வாழ்க்கைப் பயணத்தில் எந்த வயதில் வேண்டுமானாலும் லட்சியத்தை மாற்றிக் கொண்டு, அதில் வெற்றிபெற முடியும் என்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் நந்தினி பிரியா. தனது 10 ஆண்டு ஐஏஎஸ் கனவு தோல்வி அடைந்தபோதும், துவண்டு விடாமல் வெற்றிகரமான தொழில்முனைவோராகி இப்போது பல பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறார்.
ஒரு தொழிலில் வெற்றி பெற, அத்தொழில் சார்ந்த பெற்றோர் குடும்பத்தில்தான் ஒருவர் வளர வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருந்தாலும், தானும் சாதித்து, தன்னைப் போல் வளர்ந்து வருபவர்களையும் கைத்தூக்கிவிட முடியும் என்பதற்கு ‘Yeka’ நிறுவன தலைவர் நந்தினி பிரியா நல்லதொரு சான்று. இனி அவர் கூறிதிலிருந்து…
“நான், ஐஏஎஸ் அதிகாரிகள் நிறையப் உள்ள குடும்பத்தில் பிறந்தவள். அதனாலேயே சிறு வயது முதல் எனக்கும் ஐஏஎஸ் கனவு இருந்தது. கூடவே வழக்கறிஞர் ஆசையும் இருந்ததால், பி.எல் முடித்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாரானேன். சுமார் பத்தாண்டுகள் அதற்காகச் செலவழித்தேன். பல முறை இறுதித் தேர்வு வரைச் சென்று தோல்வி அடைந்திருக்கிறேன். ஒருமுறை ஐஆர்எஸ் பணி கிடைத்தது. ஆனால் அப்போது போடப்பட்ட திடீர் நீதிமன்ற உத்தரவால் ஒரு சில நாட்களிலேயே அந்தப் பதவியை இழந்தேன். வயது 35 ஆன போதுதான், இனி ஐஏஎஸ் எனக்கான பாதை இது இல்லை என முடிவு செய்தேன்.
எனது பத்தாண்டு அனுபவத்தில், சில ஆண்டுகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தேன். ஆனால் அதிலும் மனநிறைவு ஏற்படவில்லை. பெண்கள் முன்னேற்றத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் எனக்குள் சிறுவயது முதலே இருந்தது. அதற்கு ஒரு களமாகத்தான் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது முடியாமல் போன போது, வேறு எந்த வழியில் அதனைச் சாத்தியப்படுத்தலாம் என யோசித்தேன். தொழில்முனைவோர் ஆவது தான் அதற்கான ஒரு வழி என முடிவு செய்தேன். இப்படித்தான் என் 35வது வயதில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினேன்” என தன் ஆரம்பகால வாழ்க்கை குறித்து கூறுகிறார் நந்தினி பிரியா.
தொழில்முனைவோர் ஆக வேண்டும் என முடிவு செய்ததும் நந்தினி தேர்வு செய்தது, இயற்கையான முறையில் சருமப் பராமரிப்பு மற்றும் தலைமுடிப் பராமரிப்பு பொருட்களைத் தயார் செய்து விற்பனை செய்வதைத்தான். மக்கள் மறந்து போன நமது பாரம்பரிய முறைகளை மீட்டெடுத்து மீண்டும், அதனை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து, அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். நந்தினியின் நண்பர்கள் சிலர் சித்த மருத்துவர்களாக இருந்ததால், அவர்களது உதவியுடன் தனது ஹேர் ஆயில் ஆராய்ச்சியை ஆரம்பித்திருக்கிறார். ஓராண்டு ஆர் அன்ட் டி செய்ய செலவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் உதவியோடு 2017ம் ஆண்டு பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் ’Yeka’ (Yeka herbal cosmetics & Araah Skin Miracles) நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
முதற்கட்டமாக முருங்கைக்கீரை, அரைக்கீரை என ஆறு கீரை வகைகளைக் கொண்டு தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யை தயாரித்துள்ளார் நந்தினி. அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அடுத்ததாக ஆவாரம்பூ சோப், கோல்டன் பேஸ்பேக் பவுடர் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
“ஆறு ஆண்டுகளாகிறது இந்தத் தொழிலை ஆரம்பித்து, கெமிக்கல் இல்லாத பொருட்களாகத் தர வேண்டும் என்ற கொள்கையில் எங்கள் பொருட்களை வியாபாரம் செய்கிறோம். சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சிக்காக டெல்லி சென்றபோது அறிமுகமான பூரணி மற்றும் ஹைமாவதி இருவரும் இப்போது என்னுடன் ஏகாவில் உள்ளனர். எங்களது ஒவ்வொரு தயாரிப்பும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, முறையான ஆய்வுகளுக்குப் பிறகே அவற்றைத் தயாரிக்கிறோம். தரமான பொருட்களாக பார்த்து மட்டுமே பயன்படுத்துகிறோம். அதுவே குறுகிய காலத்தில் எங்களது நிறுவனம் வளர முக்கியக் காரணம்,” என்கிறார் நந்தினி.
