இவர் படித்தது எம்.ஏ ஜர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேஷன். திரைத்துறையில் இளையராஜா உட்பட பல இசை அமைப்பாளர்களிடம் சவுண்ட் இஞ்சினியராக பணியாற்றியவர் இவரது கணவர் சுதாகர். சவுண்ட் இஞ்சினியர் என்றால் கேட்க வேண்டுமா, இவர் வீட்டுக்கு வருவது என்பதற்கு நேரம் காலம் என்கிற வரையறையே கிடையாது. அவ்வாறான தருணத்தில்தான், புது மணப்பெண்ணான அன்பரசிக்குத் தனது நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.
கணவரின் சம்மதத்துடன், அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட மல்டி மீடியாவைப் படிக்க ஆரம்பித்தார். பின்னர் தான் படித்த மல்டி மீடியாவை வகுப்பு எடுப்பதன் மூலம் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி, கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தார். கல்லூரியில் கற்றுக் கொடுப்பது என்பதற்கு மாணவர்களுக்கு மிக குறுகிய காலமே ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் இவருக்கு உடன்பாடு இல்லை என்கிற காரணத்தினால், தனியாக ஒரு இன்ஸ்டிடியூட் ஆரம்பித்து மல்டி மீடியாவைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால், செய்தி இதுவல்ல. அதே அன்பரசி சுதாகர் இப்போது, இலண்டன் மாநகரத்தின் அருகில் உள்ள ரேவன்ஸ் ஐட் (Ravens Ait) தீவில், ஃபார் யூ ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் (4you hospitality services limited) முழுப்பொறுப்பையும் ஏற்று நிருவகிக்கும் செயல் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இனி அவரிடமே கேட்போம்…
“எங்களுடைய மகன் தனிகைவேல் தர்ஷன் பி.எஸ்.சி, பிஸ்னஸ் அனாலிக்டிக்ஸ் (business analytics) படிப்பதற்காக இங்கு (இலண்டன்) வந்தான். அப்போது கொரோனா காலம் என்பதால், எங்களுடைய அனிமேஷன் தொழிலை சென்னை வீட்டிலிருந்தபடியே செய்து கொடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது, மகனைப் பார்ப்பதற்காக நானும் என்னுடைய கணவர் சுதாகரும் இலண்டன் வந்தோம். இலண்டனில் இருந்து எங்களுடைய தொழிலை ஆன்லைன் வழியாக செய்துகொடுத்தோம். இப்போதும் அதே குழு ஆன்லைன் வழியாக தொழிலை செய்துகொண்டிருக்கிறோம்.
ஒரு நாள் எங்கள் குடும்ப நண்பர் திரு. சுந்தரபரிபூரணன் அவர்களைப் பார்க்க சென்றோம். அவர் “ உங்க பையன் லண்டன்ல படிக்கிறான். நீங்க இங்க அனிமேஷன் சார்ந்த பணியை ஓர்க் ஃபிரம் கோம் அடிப்படையிலதான் செஞ்சிட்டிருக்கீங்க. இதே பணியை அங்கேபோய் உங்க பையனோட தங்கிருந்து செய்யுங்கன்னு” சொன்னார். நாங்க… அங்கபோய் என்ன பண்றதுன்னு தயங்கினோம். உடனே அவர் “ எனக்கு லண்டன்ல 2 ஏக்கர்ல உள்ள ரேவன்ஸ் ஐட் (Ravens Ait) தீவுல ‘ ஃபார் யூ ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீஸ் லிமிடெட்’ நிறுவனம் இருக்குது. அங்கே சென்று நிறுவனத்தின் பொறுப்புகளை எடுத்து சிறப்பா செய்யுங்க. உங்க பையனோட தங்கி இருந்த மாதிரியும் ஆச்சு. லண்டன்ல பணியாற்றிய திருப்தியும் கிடைக்கும்“ என்றார். அவர் சொன்னதும் எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காரணம், லண்டன் கலாச்சாரம், மொழி, கிளைமேட் இதெல்லாம் நமக்கு ஒத்துவருமா? நம்மால அங்க பணியாற்ற முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. மீண்டும் அவரே சொன்னார் “ தயங்காதீங்க. உங்களுக்கு வேலை மீது உள்ள அர்ப்பணிப்பு பற்றி எனக்கு நல்ல தெரியும். உங்களால் இந்தப் பணியை எளிதாக செய்ய முடியும்.” என்று தன்னம்பிக்கை கொடுத்தார். பின்னர், நானும் என் கணவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். ஒரே பையன் அவனுடன் இருப்பது நல்ல விஷயம்தானே… என்று நிருவாகப் பொறுப்பை ஏற்று செயல்பட ஒப்புக்கொண்டோம்.
