குற்றாலம் அருகில் அழகான நான்கு சுற்றுலா தலங்கள்!

குற்றால சீசன் களை கட்டுகிறது…. குற்றாலம் சென்றாலே கவிஞர் வாலி எழுதிய
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா – என்ற பாடல் நினைவுக்கு வந்துபோகும். அடுத்ததாக அனைவரது மனதிலும் தோன்றுவது அருவிகளும் அழகான மேற்கு தொடர்ச்சி மலையும் தான். பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி ஆகிய ஐந்து அருவிகள் மட்டுமே இங்கு மிகவும் புகழ்பெற்ற இடங்கள். மற்ற அருவிகளான செண்பகா தேவி, தேனருவி, மற்றும் பழத்தோட்ட அருவிக்கு பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை. பெரும்பாலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஐந்து முக்கிய அருவிகளில் ஆசை தீர குளித்துவிட்டு கிளம்பி விடுவது வாடிக்கை. ஆனால் குற்றாலத்தை சுற்றி பல அழகான சுற்றுலா தலங்கள் உள்ளன. அத்தகைய அதிகம் அறியப்படாத இடங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

குண்டாறு அணை:

அருவியில் குளிப்பது பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிக்காது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது.
குற்றாலத்திலிருந்து 13கி.மீ. தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணைக்கட்டு. இது 1983ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் பலர் தங்களது திருமண போட்டோ ஷூட்டுகளுக்கு இந்த இடத்தையே விரும்புகின்றனர். ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, பலாப்பழம், மாம்பழம் என சுற்றியுள்ள மலைகளில் விளைந்த பழங்களை இங்குள்ள சிறு வியாபாரிகளிடம் வாங்கலாம். இந்த அணையை ஒட்டி இருக்கும் மலையில் இயற்கை எழில் கொஞ்சும் சில அழகிய அருவிகள் உள்ளன. அருவியில் குளிப்பது பிடிக்கும் ஆனால் கூட்டம் பிடிக்காது என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம் இது. அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களில் செல்ல முடியாது.

மிகவும் கரடு முரடான காட்டு வழிப்பாதை என்பதால் வாகனங்களை மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும் அல்லது தனியார் ஜீப்புகள் மூலமாகவும் நீங்கள் செல்லலாம். ஜீப்பில் செல்ல ஒரு நபருக்கு 100 முதல் 200 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இந்த காட்டுப்பாதை வழியாக அருவிக்கு செல்வதே ஒரு சாகசப் பயணம் தான். பருவமழைக் காலங்களில் இந்த அணைக்கட்டு வேகமாக நிரம்பி விடும். அணை நிரம்பி மறுகால் பாய்வதை பார்க்க ரம்மியமாக இருக்கும். குற்றாலத்திலிருந்து செங்கோட்டை வழியாக பயணம் செய்தால் 30 நிமிடங்களில் இந்த அணைக்கட்டை அடையலாம்.

அடவிநயினார் அணை:

குற்றாலத்திலிருந்து 21கி.மீ. தொலைவில், கேரள எல்லை அருகே அமைந்துள்ளது இந்த அணை. இந்த அணைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் இருக்கும் பசுமையான வயல்வெளிகளை ரசித்தபடியே செல்லலாம். இயற்கை எழில் கொஞ்சும் இந்தச் சாலையை பாபநாசம், அந்நியன், தர்மதுரை போன்ற பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அணைக்கு மேலே அருவி உண்டு, ஆனால் அங்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை. காரணம் ஆபத்தான காட்டு வழிப்பாதை மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். குற்றாலத்திலிருந்து பண்பொழி வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை அடைந்த பின் முக்கிய சாலையிலிருந்து வலது புறம் திரும்பி 3 கி.மீ. தூரம் பயணித்தால் இந்த அணையை அடையலாம்.

கும்பாவுருட்டி அருவி:

குற்றாலம்-அச்சன்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்தால் கேரள எல்லையை அடையலாம். அங்கிருக்கும் கேரள வனத்துறையின் சோதனைச் சாவடியில் உங்கள் வாகனம் குறித்த விவரங்களைப் பதிவு செய்த பின், கும்பாவுருட்டி அருவிக்கான மலைப் பயணம் தொடங்குகிறது. அதிர்ஷ்டம் இருந்தால் மான்கள், மிளாக்கள், அரிய வகை பாம்புகள், காட்டு அணில்களை இந்த பயணத்தில் நீங்கள் பார்க்கலாம்.