ஆரம்பத்தில் முதலீடு செய்த பத்து லட்சம் தவிர, அவ்வப்போது தொழில் முன்னேற்றத்திற்காக சில லட்சங்களாக முதலீடு செய்தது என இப்போதுவரை சுமார் ஒரு கோடி ரூபாய் இந்தத் தொழிலில் முதலீடு செய்திருக்கிறார்.
”ஆண்டுக்கு சுமார் ரூ.2 கோடி டர்ன் ஓவர் செய்வதாக கூறும் நந்தினி, தனது நிறுவன வளர்ச்சியில் சமூக வலைதளத்தின் பங்கு இன்றியமையாதது என்கிறார். தற்போது தனது 90% வியாபாரம் இன்ஸ்டாகிராம் மூலம் தான் நடக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
“ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் பற்றிய விழிப்புணர்வு எனக்கு இல்லை. நல்ல பொருட்கள் தயாரித்தால், மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்வார்கள் என நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. முதலில் நமது பொருட்களின் தரத்தை நாம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என தாமதமாகப் புரிந்து கொண்டேன். பின் மார்க்கெட்டிங் பற்றிய நிறைய கற்றுக் கொண்டேன். அதன் பலனாக மூன்றே மாதத்தில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சோசியல் மீடியாக்களை மார்க்கெட்டிங் களமாகப் பயன்படுத்திக் கொண்டேன்” என்கிறவர், தொழிலில் வெற்றிபெறுவது அவ்வளவு எளிதானதல்ல என்கிறார்.
ஆம்! தொழில் நுணிக்கங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் ஏகப்பட்ட சறுக்கல்களைச் சந்தித்திருக்கிறார் நந்தினி. நன்கு படித்து மாதச் சம்பளம் பெறும் அரசு பணிகளில் வேலை பார்ப்பவர்கள் நிறைந்த குடும்பம் என்பதால், ‘இதெல்லாம் உனக்குத் தேவையா?’ என்ற எதிர்ப்புக் குரல்கள் வீட்டுக்குள்ளேயே அதிகம் இருந்திருக்கிறது. பேசாமல் ஏதாவது அரசுப் பணிக்கான தேர்வை எழுதி, அரசு வேலைக்கு செல்லும்படியான அறிவுரைகளையும் எதிர்கொண்டிருக்கிறார். ஆனாலும் நந்தினி மனம் தளரவில்லை.
“இந்தத் தொழில் எனக்குச் சரிப்பட்டு வராதோ என நானே பின்வாங்க நினைத்த நாட்களும் உண்டு. ஆனால் அப்போது எனக்கு நம்பிக்கை அளித்தவர்கள் என் வாடிக்கையாளர்கள்தான். இது வேண்டாம் விட்டு விடலாம் என நான் நினைக்கின்ற நேரத்தில், சரியாக யாராவது ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து போன் வரும். உங்களது தயாரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு மீண்டும் அதே மாதிரியான பொருட்கள் வேண்டும் எனக் கூறுவார்கள். அவர்களின் அந்த வார்த்தைகள் எனக்குள் மீண்டும் நம்பிக்கையை விதைக்கும். இந்தத் தொழிலை விட்டு போய்விடக் கூடாது என மீண்டும் கடினமாக உழைக்கத் தொடங்குவேன். இப்படித்தான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறேன்,” எனக் கூறுகிறார் நந்தினி.
தான் வளர்ந்தால் மட்டும் போதாது, தன்னைச் சுற்றியுள்ள பெண்களையும் வளர்த்து விடும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் நந்தினி. திருமணம், குழந்தைகள் எனப் பல்வேறு காரணங்களால் தங்களது வேலையைத் தொடர முடியாத பெண்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதியைச் செய்து கொடுத்துள்ளார் நந்தினி. அதோடு, தன் துறையில் புதிதாக வரும் சிறு பெண் தொழில்முனைவோர்களையும், தனக்குப் போட்டியாக நினைக்காமல் அவர்களுக்குத் தேவையான தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறார்.
2017பெண் அசோசியேசன்ஸ் என்ற பெயரில் சிறுகுறு பெண் தொழில் முனைவோர்களுக்கு என ஒரு அசோசியேசன்ஸ் ஆரம்பித்து, வாட்சப் மூலம் அவர்களை ஒருங்கிணைத்துள்ளார். இந்த குரூப்பில் சுமார் 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தும் வருகிறார்.
“இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு உள்ளனர். தற்போது 70க்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரிக்கிறோம். வெறும் ஏழு பேராடு ஆரம்பிக்கப்பட்ட எங்களது நிறுவனத்தில் இப்போது 60 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களே. பெண்கள் எப்போதுமே பொருளாதார ரீதியாகச் சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டும். பணத் தேவைக்காக இல்லாவிட்டாலும்கூட, தனக்கான அடையாளத்திற்காகவாவது பெண்கள் ஏதாவது ஒரு துறையில் அல்லது கலையில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கை வளரும். தனக்கான பிரச்சினைகளைத் தட்டிக் கேட்கிற தைரியம் கிடைக்கும். எந்தவொரு முடிவையும் சுதந்திரமாக எடுக்க முடியும். இதைத்தான் நான் கவுன்சிலிங் தரும் பெண்களுக்குத் திரும்ப திரும்ப வலியுறுத்துவேன்” என்கிறார் நந்தினி.