கடந்த ஒரு ஆண்டாக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய நிறுவனத்தின் முக்கியப் பணியே விருந்தோம்பல் (hospitality) பணிதான். எங்கள் நிறுவனம் இலண்டன் அருகில் உள்ள ‘ரேவள்ஸ் ஐட்’ என்ற தீவில்தான் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான விருந்தோம்பல் என்று சொல்லப்படுகிற ஈவன்ட் தொழிலை நடத்தி வருகிறோம். இந்தத் தீவு இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இலண்டனில் வசிக்கும் முக்கியமான தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களுடைய சுபகாரியங்களான திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள்,ஒளி மற்றும் காற்றோட்டமான வரவேற்பு நிகழ்வுகள், பிறந்தநாள் விழாக்கள், தொழில்முறை கூட்டங்கள், ஆண்டு முழுவதும் குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாக்கள், பார்பிக்யூ மற்றும் பீர் திருவிழா என பல நிகழ்வுகளை நடத்தித் தரச்சொல்லி பிஸ்னஸ் கொடுப்பார்கள். எங்களுடைய நிறுவனம் அதை சிறப்பாக செய்து தருகிறது.
இந்தத் தீவில் என்னென்ன சிறப்புகள் உள்ளன. அவற்றை நாங்கள் எப்படி கையாளுகிறோம் என்பதையும் சொல்லிவிடுகிறேன். ரேவன்ஸ் ஐட் என்கிற தீவு லண்டன் மற்றும் ஹீத்ரோவிற்கு எளிதில் சென்றடையக்கூடிய வகையில் உள்ளது. கிங்ஸ்டன் அபான் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள அனைத்து விதமான சிலிர்ப்பூட்டும் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற இடமாகும். குறிப்பாக திருமணம் அல்லது வித்தியாசமான மாநாட்டை நடத்தலாம்.
இரண்டாவதாக இந்தத் தீவின் மிகப்பெரிய இடம் மார்க்யூ மற்றும் புல்வெளிகள் இது தேம்ஸ் நதி மற்றும் ஹாம்ப்டன் கோர்ட் பூங்காவின் அழகான காட்சிகளை கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும். இது, வாடிக்கையாளர் விரும்பும் எந்த சூழலையும் உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சிறந்த இடமாக இருக்கும். இது பிரகாசமான மற்றும் விசாலமானது, கோடை விருந்துகள், திருமண வரவேற்புகள், மாநாடுகள் அல்லது விருது விழாக்களுக்கு ஏற்றது. மூன்றாவதாக பிரிட்டானியா சூட் மற்றும் மொட்டை மாடி இடத்தைச் சொல்லலாம். இந்த இடம் பிரிட்டானியா சூட் இரண்டு பக்கங்களிலிருந்தும் தேம்ஸின் காட்சிகள் மற்றும் ஹாம்ப்டன் கோர்ட் மைதானத்தை கண்டும் காணாத ஒரு மொட்டை மாடியுடன் கூடிய தனித்துவ கட்டிடத்தில் அமைந்துள்ளது. கூட்டங்கள், தனிப்பட்ட விருந்தோம்பல் நிகழ்வுகள் மற்றும் பிறந்தநாள் விழாக்களுக்கு ஏற்ற இடம். நான்காவதாக தேம்ஸ் சூட். இது அருகில் உள்ள சூட்களில் ஒன்றாகும். இது கூட்டங்களுக்கான பிரேக்-அவுட் அறையாக, விருந்துக்கு முன் கேனப்கள் மற்றும் பானங்களுக்கான இடமாக அல்லது நெருக்கமான கூட்டங்களுக்கான பரந்துபட்ட இடமாகவும் பயன்படுத்தப்படலாம்.
மற்றப்படி இங்கே எந்த நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவைப் போல் விருந்தோம்பல் முறை அமைவதில்லை. ஒரு டேபிளில் எத்தனைபேர் புக் செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கு மட்டும் ஃபுட் கொடுத்தால் போதுமானது. ஆனால், அந்த வாடிக்கையாளர் என்ன ஃபுட் விரும்பி சாப்பிடுவார். அவருக்கு அலர்சி ஃபுட் என்று ஏதாவது இருக்கிறதா? என முன்கூட்டியே தெரிந்துகொண்டு சப்ளை செய்ய வேண்டும். 100 பேருக்கான உணவு என்றால், அந்த உணவு மட்டுமே தயாராகும். கூடுதலாக ஒரு நபருக்கு கூட தயாரிக்கவேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் நிறுவனம் முழுக்க முழுக்க இலண்டன் பணியாளர்களையே பயன்படுத்துகிறோம். மொழிப் பிரச்சனை சிறிய அளவில் இருக்கும் மற்றபடி சொன்ன வேலையை சிறப்பாக செய்து கொடுத்துவிடுவார்கள். கடந்த ஒராண்டாக நானும் என் கணவரும் இந்த விரும்தோம்பல் தொழிலை சிறப்பாக செய்து கொடுக்கிறோம். ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் போதும் எந்த நாட்டிலும்….எந்த சூழ்நிலையும்… எந்தத் தொழிலையும் சிறப்பாக செய்ய முடியும். எனக்கு அனிமேஷன் தொழில்தான் வரும் என்று இருந்தால், இலண்டனில் இப்படியொரு தொழிலில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதனால், நம்பிக்கையிருந்தால் பெண்கள் எந்தத் தொழிலிலும் வெற்றி பெறலாம்.
இப்போது, என்னுடைய மகன் படித்துக்கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறார். அவருடைய படிப்பு முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் உள்ளன. படிப்பு முடிந்தவுடன் அவர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் இந்தியா வருவது பற்றி சிந்திப்போம்“ என்கிறார் அன்பரசி சுதாகர். அவருடைய அனிமேஷன் தொழில் பற்றி பிளாஷ்பேக் கேட்டபோது…..
“உண்மையில் என்னுடைய மல்டி மீடியா தொழில் நீண்ட நெடும் பயணம் இல்லை என்றாலும், மிக இனிதான பயணம். மீடியாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் ஆர்வம் வேண்டும். அந்த ஆர்வம் என்னிடம் இருந்தது, எனவேதான் மல்டி மீடியாவின் அனைத்துத் துறையிலும் என்னால் கவனம் செலுத்திப் படிக்க முடிந்தது. இதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க கல்லூரிக்கு சென்றபோது, அவர்களது ஆர்வத்துக்கு தகுந்த மாதிரியான நேரம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது எனக்கு ஒரு குறைபாடாகவே இருந்தது. ‘செய்வான திருந்த செய்’ என்பார்கள். அதனால் நான் தனியாக இன்ஸ்டிடியூஷன் ஆரம்பித்தேன். அப்போது தடுக்கி விழுந்தால் மல்டி மீடியா இன்ஸ்டிட்யூஷன் இருக்கும். இதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. காரணம் என்மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை. நன்றாக கற்றுக் கொடுப்பேன், அதே சமயம் இந்த திறமை மூலம் நான் நிலைத்து நிற்பேன் என்று நம்பினேன். எனவே, மற்றவர்கள் வாங்கும் பணத்தை விட பாதி அளவு கம்மியாகவே பணம் வாங்குவேன். சில சமயம் எனது இந்த செயல்பாடுகளைக் கண்டு, மற்றவர்கள் போல நான் சரியாக சொல்லித் தர மாட்டேனோ என்று கூட சிலர் சந்தேகப்பட்டதுண்டு. அவர்களின் சந்தேகம் எனக்குத் தெரிந்தால் தீர்த்து வைப்பேன், அதற்காக குறைந்த பணம் வாங்குவது என்கிற எனது கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன். இரண்டு பேருக்கு அல்லது ஒருவருக்கு, ஒருவர்தான் கிளாஸ் எடுக்க வேண்டும் என்கிற எனது கொள்கையையும் மாற்றிக் கொள்ளமாட்டேன்.அப்படி வளர்ந்ததுதான் எனது இன்ஸ்டிடியூட். ஒரு விளம்பரமும் நான் செய்து கொண்டதில்லை.
எனது இன்ஸ்டியூட்டில் படித்த ஒருவர் வேலைக்கு அமெரிக்கா சென்றார். ரொம்ப நாள் கழித்து அவர் சென்னை திரும்பிய போது, என்னைப் பார்க்க வந்தார். வந்தவர் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியையும் தந்தார். அது எனது அடுத்தக் கட்ட பரிமாணமாக அமைந்ததென்றும் சொல்லாம். அவர் தந்த அதிர்ச்சி யாதெனில், ஒரு கம்பனி தயாரிப்புக்கு என்னை அனிமேஷன் செய்து தர சொன்னார். முதலில் எனக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும் சவாலை ஏற்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்க்கலாமே என்று ஒகே சொன்னேன். அதே போன்று செய்தும் கொடுத்தேன். மிக நன்றாக வந்து இருக்கிறது என்று அந்த நிறுவனம் பாராட்டியது. இதை என் கணவர் சுதாகரிடம் மகிழ்ச்சியாக சொன்ன போது, அவர் மிக கூலாக உன்னால முடியாமல் எப்படிப் போகும் என்று சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்படித்தான் எனது அனிமேஷன் தொழில் ஒரு புறம் வளர்ந்தது” என்கிறார். இவருடைய கணவர் சுதாகர் மிக சிறந்த மனிதர் என்பதோடு, மிக சிறந்த சவுண்ட் எஞ்சினியர். இவரைத் தெரியாத இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் இல்லையெனலாம். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான 1000 பாடல்களுக்கு மேலான இசையில் இவர்தான் சவுண்ட் இஞ்சினியர். வெளிநாடு சென்றாலும் இவரை விடுவதில்லையாம் இசை ஞானி. மனிதர் மிக அமைதி, சாந்தம். சமீபத்தில் இவரை விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சந்தித்த மால்குடி சுபா, சின்னக் குயில் சித்ரா, மனோ முதலானவர்கள் தங்களது முதல் பாடல் பதிவு அனுபவத்தில் சுதாகர் பங்கு அலாதியானது என்று பாராட்டிப் பேசியது இவரது திறமைக்கு கிடைத்த மரியாதை.
திருமதி அன்பரசி சுதாகர், மாயா மென் தொழில் நுட்பம் பற்றி தமிழில் ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார். திறமைசாலிகள் கண்டெடுக்கப்படுவதில்லை, அதேபோன்று உருவாக்கப்படுவதும் இல்லை. தங்களது திறமையை நிரூபித்ததன் மூலம் மற்றவர்களால் அடையாளம் காணப்படுகிறார்கள். இது கால நகர்வில் தன்னிச்சையாக நடப்பது. அன்பரசி – சுதாகர் தம்பதியர் அதற்கு நல்லதோர் சான்று. (+44-7775588760)