பல ஆண்டுகளாகச் சில துறைகள் ஆண்களுக்குரியவை என்கிற நம்பிக்கை கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. அதிலும் ஃபேஷன் துறை என்றால் ஆண்களே கோலோச்சி இருந்தனர். அத்தகைய நம்பிக்கையை உடைத்துப் பல சாதனைகளைப் புரியும் பெண்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்தச் சாதனைப் பட்டியலில் தன் பெயரையும் இணைக்கும் முயற்சியில் இருக்கிறார் இஷானா இஸ்மாயில்.
பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என்கிற எண்ணத்தில் இவர் தொடங்கிய ‘அனா க்ரியேஷன்’ ஆரம்ப காலத்தில் சிறிய துணிக்கடையாகவே தொடங்கப்பட்டது. நட்டத்தின் காரணமாக என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது தோன்றியதுதான் மறுபயன்பாட்டுத் துணிகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் நாப்கின். “இந்த நாப்கின் தொழிலால் எங்களுக்கு வரப்போகும் லாபத்தைப் பற்றிச் சிறிதும் அறியாமல்தான் இதைத் தொடங்கினோம். இந்தத் தொழில் எங்களுக்குப் புதிது. எந்த முன் அனுபவமும் இல்லாமல் இங்கு வந்துதான் கற்றுக்கொண்டோம். அந்தக் காலத்தில் நாம் பல பொருள்களை மறுபயன்பாடு செய்ததால், வீணாவது குறைவாக இருந்தது. நாம் அடிக்கடி பேசும் கழிவு மேலாண்மைக்கு ஏற்ப, இது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தோம். அதன் பொருட்டே இதை ஆரம்பித்தோம். இதை முதலில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாப்கினை எப்படி மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய நாப்கினுக்கான சந்தை நாம் நினைத்ததுபோல் உயர்ந்துவருகிறது” என்கிறார் இஷானா.
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை, சமகால அரசியல் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் ‘எனவே பேசுவோம்’ என்கிற யூடியூப் சேனலை இஷானா நடத்திவருகிறார். “மறுபயன்பாட்டுத் துணி நாப்கினுக்குச் சமூக ஊடகங்களில் கிடைத்த ஆதரவுதான் இப்படியொரு சேனலைத் தொடங்கக் காரணம். இதன்மூலம் பொருளாதாரம், சட்டம் குறித்த விழிப்புணர்வைப் பெண்களுக்கு அளிக்கலாம் என்று தோன்றியது. கருத்தரங்கத்துடன் தொடங்கியது எங்களது பயணம்.
கடம்பரை என்னும் இடத்தில் உள்ள மலைவாழ் மக்களின் குரலை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். தொழிலதிபர் என்றாலே பெரிய பெரிய நிறுவனங்களை நடத்துகிறவர்கள்தான் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சிறுதொழில் செய்து குடும்பத்தை நடத்தும் பெண்களும் தொழிலதிபர்கள்தான். சிறுதொழிலாக இருந்தாலும் தொழில் தொழில்தான் என்ற கருத்தை விதைக்க முற்பட்டோம். ரதி, ஜானகி, சுபா போன்ற சிறு தொழிலாளிகள் அவர்களின் தொழில் பற்றியும் வாழ்வாதாரம் பற்றியும் ‘எனவே பேசுவோம்’ வழியாகப் பகிர்ந்துகொண்டனர்” என்கிறார் இஷானா.
அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்று நம்பும் இந்தச் சமூகத்தில் அரசியலுக்கு மட்டுமன்றி நம் வாழ்வுக்கும் திறமை மட்டும் இருந்தால் போதும் என்ற உண்மையை உரக்கச் சொல்லிவருகிறார் இஷானா. அரசியல் அனைவராலும் பேசப்பட வேண்டுமென்றும், அனைவரின் கருத்தும், முக்கியமாகப் பெண்களின் குரல் அனைத்து இடங்களிலும் ஒலிக்கவேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது. பெரியார், அம்பேத்கர் வழியில் பெண்கள் விழிப்போடு அவர்களின் உரிமைகளுடன் வாழ்வதே அவர்களின் வெற்றியாக இஷானா கருதுகிறார். அதைத் தன் யூடியூப் சேனல் வழியாகப் பதிவுசெய்தும் வருகிறார்.