“சிறுவர்களை கதைப் புத்தகம் படிக்க வைக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு பிடித்த தலைப்புகள் வைத்து கதைகள் உருவாக்கி எழுதி வருகிறேன்” என மழலை மாறாத மொழியில் தான் ஒரு “கதை சொல்லி மற்றும் கதை ஆசிரியர்” என்று தன்னை அறிமுகப்படுத்தி வருகிறார் ஹர்ஷவர்தினி ராஜேஷ். இவர், கோவையைச் சார்ந்தவர், இவருக்கு 9 வயதுதான் ஆகிறது. இனி அவர் உரையாடியதிலிருந்து…
“அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். நான் 11 நூல்கள் எழுதக் காரணம் என் பெற்றோர் ஒரு பக்கம் இருந்தாலும், என்னை மேலும் உற்சாகப்படுத்தியது என் அக்கா வர்தினி ராஜேஷ். எனக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. பள்ளிக்கூடத்தில் நடக்கும் பேச்சு போட்டி, நாடக போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, கதை எழுதும் போட்டி என அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வேன். அப்படி இருக்கும்போது, சிறார் எழுத்தாளர் கன்னி கோவில் ராஜா மாமா, குழந்தைகளுக்காக நிறைய ஆக்டிவிட்டிஸ் பண்ணிட்டு இருக்காங்க. அவர் ஒருங்கிணைத்த ஒரு பயிற்சி பட்டறையில் ஒரு படம் கொடுத்து அந்த படத்துக்கு கதை எழுத சொன்னாங்க. அதை அம்மாவிடம் சொல்ல சொல்ல அவங்க டைப் பண்ணி அனுப்பினாங்க. நான் எழுதின அந்த கதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
அதன் பின் தொடர்ந்து ராஜா மாமாவோட ‘லாலிபப் சிறுவர்கள் உலகம்’ என்ற சிறுவர்களுக்கான குழுவில் இணைந்தேன். அங்கு கதைகள் எப்படி எழுதனும், சொல்லனும்னு நிறைய பயிற்சிகள் கொடுத்தார். அவர் சொல்லி கொடுத்த ஒரு வாரத்தில் தொடர்ந்து பத்து கதைகள் எழுதினேன். எழுதிய கதைகளை ‘புத்தகமாக போடலாமா’னு, ராஜா மாமாகிட்டையே கேட்டோம். அவர் ஒரு லே அவுட் டிசைனராக இருந்ததால், புத்தக வடிவில் கதைகளை டிசைன் பண்ணி கொடுத்தார். அதற்கான வாழ்த்துரை முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களிடம் வாங்கினோம். அம்மா-அப்பாவின் 18வது திருமண நாளன்று என் 18 கதைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். அதை பதிப்பிக்க விஜயா பதிப்பகத்தை அணுகியபோது, ‘ரொம்ப அருமையா இருக்கு, தாராளமா நாங்க பண்ணி கொடுக்கிறோம்’னு சொன்னாங்க. அந்த ஆசி எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது.
நான் கதை சொல்ல சொல்ல, அம்மா டைப் பண்ணுவாங்க, அக்கா அதுக்கு ஏற்ற மாதிரி ஓவியம் வரைவாங்க. சின்ன வயதில் எழுதி இருப்பதால், ‘விருதுக்கு ஏதாவது முயற்சி பண்ணுங்க’னு திரைப்பட இயக்குநர் அமுதவாணன் மாமா அதற்கும் ஒரு வழிகாட்டினார். கோவையில் டி.ஆர்.ஓ தலைமையில் புத்தகம் வெளியிட்டோம். அங்கு வந்திருந்த தமிழன் புக் ஆஃப் ரெக்கார்டு சார்ந்திருந்தவர்கள், நான்தான் இந்த கதை எல்லாம் எழுதினேனா என்று தெரிந்து கொள்வதற்காக, ‘ஒரு பையன், மழை, குடை, நீர்’ இந்த நான்கு வார்த்தைகள் சொல்லி கதை சொல்ல சொன்னாங்க. அதை வைத்து ஒரு கதை சொன்னேன். அடுத்து இந்தியன் ரெக்கார்டு. அவங்க இன்னும் கொஞ்ம் கூடுதலான வார்த்தைகள் கொடுத்து என்னை கதை எழுதவும், அக்காவை அதற்கு ஏற்றர் போல் ஓவியமும் வரைய சொல்லி 45 நிமிடம் கொடுத்தார்கள். நாங்கள் 38 நிமிடத்திலேயே முடிச்சு, அதே மேடையில் ‘இளம் சாதனையாளர்கள் விருது’ பெற்றோம்” என்கிற ஹர்ஷவர்தினி தான் எழுதிய நூல்கள் குறித்து சிறு அறிமுகம் கொடுத்தார்.
