குழந்தைகளை அடிக்கலாமா?

குழந்தைகளை அடிக்கலாமா? “அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க…” என்று பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. உண்மையில் அடி உதவுமா? குழந்தைகளை அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தையை அடிப்பது என்பது குற்றம். மனிதராக பிறந்த நமக்கு உடல் ரீதியாக துன்பம் ஏற்பட்டால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சட்டம் உள்ளதோ அதுபோல குழந்தைகளுக்கும் இருக்கிறது. குழந்தைகளது உடல் குழந்தைகளின் உரிமை. நம் உடல் நமக்கு எப்படி உரிமையோ அதுபோல அவர்களுக்கும் அதே உணர்வு உண்டு. குழந்தைகளுக்கு பிடிக்காத முறையில் அவர்களது உடலை மனதைக் காயப்படுத்துவது குற்றம்.

Parents Beating Children Mellinam Tamil
Parenting – குழந்தைகளை அடிக்கலாமா?

மனித உரிமை

மனித உரிமைப்படி உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் சட்டத்தின் பாதுகாப்பை அணுக முடியும். வழக்கு கோர முடியும். முன்பெல்லாம் எங்கள் அப்பா, அம்மா அடித்து வளர்த்த பிறகு தான் நான் எல்லாம் முன்னேறினேன் எனச் சொல்லும் பலருக்கு சொல்ல வேண்டிய ஒரே பதில். முன்பிருந்த அதே மனநிலை, உடல்நிலை, வளர்ச்சி, பக்குவம், சூழல் இன்று இல்லை. இதை அவசியம் பெரியவர்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். இன்றைய குழந்தைகள் ரொம்பவே சென்ஸிடிவ். உடன் படிக்கும் தோழி பேசவில்லை என சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். அம்மா எப்போதும் அடிக்கிறாங்கன்னு, மகன் தற்கொலை செய்து கொண்டான். வகுப்பில் எல்லோர் முன்னரும் ஆசிரியர் அடித்தார் என மாணவன் தற்கொலை செய்து கொண்டான். நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒரேபோல இருக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல.

முதலாக, இது அவசர உலகம்:

காலம் மாறிவிட்டது. குழந்தைகளின் மன வளர்ச்சி, மனப்போக்கில் மாற்றம் அதிகம். பொதுவாக உயிரினங்கள் தன்னை விட பலசாலியான ஓர் உயிரினத்தால் ஆபத்து வர நேர்ந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னைத் தற்காத்து கொள்ள எதிர்க்கும். அதுபோல, குழந்தைகளும் இயற்கையாகவே 4&-5 வயதில் தன்னை காயப்படுத்தும் நபரை எதிர்க்கவோ, அடிக்கவோ, தன் எதிர்ப்பினை எதாவது ஒரு முறையில் காட்டவோ செய்வார்கள். அடி உதவும் என சொல்லி வந்தது. தவறான கண்ணோட்டம். அடி என்றைக்குமே என்றுமே உதவாது. இது அனைவருக்கும் பொருந்தவும் பொருந்தாது. முக்கியமாக, குழந்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. அடிக்க, அடிக்க குழந்தைகள் சண்டியாக மாறுவார்கள். சண்டித்தனம் அதிக மூர்க்கத்தனமாக மாறும். அதீத இயக்கம், கோபம், வெறுப்பு, கெட்ட செயல்கள், கெட்ட எண்ணங்கள், கெட்ட சேர்கையிலும் கெட்ட செயலிலும் கொண்டு செல்லும் ஆபத்தை ஏற்படுத்தும்.

Parenting Guidance – Depression of a Child

அடித்தபின் பெற்றோரின் மனநிலை:

குழந்தையை அடித்த பிறகு எந்த பெற்றோராவது ஆனந்தமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தை தெரியாமல் தன்னைத் திருப்பி அடித்து விட்டால் நிம்மதியாக இருக்க முடியுமா… அது மிக கொடுமை. அடிப்பது என்பது குற்றம். வன்முறை என்றைக்குமே தீர்வாகாது. நல்வழிப்படுத்த அன்பும் அக்கறையும் அரவணைப்பும் புரிதலுமே மிகவும் முக்கியம். எந்த காரணமோ எந்த சூழலோ பெற்றோர் குழந்தைகளை அடிப்பது சரியான முடிவாக இருக்காது. ஒரு குழந்தை ஒரு தவறை செய்தால், அந்த குழந்தையிடம் பேசாமல் இருப்பது, கொஞ்சாமல் இருப்பது என என்ன குழந்தையின் பலவீனமோ அதை நோக்கி நீங்கள் சிறிய தண்டனை வழங்கி குழந்தையை திருத்தவேண்டும். இப்படி செய்வியா என நன்றாக அடி அடித்துவிட்டு, ஒரு மணி நேரமோ அடுத்த நாளோ குழந்தையை தூக்கி கொஞ்சுவதில் ஒரு பயனும் இல்லை. இந்த நிலை குழந்தையின் நடவடிக்கையை இன்னும் மோசமாக்கும்.