிச்சநல்லூர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இது திருநெல்வெலியிலிருந்து 24 கிமீ தொலைவில் ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு நடந்த அகழாய்வுகளில் பல அரிய இரும்புக்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு பல்லயிரக்கணக்கான தாழிகள் காணப்படுகின்றன. இவை சிவப்பு நிறத்தில் உள்ளன. சில தாழிகள் கருப்பு-சிவப்பு நிறத்திலும் உள்ளன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன. இன்றும் மாணவர்கள் மற்றும் அறிஞர்களின் சுற்றுலா தளமாக உள்ளது.
5. குட்லாடம்பட்டி அருவி
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி அருவி. அருவி 87 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. அருவி அமைந்திருக்கும் மலை சிறுமலை என அழைக்கப்படுகிறது.விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவியில் குளித்து இயற்கையை ரசித்து செல்கின்றனர்.அருவியின் அருகில் 500 ஆண்டுகள் பழமையான தாடகை நாச்சியம்மன் கோயில் உள்ளது.
6. கல்லணை
தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த கல்லணை. இந்த அணை கரிகால சோழனால் 1 ஆம் நூற்றாண்டில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் – கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. அதாவது, காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளையாக பிரிந்து கல்லணையை வந்தடைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
7. மனோரா கோபுரம்
பட்டுக்கோட்டையில் இருந்து 25 கிமீ தூரத்தில் மனோரா கோபுரம் அமைந்துள்ளது. மாவீரன் நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சுப் படைக்கும், ஆங்கிலேயருக்கும் ஒரு கடல் போர் நடந்தது. இந்த போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக சரபோஜி மன்னரின் படைகளும் போரிட்டன. அப்போது நெப்போலியன் படை தோற்கடிக்கப்பட்டது. அந்த வெற்றியின் நினைவாக சரபேந்திர ராஜ பட்டினம் கடற்கரையில் 120 அடி உயரமுள்ள கோபுரம் அமைக்கப்பட்டது. அறுங்கோண வடிவமுள்ள இந்த கோபுரத்தின் உச்சியை அடைய 120 படிகள் உள்ளன. 150 ஆண்டு பழமை வாய்ந்தது.
8. கோவை குற்றாலம்
கோவை குற்றாலம் அருவி, மேற்குமலைத் தொடர்ச்சியில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் கூடிய அழகிய இடமாக உள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை மேல் பகுதி சிறுவானி அணை உள்ளது. இது மாநிலத்தின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்திட வனத்துறை அனுமதிக்க வேண்டும். நகரிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது, இந்த பகுதி மாலை 5 மணிக்கு பின் அனுமதி இல்லை. கோயம்புத்தூருக்கு மிகஅருகாமையில் உள்ள ஒரே நீர்வீழ்ச்சி.
9. டாப்ஸ்லிப்
டாப்ஸ்லிப், கோயம்புத்தூரிலிருந்து 76 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது இந்த டாப்ஸ்லிப். சொல்லப்போனால் பலருக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது. சுற்றுலாவை நேசிக்கும் வெகு சிலரே இது பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2,554 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த டாப்ஸ்லிப் குன்னூர் அளவுக்கு சிறப்பானது. சேத்துமடை எனும் இடம் தாண்டிதான் இந்த டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்லமுடியும். இது 5 கிமீ தொலைவுக்கு முன் வருகிறது.
10. பழவேற்காடு
பழவேற்காடு நகரம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரத்தின் வடக்கே கிட்டத்தட்ட 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, குறிப்பாக ஸ்ரீ ஹரிகோட்டா தீவுக்கும் வங்காள விரிகுடாவிற்க்கும் இடையில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. ஒரு குறுகிய நீர் குளம் மூலம் பழவேற்காடு எரி அமைந்துள்ளது. பழவேற்காடு ஏரியின் கரையோரங்களுக்கு அருகில் அழகிய பறவைகளாக பழவேற்காடு பரந்து விரிந்துள்ளது. அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும், ஆயிரகணக்கான புலம்பெயர் பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன.