கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ்

கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் - மெல்லினம் - தமிழ்

பிறப்பும் வளர்ப்பும்:

மிதாலிராஜ் 1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாளில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் பிறந்தார். தந்தையின் பெயர் துரைராஜ், தாய் லீலாராஜ். ஐதராபாத் தெலுங்கானாவில் வசித்து வருகின்றனர். மிதாலிராஜ் செகந்தரா பாத்தில் உள்ள ரி.ஷி.பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். அதன்பின், மிதாலிராஜ் கஸ்தூர்பா ஜூனியர் பெண்கள் கல்லூரியில் படித்தார்.

தந்தை துரைராஜ்:

தந்தை துரைராஜ் அவர்களின் பூர்வீகம் தமிழ்நாடுதான். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவர் விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றினார்.துரைராஜ் தன் மகள் மிதாலிராஜ் 10 வயது சிறுமியாக இருந்தபோது அவளது கையில் கிரிக்கெட் மட்டையத் தந்து விளையாட வைத்தார்.

மகளிர் இந்திய கிரிக்கெட் அணியில் நுழைவு:

மிதாலிராஜ் 16ஆம் வயதில் மகளிர் இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்தார். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அணியில் இடம் பெறும் வாய்ப்பு கைநழுவிப் போனது. மிதாலி`ராஜ் 1999ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதியில்தான், முதல் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்காக விளையாடினார். அயர்லாந்து அணிக்கு எதிரான அந்த ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தன் நுழைவை மிக அட்டகாசமாகப் பதிவு செய்தார்!

முதல் விக்கெட்டிற்கு ரேஷ்மா காந்தி (104 நாட்அவுட்) உடன் சேர்ந்து, மிதாலிராஜ் 258 ரன்கள் குவித்தார்! அவர் 114 ரன்களுடன்ஆட்டமிழக்காமல் இருந்தார்! சிறப்பான அந்த நல்ல தொடக்கம் மிதாலிராஜிற்குத் தொடர்ந்தது; அவர்இறுதிப் போட்டி வரை தன்னுடைய ரன் வேட்டையத் தொடர்ந்தார்!

டெஸ்ட்மேட்ச், ஒரு நாள் மேட்ச்:

மகளிர் கிரிக்கெட்டின் டெஸ்ட் மேட்ச்சாக இருந்தாலும் ஒருநாள் மேட்ச்சாக இருந்தாலும், ஜி 20 மேட்ச்சாக இருந்தாலும் அனைத்து வகை ஆட்டங்களிலும் மிதாலிராஜ் அதிக ரன்களைக் குவித்தார்.
மிதாலிராஜ் மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகரன்களை குவித்துள்ள வீராங்கனை ஆவார்.

மிதாலிராஜ் வீராங்கனையின் சாதனை:

மிதாலிராஜ் மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகரன்களை குவித்துள்ள வீராங்கனை! அவர் 232 ஒரு நாள் இன்னிங்ஸ் ஆடி 7805 ரன்கள் இந்திய அணிக்காக விளையாடி குவித்துள்ளார்! இது ஓர் இமாலய சாதனை! அவ்வீராங்கனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக 23 ஆண்டுகளில் 333 போட்டிகளில் விளையாடி 10868 ரன்கள் குவித்துள்ளார்! அதுமட்டுமா? உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் அரங்கில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை நம் மிதாலிராஜ்தான்!
அம்மட்டோ; தொடர்ந்து 109 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீராங்கனை மிதாலிராஜ்தான்!

‘லேடி டெண்டுல்கர்!’

தமிழ் சினிமா உலகில் நீண்ட வசனங்களைப் படிக்காமல், ஒரு முறை கண்ணை மூடியபடி வாசிப்பதைக் கேட்டாலே போதும்ஞ் சிவாஜிகணேசன் தம் சிம்மக்குரலில் கடகடவென்று அந்த நீண்ட நெடிய வசனத்தை பேசிவிடுவார்! அப்படிப்பட்ட சிறந்த நினைவாற்றல் ஆச்சி மனோரமாவிற்கும் உண்டு! அதனால், தமிழ் சினிமா உலகில் நடிகை மனோரமாவை பெண் சிவாஜி என்றே அழைப்பர்!
அதேப் போன்று, இந்திய கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாகத் திகழும் டெண்டுல்கர் போன்ற மாபெரும் ஆற்றல் நம் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜிடம் மண்டிக் கிடப்பதால் அவரைக் கிரிக்கெட் ரசிகர்கள் ‘லேடிடெண்டுல்கர்!’ என்று செல்லமாக அழைக்கின்றனர்!

கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் - மெல்லினம் - தமிழ்

சூழலுக்கேற்ப ஆடும் திறமை:

கிரிக்கெட் ஆடு களத்தில் சூழலுக்கேற்ப ஆடும் திறமை நம் மிதாலிராஜிற்கு உண்டு. பார்ப்பவர்களுக்கு அவர் நிதானமாக ஆடுவதுபோல தோன்றினாலும், எதிரணிக்கு மிதாலிராஜ் சிம்ம சொப்பனமாகத் தோன்றுவார்! அத்தகைய வீராங்கனை மிதாலிராஜ்!
உலகக்கோப்பை போட்டியில் இந்தியக் கிரிக்கெட் மகளிர் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது உண்மைதான்! ஆனால், அப்போட்டி சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை எனும் சாதனைப் படைத்தார்! ஆனால், இந்திய அணி தோல்வியுற்றதால் அவர் தம் சாதனையைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது, அவர் கடும் ஏமாற்றம் அடைந்தார். “வெற்றி பெற்றிருந்தால் நன்றாக கொண்டாடி இருக்கலாம்! ஆனால், ஆட்ட முடிவில் அச்சாதனையை நிகழ்த்திய உணர்வே எனக்கு ஏற்படவில்லை” என அவ் வீரமங்கை மிக நிதானமாகக் குறிப்பிட்டார்! அவர் மேலும் குறிப்பிடும் போதுஞ் “உலகக் கோப்பையில் இச்சாதனை நடந்திருப்பதால் அதற்கு சிறப்பு கிடைக்கிறது” என்று மிக எளிதாக அவ்வீராங்கனை குறிப்பிட்டார்! அவர் அத்தோடு நிற்காமல்“அணி வெற்றி பெறாத நியையில் தனி நபர் சாதனையின் ஆட்டம் ஒரு பொருட்டல்ல” எனக் குறிப்பிட்ட வீரமங்கை மிதாலிராஜ் ஓர் அற்புதமான பண்புடையவர்!

தமிழராய் வாழ்வது எனக்குப் பெருமை:

வீரமங்கை மிதாலிராஜை விமர்சித்த தம் ரசிகரைப் பார்த்து “தமிழராய் வாழ்வது எனக்குப் பெருமை! அதேசமயம், நான் ஓர் இந்தியன் என்பதையும் கர்வத்துடன் கூறுவேன்” என்று உறுதியுடன் கூறினார்.
இந்தியக் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் டெண்டுல்கர் “20 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சர்வதேச போட்டிகளில் சாதனைப் படைத்து வரும் மிதாலிராஜிற்கு வாழ்த்துகள்” என்று ட்விட்டரில் பாராட்டைத் தெரிவித்தார்! அதற்கு வீரமங்கை மிதாலிராஜ் “என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி! நன்றி சாம்பியன்!” என்று மிதாலிராஜ் ட்விட்டரில் பதில் கூறியிருந்தார்.

இறுதிஆட்டம்:

வீரப்பெண் மிதாலிராஜ் இறுதியாக இந்திய அணிக்காக தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 2022 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் 68 ரன்கள் எடுத்தார். நம் வீராங்கனை மிதாலிராஜின் கடைசி ஆட்டம் அதுதான்! மெய்தான்! மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் ‘வரலாறாய் மாறிய மங்கைதான்!