இங்கு பயணிப்பது ஊட்டி, மசினகுடி போன்ற சாலைகளில் பயணிக்கும் உணர்வை தரும். வழியெங்கும் தென்படும் சிறு அருவிகளும், அழகிய நீரோடைகளும் நம்மை கவர்ந்து இழுக்கும். கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் என்பதால் சொந்த வாகனங்களில் செல்பவர்கள் சற்று கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டும்.குற்றாலத்திலிருந்து 29கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. தென்காசி-அச்சன்கோவில் இடையே தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலமும் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லலாம்.

கும்பாவுருட்டி அருவி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்கு பின்பற்ற வேண்டிய விதிகள் அதிகம். ஒரு நபருக்கான நுழைவு கட்டணமாக 50 ரூபாய் செலுத்தி விட்டு, பிரதான சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி காட்டிற்குள் நடந்து சென்றால் இந்த அருவியை பார்க்கலாம். சற்று தொலைவு தான் என்றாலும் அருவியை கண்டவுடன் கிடைக்கும் அந்த புத்துணர்வு களைப்பை போக்கி விடும். அருவியை மிகச் சிறந்த முறையில் பராமரிக்கிறார்கள். வார நாட்களில் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும், அதிக நேரம் குளிக்கலாம். குடும்பத்துடன் செல்ல ஏற்ற அருவி.

பாலருவி:

குற்றாலத்திலிருந்து 27கி.மீ. தூரத்தில் கேரளாவின் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி.
புளியரை வழியாக கேரள எல்லையைக் கடந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால் ஆரியங்காவு ஊரை அடையலாம். அங்கு உள்ள சோதனைச் சாவடிக்கு அருகில் இடது புறம் திரும்பினால் இந்த அருவிக்கு செல்லும் பாதையின் நுழைவு வாயிலை பார்க்கலாம். செங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆரியங்காவுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருவி அமைந்திருக்கும் காட்டுப் பகுதிக்கு கேரளா வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். மெயின் சாலையிலிருந்து 4கி.மீ. தூரம் என்பதாலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும் நடந்தோ அல்லது தங்கள் சொந்த வாகனங்களிலோ சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. ஒரு நபருக்கான நுழைவு கட்டணம் 50 ரூபாய்.
காடுகளின் வழியே செல்லும் ரம்மியமான சாலையில் பயணிக்கும் உணர்வை வார்த்தைகளால் விவரிப்பது சற்று கடினம் தான். அருவிக்கு 200 மீட்டர் தொலைவில், வனத்துறையின் வாகனத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால், இதமான சாரலை உணர முடியும்.

பருவமழைக் காலங்களின் போது திருவிதாங்கூர் மகாராஜாக்கள் இங்கு வந்து நீராடி செல்வது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக சிதிலமடைந்த கல் மண்டபத்தையும், குதிரை லாயங்களையும் இங்கு காணலாம். ஜூலை- முதல் செப்டம்பர் மாதங்களில் சென்றால், 300 மீட்டர் உயரத்திலிருந்து பால் போன்ற நிறத்தில் தண்ணீர் விழுவதைப் பார்த்து ரசிக்கலாம். ஆரியங்காவு ஊரிலிருந்து செங்கோட்டை-புனலூர் சாலையில் தொடர்ந்து பயணித்தால், 20 நிமிடங்களில் தென்மலை அணையை அடையலாம். பருவமழைக் காலங்களின் போது பிரதான சாலையில் நின்றவாறே பிரம்மாண்டமான தென்மலை அணை நிரம்பி வழிவதை பார்த்து ரசிக்கலாம்.

அணைக்கு முன்பாக மரத்தாலான ஒரு தொங்கு பாலம் உள்ளது. ஒரே சமயத்தில் 5 பேர் மட்டுமே இந்த பாலத்தில் செல்ல அனுமதி உண்டு. தொங்கு பாலத்தில் நடந்தவாறு அணையை மிகவும் அருகிலிருந்து பார்ப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.அணைக்கு அருகில் அமைந்துள்ள தென்மலை சூழலியல் சுற்றுலா பூங்கா, குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்கு ஏற்ற இடம். இங்கு நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 70 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வண்ணத்துப்பூச்சி பூங்கா, நடனமாடும் இசை நீரூற்று, காட்டிற்குள் சைக்கிள் ஓட்டுவது முதல் அணையில் படகு சவாரி செல்வது வரை, இயற்கை விரும்பிகளை குதூகலப்படுத்தும் வகையில் பல அம்சங்கள் இங்கு உள்ளன.இங்குள்ள மான் பூங்காவில் சாம்பார் மான்கள் மற்றும் அழகான புள்ளி மான்களை அதிகம் பார்க்க முடியும். மான் பூங்கா செல்வதற்கான நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இரவில் தங்குவதற்காக கேரள சுற்றுலாத்துறையின் சார்பாக இங்கு சிறப்பு விடுதிகள் உள்ளன.