‘‘மேடையில் கிடைத்த அனுபவம் எனக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. ஒரு நூல் எழுதியாச்சு, விருதும் வாங்கியாச்சுன்னு அப்படியே உட்கார்ந்திடக் கூடாது. அடுத்து என்ன செய்யலாம்ன்னு சிந்திக்கணும். இந்த கதைகளை விட மேலும் பெரிய பெரிய கதைகளை எப்படி எழுதணும்ன்னு சிந்திக்கணும். அந்த சிந்தனை தான் என்னை அடுத்த நூல் எழுத தூண்டியது. அம்மாவின் கல்யாண நாளுக்கு 18 கதைகள் கொண்ட நூல் வெளியிட்டது போல், என்னுடைய ஒன்பதாவது பிறந்த நாளுக்கு 9 கதைகள் அடங்கிய 9 நூல்கள் போடலாம்னு அம்மாகிட்ட சொன்னேன். அவங்களும் சரின்னு சொல்லி இருக்காங்க.
சில சமயம் அவங்களும் என்ன மாதிரி கதைகள் எழுதலாம்ன்னு ஐடியா கொடுத்தாலும், முடிவு என்னுடையதாக இருக்கணும்ன்னு அம்மா சொல்வாங்க. அதன்படி மூன்றாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் உள்ள செய்தியைக் கதையா சொல்லலாம்னு முடிவு செய்து, அதை அம்மாவிடம் சொன்னேன். ‘இதை எப்படி பாப்பா கதையா சொல்ல முடியும்’னு அம்மா கேட்டாங்க. நான் புரிந்து கொண்டதை கதையாக அம்மாவிடம் சொன்னேன். அப்படி சொன்னது இன்னும் எளிமையா இருந்தது.அதை, ‘மிஷாசினியின் மீன் பொம்மை’ என்ற தலைப்பில் ஒரு நூல் கொண்டு வந்திருக்கேன். அடுத்து அதிவீர ராம பாண்டியன் அவர்கள் எழுதிய செய்யுள்களை அம்மா ஒவ்வொன்றாக விவரித்து எனக்கு புரிய வைத்தாங்க. அதிலிருந்து சில சாரம்சங்கள் கொண்டு ‘குகைக்குள் பூதம்’ என்ற நூலை எழுதினேன். ராஜா மாமா கொடுத்த ஒர்க் ஷீட் வைத்து ‘மூன்று கண்ணன் வந்துட்டான்’ என்கிற மூன்றாவது நூல்.
நான்காவது நூல் ‘அரை பல்லை காணோம்’. இது அப்பாக்கு சொத்தை பல் வந்து, அதுக்காக டாக்டரை பார்க்க போகும்போது, இனி நமக்கும் சொத்தை பல் வரக் கூடாதுனா என்னென்ன செய்யணும்னு கற்பனை கலந்த ஒரு கதை. ‘ஐந்து பூதங்கள்’ என்கிற கதையை நாவல் மாதிரி முயற்சி செய்தேன். அடுத்து ஆறாவது கதையிலிருந்து, ஒன்பதாவது கதை வரை தொடர் கதை போல் எழுதினேன். ஒவ்வொரு கதை முடியும்போது, அதற்கான தொடர்ச்சி, அங்கு எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கான பதில் அடுத்த கதையில் வருவது போல் எழுதினேன்.
அண்மையில் ட்ரெண்டான ‘குக்கு குக்குஞ்’ பாட்டு வச்சு, ராஜா மாமா, ‘இந்த பாட்டுக்குள் நிறைய விலங்குகள், மரங்கள் எல்லாம் இருக்கு. யார் முதலில் கண்டுபிடித்து சொல்றாங்க’னு பார்க்கலாம் என்று ஒரு ஆக்டிவிட்டி கொடுத்தார். உடனே அந்த பாட்டு கேட்டு கேட்டு எழுதி வச்சு அவருக்கு அனுப்பியதும், அன்று மாலையே இதை எல்லாம் வைத்து ‘குக்கு குக்கு தவளைகள்’ என்கிற கதை உருவாக்கினேன்.
இதற்கடுத்து ‘மேக்கப் போட்ட விலங்குகள்’ என்ற நூலை கொஞ்சம் நகைச்சுவையா எழுதலாம்னு முயற்சி செய்திருக்கிறேன். அழிந்து வரக் கூடிய விலங்கினங்கள் பற்றி அப்பா, அம்மா கொடுத்த விவரங்களை வைத்து, ‘காட்டுக்குள் திருவிழா’ என்ற நூல் எழுதி இருக்கேன். இதில் கார்ட்டூன் சேனல்களில் வரும் கதாபாத்திரங்களை, ரீமேக் செய்து எழுதினேன். பொதுவாக என் கற்பனையில் வருவதை அப்படியே கதையாக சொல்லிவிடுவேன். அது புத்தகமாகிறது. இப்படி என் வாழ்க்கையில் நான் சந்தித்த மற்றும் பார்க்கும் செய்திகளைத்தான் கதையாக எழுதுகிறேன். நான் என்ன கதை எழுதினாலும் அதில் ஒரு நீதி செய்தியாக இருப்பது போல் பார்த்துக் கொள்வேன்’’ என்கிறார் ஹர்ஷவர்தினி.
Mellinam Subscription for 1 year!
On Subscription, now you get the magazine at your Doorstep at best price.
Subscribe Now