தள்ளாடும் வயதிலும் தளராத மனதுடன் சாதனை படைத்த வரதா!

புதிய செய்திகளை அறிந்து கொள்ளவும், கற்கவும் மக்கள் எப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். குறிப்பாக வயதானவர்களிடம் குழந்தைகளைப் போலவே புதுப்புது செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வயதாக, வயதாக அதிகரிக்கிறது. குறிப்பாக கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பது குறித்து பல கதைகளை நாம் அறிந்திருப்போம். அந்த வகையில், 87 வயதில் கல்வியில் சாதித்துக் காட்டிய வரதா சண்முகநாதன் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் வரதா சண்முகநாதன், யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மிக வயதான பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். இலங்கையில் வேலணை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வரதா, தனது முதல் இளங்கலை பட்டத்தை சென்னையில் உள்ள மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் முடிந்துள்ளார். ஸ்ரீலங்காவில் உள்ள இலங்கை பல்கலைக்கழகத்தில் டிப்ளோமோ பட்டம் பெற்றார். எப்படியாவது மாஸ்டர் டிகிரி வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் இருந்ததால், 50 வயதின் தொடக்கத்தில் லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியில் பயன்பாட்டு மொழியியலில் தனது முதல் மாஸ்டர் டிகிரியை வரதா பெற்றுள்ளார்.

அதன் பிறகு, 60 வயதுக்கு மேல் கல்வி கற்கும் கனடா குடிமக்களுக்கு கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவது பற்றி அறிந்து கொண்ட வரதா, யார்க் பல்கலைக் கழகத்தில் 2019ம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்ஸில் தனது இரண்டாவது மாஸ்டர் டிகிரியை முடித்துள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் அம்மா மகள் இருவரும் சேர்ந்து படித்ததுள்ளனர். 4 பிள்ளைகள், 7 பேரக்குழந்தைகளை கொண்ட மிகப்பெரிய குடும்பத்தின் மூத்த உறுப்பினரான வரதா சண்முகநாதன் தள்ளாடும் வயதிலும் தளாராத மனதுடன் சாதனை படைத்துள்ளார்.

தள்ளாடும் வயதிலும் தளராத மனதுடன் சாதனை படைத்த வரதா! - மெல்லினம் - தமிழ்

திருமணத்திற்கு பிறகு, 2004ம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்தார். இவரது கணவரும் ஆசிரியர் என்பதால் வேலை விஷயமாக பல நாடுகளுக்குப் பயணப்பட்டுள்ளனர். ஆசிரியர்களான இருவரும் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளனர். வரதாவின் இந்த முயற்சிக்கு மிக உயரிய கௌரவம் கிட்டியுள்ளது. ஆம், ஒன்டாரியோ மாநில சட்டமன்றத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று வரதாவை கைதட்டி பாராட்டியுள்ளனர். மேலும், ஒன்டாரியோ மாநில நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரதா பற்றிய காணொலியை வெளியிட தற்போது அது பட்டி தொட்டி எல்லாம் வைரலாகி வருகிறது.

“வரதா சண்முகநாதனை ஒண்டாரியோ சட்டமன்றத்தில் கௌரவித்தது எனது பாக்கியம். வரதா அம்மாவின் கற்பித்தல் மற்றும் கற்றல் மீதான காதல் அவரது வாழ்நாள் முழுவதும் நான்கு வெவ்வேறு கண்டங்களில் வாழவும் கற்பிக்கவும் வாய்ப்பளித்தது,” என்றும் பதிவிட்டுள்ளார். 87 வயதிலும் விடாமுயற்சியுடன் கல்வி கற்றுள்ள வரதா சண்முகநாதன் இன்றைய கால இளம் தலைமுறையினருக்கும் அவரது கல்வி ஆர்வத்திற்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளார்.